போன்றதே ஈண்டும்,
“கற்பம் கழுத்து ஓடிய வாளைபாய” என்பதும். பொய்கைகளில் மேதி பாய்வதும் நீர் வளத்தின் மாட்சியே
ஆகும். “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்று என்று வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே”
என்பர் கம்பர். இங்கு, “பொய்கைகரு மேதிபாய” என்றனர். தொண்டை நாட்டின் வளத்திற்குப்
பாலாறு காரணமாதலை உமாபதி சிவனார், “பாலாறு வளஞ்சுரந்து நல்கமல்கும் பாளை விரிமணம் கமழ்பூஞ்
சோலை தோறும், காலாறு கோலி இசை பாட நீடும் களிமயில் நின்றாடும் இயல் தொண்டை நாடு” என்பர்.
இங்கு, “பாலாறு காலாறு பாய்தொண்டை நன்னாடு” எனப்பட்டது. சேக்கிழார் பெருமானார் பாடிய பெரிய
புராணத்தைக் கேட்க யாவரும் வருக என ஓலை போக்கினர். இங்ஙனம் ஓலை போக்கிய முறையை உமாபதியார்,” கதை
கேட்பதற்கு அண்டவாணர் அடியார் எல்லாம் கடுக வருக என்றுதிசை திசைதொறும் எண்தயங்கு அரசன் ஏடு
எடுத்து எழிதி ஆளும் ஓலைகளும் ஏவினான்” என்றனர். அதுபோது, சிவ சமயத்தவர் யாவரும் திரண்டனர்.
அவர்கள் திரண்டதோடு இன்றி,
பாடினர் தும்புரு நாரதர்
நீடிசை பாடாநின்று
ஆடினர் வானில் அரம்பையர்
அஞ்சலி எஞ்சாமல்
சூடினர் மண்ணின் மடந்தையர்
எந்தை துணைப்பாதம்
தேடினர் மாலயன் அன்பர்
நடம்தரி சித்தார்கள்
என்று பாடி இருப்பதால்,
இவர் புகழ் மண்ணுலகே அன்றி விண்ணுலகு அளவும் சென்றது என்பது தெரிகிறது. இது குறித்தே,
“பரவுசீர் உலகெலாம் விரவு சேவையர் பிரான்” எனப்பட்டார். “பாய” என்னும் சொல்
பலமுறை வருதலின், அது சொல்பின் வருநிலை அணி. வானளாவ வாளை பாய்ந்தது என்பது உயர்வு
நவிற்சி அணியாகும்.
(47)