முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
21 முதல் 30 வரை
|
|
21. கேட்டி லுறுதி கூட்டு
முடைமை |
(பதவுரை) கேட்டில் -
(கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை,
உடைமை - செல்வத்தை, கூட்டும் -
சேர்க்கும்.
(பொழிப்புரை) பொருளை இழந்த காலத்தில்
மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீட்டும் செல்வத்தை
யுண்டாக்கும். |
|
|
|
|
22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள்
கல்வி |
(பதவுரை)
கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும்,
மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி -
கல்வியேயாம்.
(பொழிப்புரை)
கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப்
பொருளாகும் |
|
|
|
|
23. கொற்றவ னறித லுற்றிடத்
துதவி |
(பதவுரை)
கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை)
அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து,
உதவி - உதவியாகும்.
(பொழிப்புரை)
ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது
உற்றிடத்து என விகாரப்பட்டது.) |
|
|
|
|
24. கோட்செவிக் குறளை காற்றுட
னெருப்பு |
(பதவுரை)
கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே,
குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது,
காற்றுடன் - காற்றுடன் சேர்ந்த, நெருப்பு -
நெருப்பைப் போல மூளும்.
(பொழிப்புரை)
கோள் கேட்கும் இயல்புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள்வார்த்தை காற்றுடன்
சேர்ந்த நெருப்புப்போல மூளும். |
|
|
|
|
25. கௌவை சொல்லி னெவ்வருக்கும்
பகை |
(பதவுரை)
கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற்களை,
சொல்லின் - (ஒருவன்) சொல்லினால்,
எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்)
பகையாவான்.
(பொழிப்புரை)
ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் அவன் யாருக்கும் பகையாவான்
(எவருக்கும் என்பது எவ்வருக்கும் என
விகாரப்பட்டது.)
|
|
|
|
|
26. சந்ததிக் கழகு வந்திசெய்
யாமை |
(பதவுரை)
சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு -
அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை -
செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.
(பொழிப்புரை)
வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி
வாழ்தலாம். |
|
|
|
|
27. சான்றோ ரென்கை யீன்றோட்
கழகு |
(பதவுரை)
சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்)
நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு -
பெற்றவளுக்கு, அழகு - அழகாகும
(பொழிப்புரை)
தன் புதல்வரை, அறிவுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு
மகிழ்ச்சியாகும். |
|
|
|
|
28. சிவத்தைப் பேணிற் றவத்திற்
கழகு |
(பதவுரை)
சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை,
பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு -
(அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.
(பொழிப்புரை)
ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு
அழகாகும். |
|
|
|
|
29. சீரைத் தேடி னேரைத்
தேடு |
(பதவுரை)
சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்)
தேடுவாயானால், ஏரை - பயிரிடுந்தொழிலை, தேடு
- தேடிக்கொள்ளு.
(பொழிப்புரை)
சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத்
தேடிக்கொள். |
|
|
|
|
30. சுற்றத்திற் கழகு சூழ
விருத்தல் |
(பதவுரை)
சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது,
சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்தலாகும்.
(பொழிப்புரை)
சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ
வந்திருப்பதாகும். |
|
|
|
|