பக்கம் எண் :

336

             தாலப் பருவம்

    தாப்பிசை பொருள் கோள் என்பது,

        இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும்
        நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை

    அதாவது இடையில் உள்ள சொல் முன்னும் பின்னும் இயைந்து பொருள் தந்து நிற்றலாம்.

    “அரசிளம் குமரற்கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்” என்னும் அடியில் இடை நின்ற “அன்பினால்” என்னும் சொல் அன்பினால் அரசிளம் குமரற்கேற்ப என்றும், “அன்பினால் மகன்மை கொண்டார்” என்றும் தாப்பிசைப் பொருள்கோளுக்கு  ஏற்ற முறையில் பொருள் கொள்ளும் நிலையில் இருப்பதைக் காண்க.

    செய்யுள் இறுதி மொழி இடை முதலினும்
    எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே

என்பது.

    அதாவது செய்யுளின் ஈற்றில் நின்ற மொழி இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்வதாகும்.

        இசைவினால் எழுதும்ஓலை காட்டினான்
            ஆகில் இன்று         
        விசையினால் வலிய வாங்கிக்            
            கிழிப்பது வெற்றி ஆமோ         
        தசையெலாம் ஒடுங்க மூத்தான்
            வழக்கினைச் சாரச் சொன்னான்
        அசைவில்ஆ ரூரர்எண்ணம்
            என்என்றார் அவையில் மிக்கார்

என்ற பாட்டில் அவையில் மிக்கார் என்னும் ஈற்றுத் தெடரைக் கொண்டு, “தசையெலாம்” என்னும் இடையிலுள்ள தொடருடன் இயைத்துப் பின் “இசைவினால்”  என்னும் முதல் அடியினுடன் இணைத்துப் பின் என் என்றார்  என்பதுடன் முடிந்து பொருள் தரும் நிலையில் உள்ளமையின் இஃது அளைமறிபாப்புப் பொருள் கோள் ஆயிற்று.