பக்கம் எண் :

260

             செங்கீரைப் பருவம்

    விளக்கம் :  இப்பாடலின் தொடக்கம் இறைவனை அடைதற்குரிய நான்கு மார்க்கங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.  ஆகவே, அந்நான்கு மார்க்கங்களின் தன்மைகளை உணர்தல் முறையாகும்.  அந்நான்கு மார்க்கங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.  இந்நான்கு மார்க்கங்களும் முறையே தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனப்படும்.  இந்த நான்கு மார்க்கங்களும் சிவனை அடையும் நன்மார்க்கங்கள் என்பதை,

    சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
        தாசமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்
    நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
        நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வார்
    சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்ய
        சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம்
    முன்மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி
        முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்

என்ற சிவஞான சித்தியார் திருப்பாடலால் அறியலாம்.

    இப்பாடலால் அவ்வவ் மார்க்கத்தினர் அடையும் முத்தி நிலையும் குறிப்பிட்டிருப்பதையும் உணரலாம்.  இந்நான்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன.  இதனை நன்கு விளக்கவே தாயுமானவரும்,

    “ விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
      அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே “ 

என்று அருளிச் செய்தார்.

    ஆகவே, இந்நான்கு மார்க்கத்தின் பயன் சாலோகம் சமீபம், சாரூபம் சாயுச்சியும் அடைதல் என்பது பெறப்படுகிறது.

    சரியையாவது (தாசமார்க்கம்) இறைவனை ஆகம முறைப்படி வழிபடுவதாகும்.  இதுவே, சரியை என்பது.  திருக்கோயில் திருப்பணி செய்தல், சிவமூர்த்தங்களை வழி