| முன் பக்கம் | முகப்பு | தேடுதல் | 
		
				| 11 முதல் 20 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) பண்டு முளைப்பது - (உமி 
      நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும் - அரிசியே 
      யாயினும், உமி விண்டு போனால் - உமி நீங்கிப்போனால், 
      முளையாது - (அவ்வரிசி) முளையாது; (அதுபோல) 
      கொண்ட - பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும் 
      - பெரிய வல்லமையை உடையவர்க்கும், அளவு இன்றி - துணைவலி 
      யில்லாமல், ஏற்ற கருமம் - எடுத்துக்கொண்ட செயலை, 
      செயல் ஆகாது - செய்து முடித்தல் இயலாது.
      மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச் 
      செய்து முடிக்கத் துணைவலி வேண்டும் எ - ம். (11)
        11.  பண்டு முளைப்ப 
        தரிசியே யானாலும்விண்டுமி போனால் 
        முளையாதாம்-கொண்டபேர்
 ஆற்ற லுடையார்க்கும் ஆகா 
        தளவின்றி
 ஏற்ற கருமஞ் 
        செயல்.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        ---------------------------------------------------------------------------
      1தாழை என்பது 
      தென்னையையும் குறிக்கும். தென்னை மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும் 
      மணமில்லை.
        12.  மடல்பெரிது தாழை மகிழினிது 
        கந்தம்உடல்சிறிய ரென்றிருக்க 
        வேண்டா-கடல்பெரிது
 மண்ணீரு மாகா ததனருகே 
        சிற்றூறல்
 உண்ணீரு மாகி 
        விடும்.
 
 
(பதவுரை) 1தாழை மடல் 
        பெரிது - தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ் 
        கந்தம் இனிது - மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே 
        (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது - சமுத்திரம் 
        பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது - ஆயினும் அதிலுள்ள நீர் 
        (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு 
        சிற்றூறல் - அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர், 
        உண் நீரும் ஆகும் - குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்) 
        உடல் சிறியர் என்று இருக்கவேண்டா - (ஒருவரை) உருவத்தினாலே 
        சிறியவரென்று (மதியாமல்) இருக்கவேண்டா. 
         
        மண்ணுதல் - கழுவுதல், ஏ: 
        அசை.உருவத்தாற் 
        பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் 
        பெரியவராதலும் உண்டு; எ - ம். (12)
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        
        13.  கவையாகிக் 
        கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல 
        மரங்கள்-சவைநடுவே
 நீட்டோலை வாசியா நின்றான் 
        குறிப்பறிய
 மாட்டா தவன்நல் 
        மரம்.
 
 
(பதவுரை) கவை ஆகி - கிளைகளை உடையனவாகியும், 
        கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து 
        நிற்கும் - காட்டினுள்ளே நிற்கின்ற, அவை - அந்த 
        மரங்கள், நல்ல மரங்கள் அல்ல - நல்ல மரங்கள் ஆகா; 
        சவை நடுவே - கற்றோர் சபையின் நடுவே, நீட்டு 
        ஓலை - (ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான் - 
        படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறியமாட்டாதவன் - பிறர் 
        குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்மரம் - நல்ல 
        மரங்களாம். 
        
        ஏ இரண்டும் அசை. 
        
        கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய 
        மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்; எ - ம். (13) 
         |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        
        14.  கான மயிலாடக் 
        கண்டிருந்த வான்கோழிதானு மதுவாகப் 
        பாவித்துத்-தானுந்தன்
 பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் 
        போலுமே
 கல்லாதான் கற்ற 
        கவி.
 
 
(பதவுரை) கல்லாதான் - கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) 
        கல்லாதவன், கற்ற கவி - (கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு 
        கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட - 
        காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான் 
        கோழி - அதைப் பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானது, தானும் 
        அதுவாகப் பாவித்து - தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டு, 
        தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் - தானும் 
        தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும். 
        
        ஏ: அசை.
 
 கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான் எ - ம். 
        (14)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 
      தீயோர்க்கு உதவுதல் கேடு 
  தரும் |  
 
  
  
    | 
        
        15.  வேங்கை 
        வரிப்புலிநோய் தீர்த்த விடகாரிஆங்கதனுக் காகார 
        மானாற்போல்-பாங்கறியாப்
 புல்லறி வாளர்க்குச் செய்த 
        உபகாரங்
 கல்லின்மே லிட்ட 
        கலம்.
 
 
(பதவுரை) வேங்கை வரிப்புலிநோய்-வரிகளையுடைய வேங்கைப் 
        புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய, 
        விடகாரி-விட வைத்தியன், ஆங்கு - 
        அப்பொழுதே, அதனுக்கு - அப்புலிக்கு, ஆகாரம் 
        ஆனால்போல் - இரையானாற்போல, பாங்கு அறியா - 
        நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு - அற்ப அறிவினருக்கு, 
        செய்த உபகாரம் - செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல் 
        இட்ட கலம்-கல்லின்மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து, 
        செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.)
         
        தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே 
        உண்டாகும். 
         
        விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை 
        அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே 
        தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும் எ - ம். 
        (15)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) கொக்கு - கொக்கானது, 
      மடைத்தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன் 
      ஓட - ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, உறு மீன் - 
      (இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும் - வரும் வரையும், 
      வாடி இருக்கும் - அடங்கியிருக்கும்; (அதுபோல) அடக்கம் 
      உடையார் - தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை, அறிவு 
      இலர் என்று எண்ணி - அறிவில்லாதவரென்று கருதி, கடக்க - 
      அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா - நினைக்கவும் 
      வேண்டுவதில்லை.
      அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை 
      வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் எ - ம். 
(16)
        16.  அடக்க முடையா 
        ரறிவிலரென் றெண்ணிக்கடக்கக் கருதவும் 
        வேண்டா-மடைத்தலையில்
 ஓடுமீ னோட உறுமீன் 
        வருமளவும்
 வாடி யிருக்குமாங் 
        கொக்கு.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) அற்ற குளத்தின் - நீர்வற்றிய 
      குளத்தினின்றும், அறு - நீங்குகின்ற, 
      நீர்ப்பறவைபோல் - நீர்வாழ் பறவைகள்போல, 
      உற்றுழி - வறுமை வந்தபொழுது, தீர்வார் - 
      நீங்குவோர், உறவு அல்லர் - உறவினராகார்; 
      அக்குளத்தில் - அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் 
      ஆம்பலும் நெய்தலும் போல - கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, 
      ஒட்டி உறுவார் - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை 
      அனுபவிப்போரே, உறவு - உறவினராவர்.
      போலவே என்பதிலுள்ள ஏகாரத்தை உறுவார் 
      என்பதனுடன் சேர்க்க.
      வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் 
      அனுபவிப்போரே உறவினராவர் எ - ம். 
(17)
        17.  அற்ற குளத்தின் 
        அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் 
        உறவல்லர்-அக்குளத்திற்
 கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் 
        போலவே
 ஒட்டி யுறுவார் 
உறவு.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | தாழ்ந்தாலும் மேன்மக்களே 
  சிறந்தவர் |  
 
  
  
    | 
        (பதவுரை) சீரியர் கெட்டாலும்-மேன்மக்கள் 
      வறுமையுற்றாலும், சீரியரே - மேன்மைக் குணமுடையோரே யாவர்; 
      சீரியர் அல்லாதார் கெட்டால்-கீழ்மக்கள் வறுமையுற்றால், 
      அங்கு என் ஆகும் - அப்பொழுது அவரின் குணம் யாதாகும், 
      சீரிய பொன்னின் குடம் உடைந்தால் - சிறந்த பொன்னாலாகிய குடம் 
      உடைந்தாலும், பொன் ஆகும் - பழைய பொன்னேயாகிப் பயன் தரும்; 
      மண்ணின் குடம் உடைந்தக்கால் -மண்ணாலாகிய குடம் உடைந்தால், 
      என் ஆகும் - அது யாது பயனுடையதாம். மற்று: அசை.
      மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்; 
      கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராவர் எ - 
  ம்.(18)
        18.  சீரியர் 
        கெட்டாலும் சீரியரே சீரியர்மற்றல்லாதார் கெட்டாலங் 
        கென்னாகும்-சீரிய
 பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு 
        மென்னா
 மண்ணின் குடமுடைந்தக் 
        கால்
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) ஆழ் கடல் நீர் - ஆழமாகிய கடலின் நீரை, 
      ஆழ அமுக்கி முகக்கினும் - அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும், 
      நாழி-ஒரு படியானது, நால் நாழி முகவாது - 
      நான்குபடி நீரை மொள்ளாது; (அதுபோல), தோழி - தோழியே, 
      நிதியும் கணவனும் நேர்படினும் - (பெண்டிர்க்கு) மிக்க பொருளும் 
      தக்க நாயகனும் கிடைத்தாலும், தம்தம் - அவரவருடைய, 
      விதியின் பயனே பயன் - ஊழினளவாகிய பயனே (அனுபவிக்கப்படும்) 
      பயனாகும்.
      தோழி: மகடூஉ முன்னிலை.
      வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், 
      பழ வினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது எ - ம். 
  (19)
        19.  ஆழ அமுக்கி 
        முகக்கினும் ஆழ்கடல்நீர்நாழி முகவாது 
        நால்நாழி-தோழி
 நிதியுங் கணவனும் நேர்படினும் 
        தந்தம்
 விதியின் பயனே 
      பயன்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) வியாதி - நோயானது, உடன்பிறந்தே 
      கொல்லும் - உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்) 
      உடன் பிறந்தார் - உடன் பிறந்தவர் எல்லோரும், 
      சுற்றத்தார் என்று இருக்க வேண்டா - (நன்மை செய்யும்) 
      சுற்றத்தாரென்று கருதியிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா - உடன் 
      பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே - பெரிய மலையில் இருக்கிற 
      மருந்தே, பிணி தீர்க்கும் - நோயைப் போக்கும்; 
      அம்மருந்து போல்வாரும் உண்டு - அம் மருந்து போல் 
      (அயலாராயிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு.
      உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் 
      அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு எ - ம். 
(20)
        20.  உடன்பிறந்தார் 
        சுற்றத்தார் என்றிருக்க வேண்டாஉடன்பிறந்தே கொல்லும் 
        வியாதி - உடன்பிறவா
 மாமலையி லுள்ள மருந்தே 
        பிணிதீர்க்கும்
 அம்மருந்து போல்வாரு 
        முண்டு.
 
 |  | 
		
			|  |  |  |