பக்கம் எண் :

New Page 1

520

             வாரானைப் பருவம்

    “கார்க்கோள் கொடிமுல்லை குருந்தம்ஏறிக் கருந்தேன்
                                             ( மொய்த்து
     ஆர்க்கும் பழையனூர்” என்றும்,

    “பெடை வண்டறையும் பழையனூர்” என்றும்,

    “பிள்ளையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல்
                                          ( சேர்ந்து
     அணையும் பழையனூர்” என்றும்,

    “தவழும் கொடிமுல்லை புறவம்சேர நறவம்பூத்து
     அவிழும் பழையனூர்” என்றும்,

    “தண் பழையனூர்” என்றும் புகழ்ந்துள்ளனர்.

    “பன்மலர்கள் அவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்” என்று சுந்தரரும் புகழ்ந்துள்ளனர்.  இவற்றை எல்லாம் உட்கொண்டே ஆசிரியர் “நலத்தின் உயரும் பழையனூர்” என்றனர்.

    பழையனூரில் வேளாளர் மிகுதி,  அவர்கள் நீதி நெறியினின்றும் தவறாதவர்கள்.  சொன்ன சொல்லைத் தட்டாதவர்கள்.  வாய்மையின் பொருட்டு உயிரையும் ஈய வல்லவர்கள்.  இப்பாடலில் வணிகனுக்கு வாக்குக் கொடுத்தபடி தீமூட்டி எழுபதின்மர் அதில்மூழ்கி உயிர் விட்டனர்.  பழையனூர் வேளாளர் என்ற சிறப்புக் குறிப்பே உள்ளது.  இவ்வேளாளர் உயிர்விட்ட அக்கினிக் குண்டம் இன்றும் பழையனூரில் உள்ளது.

    வணிகன் ஒருவன் வேற்று மகளிர் இன்பத்தில் ஈடுபட்டதால், கட்டிய மனைவி கண்டித்தனள்.  அத்தொந்தரவால் அவன் அவளை வஞ்சனையால் கொன்றான்.  அப்பழிக்குப் பழிவாங்கப் பேய் வடிவில் உருத்தாங்கிச் சத்திரத்தில் தங்கி இருந்தனள்.  அவ்வழியே வணிகன் சென்றபோது அவனைப் பற்றி, “நீ என்னை இங்குத் தனியே விட்டுப் போவது முறையோ? என்னோடு கூடவே இச்சத்திரத்தில் தங்கிப் பொழுது விடிந்ததும் போக வேண்டும்” என்று தொந்தரவு செய்தாள்.  வணிகன் அவ்வடிவு பேய்வடிவு என்று நன்கு தெரிந்து, அதற்கு இசையான் ஆயினன்.  என்றாலும், பேயாம் நீலி விட்டிலள்.  அவள் அதுபோது அவ்வழியே வந்த வேளாளரிடம் தான் அவன் மனைவி என்றாள்.  தன்னைத் தனியே விட்டுச் செல்வதாகவும் கூறினாள் ;  முறையிட்டாள்.