திருநாளைப்போவார்47நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விருத்தம்.

சாதியின் முறைமை காட்டித் தடையிடப் போது மென்றார்
வேதமா முனிவ ராரும் வினைவியுங் கண்டா ரில்லைப்
பேதையாம் புலைய ருக்குப் பேரின்ப நிஷ்டை யேதென்
றாதலா லென்செய் வோமென் றம்பலத் தஞ்சு வாரே.

வசனம்.

பெரியகிழவனைப் பார்த்து நந்தனார் சொல்லுகின்றார்:

தண்டகம்.

ராகம்-யமுனாகல்யாணி;தாளம்-ஆதி.

சிதம்பரதெரிசனங் காணாவிடி லிந்தச் சென்மம் சபல மாமோ
       செனனமரண சம்சாரம் பெருகவே செய்தவினைகள் போமோ
கண்ணுங்கருத்திருக்க சிவனைக்காணமல் காலங்கழிக்க லாமோ
       காலபாசநம தருகில்வராமல் கண்டுபயந்து போமோ
இப்படியேயெப் போதுமிருப்போமென் றெண்ணியிருக்க லாமோ
      இருதயமறிந்திட செய்திடுங் கன்மங்கள் இகழ்ந்துபிரிந்து போமோ
பின்னுமுன்னுமறி யாதமூடர்கள் புத்திகேட்க லாமோ
      புலையரவரடியி லிருக்கினு மெய்திடும் புண்ணியங்கள் போமோ
பரமசிவனைக்கொண் டாடவேணுமென்று பரிந்துபாவி பார்த்தேன்
      பாபஞ்செய்வார்க்குப் படியாது அதில் பாடுபட்டுப் பார்த்தேன்.

வசனம்.

சேரியிலுள்ள புலையர் கூட்டங்கூடி அனுப்பிவைத்த பெரிய கிழவனைப்பார்த்து
நந்தனார் சொல்லுகின்றார்:

தண்டகம்.

ராகம்-நாதநாமக்கிரியை; தாளம்-ஆதி.

மீசை நரைத்துப்போச்சே கிழவா ஆசை மறக்கலாச்சோ
பாசம் வருகலாச்சே கிழவா பாவம் விலகிப்போச்சோ