81 முதல் 90 வரை
 
81. வளவ னாயினு மளவறிந் தழித்துண்

(பதவுரை) வளவன் ஆயினும் - (செல்வத்தில் நீ) சோழனுக்கு ஒப்பானவன் ஆனாலும், அளவு - (பொருள் வரவின்) அளவை, அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து, உண் - அனுபவி.

(பொழிப்புரை) நீ சோழன்போன்ற செல்வ முடையவன் ஆனாலும் வரவுக்குத் தக்கபடி செலவுசெய்து உண்ணு.

   
82 வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்

(பதவுரை) வானம் - மழையானது, சுருங்கின் - குறையுமாயின், தானம் - தருமமானது, சுருங்கும் - குறைவுபடும்.

(பொழிப்புரை) மழை பெய்வது குறைந்தால் தானஞ்செய்வது குறையும்.

   
83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்

(பதவுரை) விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தகுதியான, ஒழுக்கம் - இல்லற வொழுக்கம், இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) விருந்தினரை உபசரியாதவர்களுக்குத் தகுதியான இல்லற வொழுக்கம் இல்லையாம்.

   
84. வீரன் கேண்மை கூரம் பாகும்

(பதவுரை) வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம், கூர் அம்பு ஆகும் - கூர்மைபொருந்திய அம்பை ஒப்பாகும்.

(பொழிப்புரை) ஒருவனுக்கு வீரனுடைய நட்பு இருந்தால் அஃது அவனுக்குக் கூரிய அம்புபோல் பகையை வெல்ல உதவும்.

   
85. உரவோ ரென்கை யிரவா திருத்தல்

(பதவுரை) உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது - யாசியாமல், இருத்தல் - இருக்கையாம்.

(பொழிப்புரை) திட்பமுடையோர் என்று சொல்லப்படுவது சிறுமைவந்த காலத்திலும் பிறரை இரவாதிருப்பதாம்.

   
86. ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு

(பதவுரை) ஊக்கம் - மனந்தளராமையை, உடைமை - உடைத்தாதல்; ஆக்கத்திற்கு - செல்வத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) செய்யுந் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.

   
87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை

(பதவுரை) வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை - நினைப்பானது, இல்லை - இல்லை.

(பொழிப்புரை) களங்கமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சக நினைப்பில்லை.

   
88. வேந்தன் சீறி னாந்துணை யில்லை

(பதவுரை) வேந்தன் - அரசனானவன், சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், ஆம் - (அப்போது அவனுக்கு) ஆகின்ற, துணை - உதவி, இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) அரசன் ஒருவனைக் கோபித்தால் அவனுக்கு வேறு உதவியில்லை.

   
89. வையந் தோறுந் தெய்வந் தொழு

(பதவுரை) வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்), தெய்வம் - கடவுளை, தொழு - வணங்கு.

(பொழிப்புரை) பூமியிலுள்ள தெய்வத்தலந்தோறுஞ் சென்று கடவுளை வணங்கு.

   
90. ஒத்த விடத்து நித்திரை கொள்

(பதவுரை) ஒத்தவிடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் - நித்திரைபண்ணு.

(பொழிப்புரை) சமமான இடத்திலே படுத்து நித்திரைசெய்.

   
91. ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம்

(பதவுரை) ஓதாதார்க்கு - படியாதவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்லநடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை.

(பொழிப்புரை) நல்லநூல்களைப் பயிலாதவர்க்கு அறிவும் நன்னடையும் இல்லை.

        கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று