பக்கம் எண் :

7

774

             சிறுதேர்ப் பருவம்

7.    புழுங்கும் கதிர்ப்பருதி எழமுறுக் குடைமுகப்
           புண்டரீ கத்த டத்துப்
       பொலிதரச் சூழ்ந்துநிற் கின்றதரு விடபமலர்
           பொழிமது முழுக்க வீழ்ந்தே
       எழுங்குங் குமத்தோள் இணைந்தமுலை யார்கள்கன
           இரதம்அன் றென்று நீங்க
       எறிதிரை கொளும்காலை அளவில்ஓ திமம்ஆங்கண்
           எய்திப் படிந்து துளையா
       வழங்கும் தரத்தவாய் மேல்எழமுன் நீங்கிஓர்
           ஆகம்முழு வதும்ந னைந்தே
       அருமைவெண் முகில்செய்ய தேன்பொழிதல் எனவியந்
           தாகாயம் நோக்கி நிற்கும்
       செழுங்குன்றை அம்பதிச் சேவையர் குலாதிபன்
           சிறுதேர் உருட்டி யருளே
       சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்
           சிறுதேர் உருட்டி யருளே

    [அ. சொ.] புழுங்கும்-வெப்பம் செய்யும், கதிர்-ஒளி பரிதி-சூரியன், முறுக்குடை-முறுக்கு அவிழும், புண்டரீகத் தடம்-தாமரைக் குளம், பொலிதர-விளங்க, தரு-மரங்கள், விடபம்-கொம்பு, கிளை, மது-தேன், குங்குமம்-செஞ்சாந்து, கனவிரதம்-நீர் (கனம்-மேகம், ரதம்-ரசம்) திரை-அலை, ஓதிமம்-அன்னம், எய்தி, அடைந்து, துளையா-குடைந்து நீராடி, தரத்தவாய்-தன்மையுடையதாய், ஆகம்-உடல், முகில்-மேகம் அழுங்கும்-ஆரவாரம் செய்யும்.

    விளக்கம் : தாமரையை முகத்திற்கு உவமை கூறுதல் கவி மரபு ஆதலின், முகப்புண்டரீகம் என்றனர் முகம் போன்றது புண்டரீகம் என்பதை நளவெண்பாவில் அழகுற,

“பொன்னுடைய வாசப் பொகுட்டு மவர்அலைய
 தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய
 பூணாள் திருமுகத்தைப் புண்டரீகம் என்றயிர்த்துக்
 காணா தயர்வானைக் காண்”