பக்கம் எண் :

200

             காப்புப் பருவம்

        நின்றஊர்ப் பூசல் அன்பன்
            நெடிதுநாள் நினைந்து செய்த
        நன்றுநீ டால யத்து
            நாளைநாம் புகுவோம் நீஇங்
        கொன்றிய செயலை நாளை
            ஒழிந்துபின் கொள்வாய் என்று
        கொன்றைவார் அடையார் தொண்டர்
            கோயில் கொண்டருளப் போனார்.

என்று கூறினார்.

    இதனை நன்கு உணர்ந்த காரணத்தால்  “ மன்னிய சடைப் பரமர் பிறதளி மறுத்து அடைவிதம் கண்டு “  எனப்பட்டது. 

    இறைவர், பூசலார் ஆலயத்தில் புகுவோம் என்று காடவர் கோனுக்கு அருள் செய்த திறத்தை நாயனார் கேட்டு உள்ளம் மருண்டு பின் இறைவர் திருவருளை வியந்து, என்னையோர் பொருளாக் கொண்டே தாம் கட்டிய மனக்கோயிலில் இருக்க வந்தமையின் பெருமகிழ்வு கொண்டனர் ஆதலின்  “ உவந்த பூசல்”் என்றனர்.

    பூசலார் பேரறிஞர்.  அவர் அறிவைப் புலப்படுத்த பல காரணம் கூறலாம்.  ஒன்று ஆலயம் கட்ட பொருள்  தேடியும்  பொருள் கிடைக்காதபோது மனத்தால் கட்ட முடிவு செய்தது.  இதனைச் சேக்கிழார் நன்கு,

        மனத்தினில் கருதி எங்கும்
            மாநிதி வருந்தித் தேடி
        எனைத்தும்ஓர் பொருட்பே றின்றி
            என்செய்கேன் என்று நைவார்
        நினைப்பினால் எடுக்க நேர்ந்து
            நிகழ்வுறும் நிதியம் எல்லாம்
        தினத்துணை முதலாத் தேடிச்
            சிந்தையால் திரட்டிக் கொண்டார்.

என்று பாடியுள்ளனர்.