பக்கம் எண் :

680

             சிறுபறைப் பருவம்

    திருநீற்றின் மாண்பு, ஐந்தெழுத்து மேன்மை, உருத்திராக்கக் குறிப்பு ஆகியவற்றை மேலும் காணவிழைவார் சைவத் திருமுறைகளில் காணவும்.  இவ்வளவு பெருமைகட்கு உரிய இப்பொருள்களின் அருமை பெருமைகளை உணராதவர்கள், பூணாதவர்கள், புகலாதவர்கள் வீணர் என்பதில் ஐயம் இல்லை அன்றோ?

    சீவக சிந்தாமணியில் சிவமணம் கமழவில்லை என்று திரு பிள்ளை அவர்கள் கூறுவதன் கருத்து அவர் சைவசமயத்தின் பால்வைத்த அன்பு காரணத்தாலும், சைவநூல்களினிடத்து அவர் கொண்ட பற்றின் காரணத்தாலும் என்க.

    சிந்தாமணி, சிவமணம் கமழ்தல் இல்லாத சிந்தாமணி என்று கூறுதற்கு இல்லை.  சிவமணம் கமழும் நிலையிலும் சிந்தாமணி காணப்படுகிறது.  சிந்தாமணியில் சிவமணம் கமழும் இடங்கள் உண்டு என்பதைக் கீழ்வரும் தொடர்களில், பாடல்களில் காணவும்.

“ஓடுமுகில் கீறிஒளிர் திங்கள் சிகைவைத்தே
 மாடமது வார்சடைய வள்ளலை ஒக்கும்” என்றும்,

    (வள்ளல் எனத் திருத்தக்க தேவர் சிவபெருமானை வாயாரக் கூறி இருப்பதைக் காணவும்)

    “போகம் ஈன்ற புண்ணியன்” என்றும்.

    (இந்த இடத்தில் பொருள் விளக்கம் செய்த நச்சினார்க்கினியர் போகம் ஈன்ற-தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின புண்ணியன் என்றார், திரிபுரத்தை அழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின்” என்று எழுதி விளக்கியுள்ளனர்)

    “கடிமதில் மூன்றும் எய்த கடவுளில் கனன்று சொன்னான்” என்றும் கூறியிருப்பதைக் காண்க.  இவ் அடியில் கடவுள் என்ற சொல்லைச் சிவபெருமானார்க்கு ஆண்டிருப்பதையும் அறியவும்