முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
41 முதல் 50 வரை
|
|
41. துடியாப் பெண்டிர் மடியி
னெருப்பு |
(பதவுரை) துடியா - (தங் கணவனுக்குத் துன்பம்
வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள்,
மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு -
நெருப்பாவர்.
(பொழிப்புரை) கணவர்க்குத் துன்பம் வந்தபோது மனம்
பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில்நெருப்பு என்பதற்கு உடையிற்
கட்டிய நெருப்பை யொப்பர்என்றும் பொருள்
கூறலாம்.) |
|
|
|
|
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத்
தகும் |
(பதவுரை) தூற்றும் - (தங் கணவர்மேற்
குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று
எனத்தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும்.
(பொழிப்புரை) கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை
அவருக்கு இயமன் என்று
சொல்லத்தகும். |
|
|
|
|
43. தெய்வஞ் சீறிற் கைதவ
மாளும். |
(பதவுரை) தெய்வம் - தெய்வமானது,
சீறின் - (ஒருவனைக்)கோபித்தால், கைதவம் -
(அவனுக்குக்) கைகூடியிருந்ததவமும், மாளும் - (பயன் கொடாமல்)
அழியும்.
(பொழிப்புரை) ஒருவன் கடவுளின் சினத்துக்கு
ஆளானால்அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என
விகாரப்பட்டது.) |
|
|
|
|
44. தேடா தழிக்கிற் பாடா
முடியும் |
(பதவுரை) தேடாது - (ஒருவன் வருந்திச்)
சம்பாதியாமல்,அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால்,
பாடாமுடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக
முடியும்.
(பொழிப்புரை) பொருளைச் சம்பாதியாமல்
செலவழித்துக்கொண்டிருந்தால் பின்பு துன்பமாக
முடியும். |
|
|
|
|
45. தையும் மாசியும் வையகத்
துறங்கு |
(பதவுரை) தையும் - தை மாதத்திலும்,
மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து -
(பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு -
நித்திரைபண்ணு.
(பொழிப்புரை) தை, மாசி மாதங்களாகிற
பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரைவீட்டில் நித்திரை செய்.(வை -
வைக்கோல்.) |
|
|
|
|
46. தொழுதூண் சுவையி னுழுதூ
ணினிது |
(பதவுரை) தொழுது - (ஒருவரைச்) சேவித்து,
ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் -
சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர்செய்து,
ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது -
இன்பந்தருவதாகும்.
(பொழிப்புரை)
சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு
இன்பந் தருவதாகும். |
|
|
|
|
47. தோழ னோடு மேழைமை
பேசேல் |
(பதவுரை) தோழனோடும் - (உன்)
சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை,
பேசேல் - பேசாதே.
(பொழிப்புரை) உன் வறுமை
முதலிய எளிமையை நண்பனிடத்திலும்
சொல்லாதே. |
|
|
|
|
48. நல்லிணக்க மல்ல தல்லற்
படுத்தும் |
(பதவுரை) நல் இணக்கம் அல்லது - நல்ல
சகவாசம்அல்லாதது, அல்லல் - துன்பத்தையே,
படுத்தும் - உண்டாக்கும்.
(பொழிப்புரை)
நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை
உண்டாக்கும். |
|
|
|
|
49. நாடெங்கும் வாழக் கேடொன்று
மில்லை |
(பதவுரை) நாடு எங்கும் - தேசமெங்கும்,
வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் -
ஒரு கெடுதியும், இல்லை - இல்லை.
(பொழிப்புரை)
தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு
குறைவுமில்லை. |
|
|
|
|
50. நிற்கக் கற்றல் சொற்றிறம்
பாமை |
(பதவுரை) நிற்க - நிலைபெறும்படி,
கற்றல் - கற்றலாவது, சொல் - (தான்
சொல்லும்) சொற்கள், திறம்பாமை -
தப்பிப்போகாமையாம்.
(பொழிப்புரை) நிலைபெறக்
கற்றலாவது சொல்லுஞ் சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும்
சொற்களைச் சொல்லுதல் வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற்
பிறழாதிருத்தல் என்றும் பொருள்
சொல்லலாம்.) |
|
|
|
|