பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

87

மாண்பினர்கள் - பெருமைக்கு உரியவர்கள், சாந்த மங்கை - என்பது சாக்கிய நாயனார் வாழ்ந்த ஊர், ஏர் - அழகு, வை - கூரிய, எய்தாதும் - அடைமொழி பொருந்தப் பெறாதும், அறுவர் - சாக்கிய நாயனார், சிறுத் தொண்ட நாயனார், சிறப்புலி நாயனார், கழறிற்றறிவார் நாயனார், கூற்றுவ நாயனார், கண நாத நாயனார், இறுவரை - சாகும்வரை.

    [விளக்கம்] சமணர்கள் பெரிதும் கருநிறம் உடையவர்கள். இதனைத் தேவாரத் திருமறை கொண்டும், பெரிய புராணம் கொண்டும், திருவிளையாடற் புராணம் கொண்டும் மற்றும் பல நூல்களைக் கொண்டும் நன்கு தெளியலாம்.  “ கரியமனச் சமண் “ “ கருகும் உடலார் “  “ கரிபோல் திரிந்து “  என்று திருமுறைகளில் வருதல் காண்க “காரிருண்ட குழாம் போலும் உருவுடைய கார் அமணர்“ என்று பெரிய புராணத்தும், “இடி கெழுகார் போல் குன்றின் இழிந்து“ என்று திருவிளையாடற்புராணத்தும் வருதல் காண்க.  ஆகவே,  “கார் கொண்ட அமணர்“ என்று கூறப்பட்டது.  அன்றி, கார் கொண்ட என்பதருக்கு இருண்ட அறிவு பொருந்திய என்று கூறினும் அமையும்.  கார் என்பதற்கு இருண்ட அறிவு என்னும் பொருள் இருத்தலை,  “ களவு என்னும் கார் அறிவு” என்னும் குறட்கு உரை ஆசிரியர்கள் உரைத்த உரையால் தெரியலாம்.  “களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவு “  என்று பரிமேலழகரும்,  “ பொல்லா அறிவுடைமை “ என மணக்குடவரும் எழுதி இருத்தல் காண்க.

    சிந்தாமணி என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி ஆகும்.  இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர்.  ஐம்பெருங் காப்பியங்கள் என்பன சீவக சிந்தாமணி,  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி குண்டலகேசி என்பன.  சீவகசிந்தாமணியில் அநபாய சோழன் பெரிதும் ஈடுபட்டு, அதனைத் தன்சபையில் பிரசங்கம் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தான்.  இதனைத்