முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
1 முதல் 10 வரை
|
|
-
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார்
தமக்கு.
(பதவுரை)
துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி
- திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும்
உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை,
பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர்
எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல்,
சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு
உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம்
- நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய
செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் -
அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு,
நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.
விநாயகக் கடவுளின் திருவடிகளைப்
பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும்
உண்டாகும். |
|
|
|
|
-
1 நன்றி ஒருவற்குச்
செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ
லெனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட
நீரைத் தலையாலே தான்தருத
லால்.
(பதவுரை) நின்று - நிலைபெற்று,
தளரா - சோராமல், வளர் - வளர்கின்ற,
தெங்கு - தென்னையானது, தாள் உண்ட நீரை - தன்
அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே - தன் முடியாலே, தான்
தருதலால் - (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால்,
ஒருவற்கு -(நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி
செய்தக்கால் - உதவி செய்தால், அந்நன்றி -
அவ்வுதவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது செய்வானோ,
என வேண்டா - என்று ஐயுற வேண்டுவதில்லை.
நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ்
சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.
(1) |
|
|
|
|
-
2 நல்லா
ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற்
காணுமே-அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த
உபகாரம் நீர்மே லெழுத்திற்கு
நேர்.
(பதவுரை) நல்லார் ஒருவர்க்கு -
நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம் - செய்த உதவியானது,
கல்மேல் எழுத்துப்போல் - கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட
எழுத்தைப் போல, காணும் - அழியாது விளங்கும்; அல்லாத
- நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு -
அன்பில்லாத மனமுடையார்க்கு, ஈந்த உபகாரம் - செய்த உதவியானது,
நீர்மேல் எழுத்திற்கு - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு,
நேர் - ஒப்பாக (அழிந்துவிடும்).
நல்லவருக்குச் செய்த
உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த
அப்பொழுதே அழிந்துவிடும் எ - ம்
(2) |
|
|
|
|
-
3. இன்னா இளமை
வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி
லினியவும்-இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும்
போலுமே ஆளில்லா மங்கைக்
கழகு.
(பதவுரை) இளமை - (இன்பத்தைத்
தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் - வறுமை
வந்து அடைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவதாகும்,
இன்னா அளவில் - துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில்,
இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத
- துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள் (சூடுதற்குரிய) காலமல்லாத
காலத்தில், பூத்த நல்மலரும் - மலர்ந்த நல்ல மலரையும்,
ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத
மங்கையின் அழகையும், போலும் - ஒக்கும்.
ஏ: அசை. அழகும் என்பதில் உம்மை
தொக்கது.வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம்
விளைவிப்பன எ - ம். (3) |
|
|
|
|
-
4. அட்டாலும்
பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார்
நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க
ளேசங்கு சுட்டாலும் வெண்மை
தரும்.
(பதவுரை) பால் - பாலினை,
அட்டாலும் - காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது
- அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு - சங்கினை,
சுட்டாலும் - சுட்டு நீறாக்கினாலும், வெண்மை
தரும் - அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன்
மக்கள் - மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும்,
மேன் மக்களே - மேலோராகவே விளங்குவர்; நண்பு
அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய்
நட்டாலும் - கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர் -
நண்பராகார்.
பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு
உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது
உவமைகளாற் புலனாகின்றது. ஏ: தேற்றப் பொருட்டு.
மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர்
கலந்து பழகினாலும் நண்பராகார் எ - ம்.
(4) |
|
|
|
|
-
5. அடுத்து முயன்றாலு
மாகுநா ளன்றி
எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப்
பழா.
(பதவுரை) தொடுத்த - கிளைத்த,
உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள்
எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி
- பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா - பழுக்கமாட்டவாம்;
(அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்து முயற்சி செய்தாலும்,
ஆகுநாள் அன்றி - முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த
கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள்; ஆகா -
முடியாவாம்.
எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான்
முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம்.
(5) |
|
|
|
|
-
6 உற்ற இடத்தில்
உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற்
பணிவரோ-கற்றூண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந்
தாங்கின் தளர்ந்து வளையுமோ
தான்.
(பதவுரை) கல் தூண் - கருங்கற்
கம்பமானது, பெரும்பாரம் தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமந்தால்,
பிளந்து இறுவது அல்லால் - பிளந்து முறிவதல்லாமல், தான்
தளர்ந்து வளையுமோ - தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அது போல),
உற்ற இடத்தில் - மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர்
வழங்கும் தன்மையோர் - தம் உயிரைவிடும் குணமுடையோர்,
பற்றலரை - பகைவரை, கண்டால் - பார்த்தால்,
பணிவரோ - வணங்குவரோ? (வணங்கார்).ஓ இரண்டும்
எதிர்மறை.
மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும்
விடுவரேயன்றி மானத்தை விடார் எ - ம்.
(6) |
|
|
|
|
-
7 நீரளவே யாகுமாம்
நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம்
நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற
செல்வம் குலத்தளவே யாகுங்
குணம்.
(பதவுரை) நீர் ஆம்பல் -
நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும் - நீரினது உயரத்தின்
அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு - கூரிய அறிவானது,
தான் கற்ற - தான் படித்த, நூல் அளவே ஆகும் -
நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் - தான்
அடைந்த செல்வமானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து
அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் -
குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே
இருக்கும்.
ஆம் மூன்றும் அசை நிலை.
ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம்
தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும் இருக்கும் எ - ம்.
(7) |
|
|
|
|
-
8. நல்லாரைக்
காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும்
நன்றேஎ-நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே
அவரோ டிணங்கி யிருப்பதுவும்
நன்று.
(பதவுரை) நல்லாரை -
நற்குணமுடையோரை, காண்பதுவும் - பார்ப்பதும்,
நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய,
நலம் மிக்க - பயன் நிறைந்த, சொல் -
சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், நன்றே -
நல்லதே; நல்லார் - நல்லவருடைய, குணங்கள் -
நற்குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், நன்றே
- நல்லதே, அவரோடு - அந் நல்லவருடன், இணங்கி
இருப்பதுவும் - கூடியிருத்தலும், நன்று -
நல்லதே.
ஏ மூன்றும் தேற்றம்.
நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக்
கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும்
நல்லொழுக்கமும் உண்டாகும் எ - ம்.
(8) |
|
|
|
|
-
9. தீயாரைக்
காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந்
தீதேஎ-தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே
அவரோ டிணங்கி யிருப்பதுவுந்
தீது.
(பதவுரை) தீயாரை - தீக்குணம்
உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே -
தீயதே; தீயார் - தீயவருடைய, திருஅற்ற - பயன்
இல்லாத, சொல் - சொல்லை, கேட்பதுவும் -
கேட்டலும், தீதே - தீயதே; தீயார் -
தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை,
உரைப்பதுவும் - பேசுதலும், தீதே - தீயதே;
அவரோடு - அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும்
- கூடியிருத்தலும், தீதே - தீயதே.
ஏ மூன்றும் தேற்றம்.
தீயாரைக் காணினும், அவர்
சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும்
தீயொழுக்கமும் உண்டாகும் எ - ம்.
(9) |
|
|
|
|
நல்லாரால் எல்லார்க்கும்
நலம் |
-
10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால்
வழியோடிப்
புல்லுக்கு மாங்கே
பொசியுமாம்-தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல்
அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யு
மழை.
(பதவுரை)
நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் -
இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய்
வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்திலுள்ள புல்லுக்கும்
பொசியும் - புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல்
உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர்
உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பாராயின், அவர் பொருட்டு
- அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் -
அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.ஏ, ஆம் இரண்டும்
அசை.நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10)
|
|
|
|
|