திருநாளைப்போவார்20நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பெரியபுராணச் செய்யுள்.

விருத்தம்.

திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகண் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினா லொருப்பட்டங் காதனூர் தனினின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர் மருங்கணைந்தார்.

வசனம்.

இப்படி அன்பின்மிகுதியால் சிவலோகநாதனை சேவிப்போமென்று
நெடுநாளாய்ச்சொல்லி நிச்சயஞ்செய்த நந்தனாருக்கும் பறையர்களுக்கு முண்டான
வாக்குவாதம்.

அவர்கள்- தவஞ்செய்யுஞ் சடங்கிதுவல்லவோ
           பறையர்கள் செய்தால் பாவமே யென்றார்.

நந்தன் - தேருந்திருநாளு மிருக்குது போவோம்
          வாரும் வாருமென்று வருந்தியுமழைத்தார்.

அவர்கள்- பொறும்பொறுமிது புண்ணியமல்ல
           ஏரிக்குப் போவோமென் றிவரையு மழைத்தார்
           சேரியை நீங்கிச் சில பேர் வந்தார்
           பதினொருபேர்கள் பண்புடன்வந்தார்.

நந்தன் - மாரிபோல்ஞான மார்க்கம்பொழிந்து
          தவமுனிபோலே தானங்கேநின்றார்.

அவர்கள்- சிவலோகநாதனைச் சேவிப்போமென்றார்.

நந்தன் - வெறுங்கையோடே போகலாகாதென்று
          வாருடன் தோலும் வரிசையாய்க் கொண்டார்.