திருநாளைப்போவார்180நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆருமிகழ்ந்துதள்ளும் நாறும்புலையனென்னை
வாரும்பரமபதஞ் சேருமென்றழைத்தது (கனவோ)

கிட்டநெருங்கிவந்து தட்டியெழுப்பியொரு
வெட்டவெளியைக்காட்டிக்கட்டளையிட்டது (கனவோ)

வசனம்.

நந்தனார், தான் கனவில் கண்டதுபோல சுவாமி வருவாரோ வாராரோ வென்று
சஞ்சலப்படுவார்.

ராகம்- சாம  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

வருவாரோ வரந் தருவாரோ-எந்தன்
மனதுசஞ்சலிக்குதையோ யெப்போது (வருவா)

அனுபல்லவி.

திருவாருந்தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்
குருநாதனாகவந்து குறைதீர்க்கக்கனவுகண்டேன்
இருவினைப்பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்
பயப்படாதேயென்று சொல்ல (வருவா)

சரணங்கள்.

மறையாலும்வழுத்தறியா மகிமைபெறுநடராஜன்
நறையூறுஞ்சேவடியை நம்பினவனல்லவோ
அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற
வடிமையென்றருள் புரிந்திடவிங்கே (வருவா)

பணிமார்புஞ்செஞ்சடையும் பார்க்கமனமுவந்து
பணியுங்கோபாலகிருஷ்ணன்துதிபரமதயாநிதி
பவக்கடலடிக்கடி பெருகுதுநிலைக்குமோ
மலைக்குது கரையேற்ற (வருவா)