பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

285

குன்றத்தூரில் உள்ள கோயிலாகும்.  சேக்கிழார் பெருமானார் குன்றத்தூரில் திருநாகேச்சுரத் தலத்தை ஏற்படுத்தினமையைச் சேக்கிழார் புராணம்,

        தம்பதிகுன் றத்தூரின் மடவளாகம்
            தனாக்கித் திருக்கோயில் தாபித் தங்கண்
        செம்பியர்கோன் திருநாகே சுரம்போல் ஈதும்
            திருநாகே சுரம்எனவே திருப்பேர் சாற்றி
        அம்புவியில் அங்கங்க வைப வங்கட்
            கானபரி கலம்திருநாள் பூசை கற்பித்
        இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச் செங்கோல்
            இமசேது பரிபந்தம் இயற்றும் நாளில்

என்று கூறுகிறது.  இந்தக் குறிப்பே ஈண்டு “ இயல் நாகேசன் வைகுதலால்” என்ற தொடரால் விளங்குகிறது.

    குன்றத்தூர் எல்லா நலன்களும் பெற்றுத் திகழ்தலின், இதனைத் திருமகளும் விரும்புகின்றான் என்பதனை,  ‘திருமடந்தை காமுற்றிடலால்’ என்றனர்.  குன்றத்தூரில் உள்ள மாட மாளிகைகள் உயர்ந்து ஆகாயத்தை அளாவி நின்றன.  அங்ஙனம் உயர்ந்து இருந்தமையின் மேகம், அம்மாளிகைகளில் தவழ்ந்தவண்ணம் இருந்தது.  இதுவே ஈண்டு “கருமால் (கருமேகம்) கிடந்து கண்துயிலும்” என்ற தொடரால் விளங்கும் பொருள்.  இதுவரைக் கூறப்பட்ட குன்றத்தூர் சிறப்புத் திருப்பாற் கடலுக்கு ஒத்தாக இருத்தலின், குன்றத்தூர் திருப்பாற் கடலுக்கு ஒப்பானது என்பது திரு பிள்ளையவர்களின் கருத்தாகும்.  ஆகவே, இப்பாடல் சிலேடை அணியைப் பெற்றது.  திருப்பாற் கடலைக் குறிக்கும்போது சொற்களுக்குரிய பொருள் வேறாகும்.  அரமுழக்கம், அலை ஒசையாகும்.  புலவர் என்பார் தேவர் ஆவார்.  அமுது என்பது தேவாமுதம் ஆகும்.  அரம்பை என்பது ரம்பை என்பாளைக் குறிக்கும், அல்லது ரம்பை முதலான தேவ மாதரை குறிக்கும்.  நாகேசன் ஆதிசேடனாவான்.  மால் திருமாலாகி விடுவார்.