31 முதல் 40 வரை
 
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

(பதவுரை) சூதும் - சூதாடுதலும், வாதும் - குதர்க்கம்பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) சூதாடுதலும் விதண்டாவாதம் பேசலும் துன்பத்தை உண்டாக்கும்.

   
32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும்

(பதவுரை) செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்யுந் தவத்தை மறந்துவிட்டால் அவனை அஞ்ஞானம் அடிமைகொள்ளும்.

   
-
33. சேமம் புகினும் யாமத் துறங்கு

(பதவுரை) சேமம் - காவற்கூடத்திலே; புகினும் - போய்இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின்; உறங்கு - நித்திரை பண்ணு.

(பொழிப்புரை) காவற்கூடத்திலே போய் இருந்தாலும் இரவுஏழரை நாழிகைக்குப்பின் நித்திரை செய். (காவல் வேலைசெய்தாலும் நள்ளிரவில் உறங்கவேண்டும். 'சாமத்துறங்கு' என்றும் பாடம்.

   
34. சையொத் திருந்தா லைய மிட்டுண்

(பதவுரை) சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால்,ஐயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - உண்டு வாழு.

(பொழிப்புரை) பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு உண்டு வாழ். (சை - பொருள்.)

   
35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்

(பதவுரை) சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்றுசொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகியமற்றைப்) புருடார்த்தங்களையும், பெறுவர் - பெறுவர்.

(பொழிப்புரை) பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் புருடார்த்தங்களையும் பெறுவர். (முயற்சியுடையவர் பொருள் பெறுவர் என்றும், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றும் இதற்குப் பொருள் சொல்வதும் உண்டு.)

   
36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்

(பதவுரை) சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவர்.

(பொழிப்புரை) சோம்பலுடையோர் வறுமையால் வருந்தி அலைவார்கள்.

   
37. தந்தைசொன் மிக்க மந்திர மில்லை

(பதவுரை) தந்தை - பிதாவினுடைய; சொல் - சொல்லுக்கு,மிக்க - மேற்பட்ட, மந்திரம் - (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) பிதாவின் சொல்லுக்கு மேற்பட்ட மந்திரம் இல்லை. (மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்றும் பொருள் கூறலாம்.).

   
38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை

(பதவுரை) தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும்,இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) அன்னையைப் பார்க்கிலும் சிறந்த கோயில் இல்லை. (தாயைப் பூசித்தால் ஆலயத்திற்கடவுளைப் பூசிக்கும் பலனை அடையலாம் என்பதுகருத்து. சிறந்த என்பது சிறந்து என விகாரப்பட்டது. 'தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை' என்றும் பாடம்.
இதற்கு, தாயின் வார்த்தையைத் தப்பினால் உறுதி பயக்கும்வேறு வாசகமில்லை என்பது பொருளாகும்.)

   
39. திரைகட லோடியுந் திரவியந் தேடு

(பதவுரை) திரை கடல் - அலைவீசுகின்ற கடலிலே,ஓடியும் - (கப்பலேறி, தூரதேசங்களிற்) போயானாலும்,திரவியம் - திரவியத்தை, தேடு - சம்பாதி.

(பொழிப்புரை) கடல் வழியாகத் தேசாந்தரஞ் சென்றும் பொருளைத் தேடு..)

   
40. தீராக் கோபம் போரா முடியும்

(பதவுரை) தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்துவிடும்.

(பொழிப்புரை) தணியாத கோபமானது கலகமாக முடியும்