வசனம்.
நந்தனார், தில்லைத்தலத்தைக்
காணாத சென்ம மிருந்தா லென்ன போனாலென்ன
வென்று நிச்சயம்பண்ணி மனதுருகி வாடும்வேளையில்,
கொஞ்சம் நித்திரைபோற்கண்டு
அந்நித்திரையில் அம்பலத்தேவன் வந்துசொல்லுவார்.
ராகம்-காம்போதி;தாளம்-ஆதி.
பல்லவி.
கனவினில் கண்டாரே-நந்தனார்-கனவினில்
கண்டாரே.
அநுபல்லவி.
மனதிலெப்போதும்
வருந்தியடிபணியுங்
கனகசபேசனைக் கண்ணினாற்காணாமல்
(கனவி)
சரணங்கள்.
நீநடுங்கழனிகள் நானடச்சொன்னேன்
ஊனமில்லாமலுன் னுடையவன்களிக்க
மானிடப்பிறவியி லுனக்கிணையார்பத்தி
மானில்லையெனத்தில்லை நாதன்வந்துரைக்கவே
(கனவி)
கங்குல்பகலாய்மனம்
களித்துஉள்ளன்பதனால்
சங்கரனேயென்று சாரும்நிலையதனால்
அங்கம்புளகிதமாய் ஆனந்தித்தேனதனால்
இங்கேவந்தேனென்று யீசனும்புகல. (கனவி)
__________
|