கூனிக் குறுகிப்போச்சே
கிழவா கோபம் விலகிப்போச்சோ
அங்கம் தளர்ந்துபோச்சே கிழவா அகங்காரமும் போச்சோ
சேரியை நினைந்தாயே கிழவா சிதம்பரம் மறந்தாயோ
மானிட ஜன்மமடா கிழவா மாண்டால் வருமோடா
அம்பலத் தரசனடா கிழவா ஆளுந் தெய்வமடா
திருவடி பணியாயோ கிழவா தேறித் தெளியாயோ.
வசனம்.
நந்தனார், இவ்விதஞ்சொல்லி
சிவகாமவல்லிபாகனை நினைந்து நீரள்ளி
பெரியகிழவன் முகத்திலே தடவி வாயிலே போட்டு
கட்டி யணைத்து காதிலே சிவமந்திர
முபதேசித்தார். உடனே பெரிய கிழவன் சித்தந்தெளிந்து
சிவமாய் நிறைந்து உற்றதுணர்ந்து
ஒருவனாயிருந்து அத்தனடியார் அருள் இது வென்று
பக்தி மிகுந்து பரவசங்கொண்டு
பேசத்தெரியாமற்
பேசுவான்:“நான் இன்றைக்குத்தான் பெரிய
கிழவானா னேன், நந்தா!
எனது பந்தந்
தீர்க்க வந்தாய், முக்தி தந்தாய்” என்று
சுற்றி வலம்வந்து அடிபணிந்து
விடை பெற்றுக் “கண்டேன்,
என் கலிதீர்ந்தேன், ஆனந்தம் கொண்டேன்,
குறை தீர்ந்தேன்,
அமிர்த முண்டேன், பசி தீர்ந்தேன்,
பிறவி வென்றேன், வீடு நின்றேன்,” என்று
தனக்குத்தானே பேசிக்கொண்டு பெரிய கிழவனார் நந்தனாரா
லுபதேசம் பெற்று
வருகின்றார்.
ராகம்-சங்கராபரணம்; தாளம்-ரூபகம்.
பல்லவி.
பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக்
கடலாடி (பெரி)
சரணங்கள்.
பரவிய மாயையிலிருந்து
பார்முதல் பூதங்களைந்து
பெரியவரென் றுணர்ந்து பேரின்ப லாபத்தை
யடைந்து (பெரி)
|