21 முதல் 30 வரை
 
வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

21   நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
    பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
    வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
    தருஞ்சிவந்த தாமரையாள் தான்

(பதவுரை) சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.

வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும்  எ - ம். (21)

   
பாவிகளின் பணம்

22.  பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
    காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
    பாவிகள் அந்தப் பணம்.

(பதவுரை) பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ - ம். (22)

   
வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

23.  வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே-மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரஞ் சொன்னார் மனை.

(பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார் மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் - மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் - பாம்புகள் குடியிருக்கும்.

ஏ ஐந்தும் அசை.

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ - ம். (23)

ஓரம் - நடுவுநிலையின்மை.

   
வாழ்க்கை மாண்பு ஐந்து

24.  நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
    ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
    உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
    மடக்கொடி யில்லா மனை.

(பதவுரை) நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ - ம். (24)

   
வரவறிந்து செலவிட வேண்டும்

25.  ஆன முதலில் அதிகஞ் செலவானான்
    மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

(பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம் ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ - ம். (25)

   
பசி வந்திடப் பத்தும் பறக்கும்

26.  மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
    தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந் திடப்பறந்து போம்.

(பதவுரை) பசி வந்திட-பசிநோய் வந்தால், மானம்-மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும், தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம்.

மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ - ம்.

தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது;பதவியும் ஆம் (26)

   
எல்லாம் இறை செயல்

27.  ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்.

(பதவுரை) ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ - ம். (27)

   
மனவமைதி வேண்டும்

28.  உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
    எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
    சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

(பதவுரை) உண்பது, நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம். (28)

   
கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

29.  மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
    இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
    கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
    உற்றார் உலகத் தவர்.

(பதவுரை) மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார் எ - ம் (29)

   
விதியின் தன்மை

30.  தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
    பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
    ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
    வெறுத்தாலும் போமோ விதி.

(பதவுரை) வேந்தே - அரசனே, தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் - தாமே அனுபவிப்பார்கள் ; ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ - ம்.(30)