பக்கம் எண் :

722

             சிறுதேர்ப் பருவம்

மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகம்பூ மாரி
    மழைபெழியத் திருவீதி வலமாக வரும்போ
திறைவர்திரு அரளைநினைந் தடலரசர் கோமான்
    இதுஅன்றோ நான்செய்த தவப்பயன்என் றிசைத்தான்

என்னும் திருத்தொண்டர் புராணவரலாற்றுப் பாடலில் வரும் “இதுவன்றோ நான் செய்த தவப்பயன்” என்னும் தொடரும் மன்னனது உளக் கருத்தை அறிவித்து நிற்கும்.  அரசன் எடுத்து வீசும் கவரி ஆதலின், அது மணிக்கவரி ஆயிற்று.

    ஈண்டுச் சேக்கிழார் பெருமானார் யானைமீது அமர்ந்து, சோழமன்னன் கவரி வீசப் பவனிவருங்கால், தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இன்னியங்கள் இயம்பின. தில்லை மூவாயிரவர் வேத கீதம்பாடிப் பின் சென்றனர். ஏனையோர் உச்சியில் கூப்பிய கையினராய்ச் சென்றனர். இங்குக் கூறப்பெற்ற அரும்பெருங் காட்சிகள் அனைத்தும் நடந்தன என்பதைச் சேக்கிழார் புராணத்தில் வரும் கீழ்வரும் திருப்பாடல்களாலும் நன்கு தெளியலாம்.

    மின்மழை பெய்ததுமேக ஒழுங்குகள்
        விண்ணவர் கற்பக விரைசேர்பூ
    நன்மழை பெய்தனர் சேவையர்
        காவலர் நாவலர் இன்புற நாவாறச்
    சொன்மழை பெய்தனர் இரவலர் மிடிகெட
        அள்ளி முகந்தெதிர் சோழேசன்
    பொன்மழை பெய்தனன் உருகிய நெஞ்சோடு
        கண்மழை அன்பர் பொழிந்தார்கள்

    மெய்யுள சிவசா தனமும் வெளிப்பட
        வெண்ணீ றெழுதிய கண்ணேறும்
    கையும் திகழ்மணி கண்டமும் ஒளிதரு
        கவளிகை யும்புத் தகஏடும்
    நையும் திருவுளம் அழியும் தொறும்அர
        கரஎனும் நாமமும் நாமெல்லாம்
    உய்யும் படியருள் கருணையும் அழகிதெ
        னத்தொழு தனருல கவரெல்லாம்