61 முதல் 70 வரை
 
61. பிறன்மனை புகாமை யறமெனத் தகும்

(பதவுரை) பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.

(பொழிப்புரை) பிறன்மனைவியை விரும்பாமையே உயர்ந்த தருமம் என்று சொல்லத்தகும்.

   
62. பீரம் பேணி பாரந் தாங்கும்

(பதவுரை) பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான்.

(பொழிப்புரை) தாய்ப்பாலைக்குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவனாவான். (காரணத்தைக் குறைவறக் கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம் சாரியை.)

   
63. புலையுங் கொலையும் களவுந் தவிர்

(பதவுரை) புலையுயம் - புலாலுண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் - பிறர்பொருளைத் திருடுதலையும்., தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) புலால் உண்ணுதலும், பிறவுயிரைக்கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும், செய்யாதே.

   
64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்

(பதவுரை) பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை காணப்படுவதில்லை.

   
65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும்

(பதவுரை) பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கடவுளருளைப் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமும் இல்லை.

   
66. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்

(பதவுரை) பேதைமை என்பது - அறியாமை யென்று சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.

(பொழிப்புரை) அறிந்தும் அறியாதவர்போல அடங்கியிருக்கும் குணம் மாதர்களுக்கு ஆபரணமாகும்.

   
67. பையச் சென்றால் வையந் தாங்கும்

(பதவுரை) பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர்.

(பொழிப்புரை) ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர்.

   
68. பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்

(பதவுரை) பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப்பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) தீங்குகள் என்று சொல்லப்பட்ட யாவற்றையும் செய்யாதொழி.

   
69. போனக மென்பது தானுழந் துண்டல்

(பதவுரை) போனகம் என்பது - போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம்.

(பொழிப்புரை) உணவென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாம்.

   
70. மருந்தே யாயினும் விருந்தோ டுண்

(பதவுரை) மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.

(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி.