1 முதல் 10 வரை
 
1. கடவுள் வாழ்த்து

தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்
துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து
(பதவுரை) தா இன்றி-குற்றம் இல்லாமல், எப்பொருளும்- எல்லாப் பொருள்களி னியல்பையும், கண்டு உணர்ந்து-ஆராய்ந்து அறிந்து, தாமரைப் பூவின் மேல்-தாமரை மலரின் மேல், சென்றான்-சென்ற அருகனது, புகழடியை - பெயர்பெற்ற திருவடிகளை, நாவின் துதித்து-நாவினால் புகழ்ந்து, ஈண்டு-இங்கே, அறநெறிச்சாரத்தை- அறநெறிச்சாரமாகிய இந்நூலை, தோன்ற- விளங்க, சுருக்கய் விரைந்து-மிக விரைவாக, விரிப்பன்- விரித்துக் கூறுவேன்.

(குறிப்பு) இது தற்சிறப்புப்பாயிரம்; ''தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைப்பது'' தற்சிறப்பாகலின். தெய்வம்-வழிபடு கடவுள்; ஏற்புடைக் கடவுளும் ஆம், அறத்திற்கு முதல்வனாகலின். குற்றம்-ஐயம் திரிபுகள். காணல்-ஈண்டு ஆராய்தல்; சென்றான்: வினையாலணையும் பெயர். ''மலர் மிசை ஏகினான்'' என்றார் திருவள்ளுவனாரும.் (1)

   
பாயிரம்

2. அறவுரையின் இன்றியமையாமை

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.
(பதவுரை) மற உரையும்-பாவத்தினை வளர்க்கும் நூல்களும், காமத்து உரையும்-ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிற உரையும்-பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், மயங்கி-கலந்து, மல்கிய- நிறைந்த, ஞாலத்து- உலகில், அறவுரை-அறத்தினை வளர்க்கும் நூல்களை, கேட்கும்-கேட்கின்ற, திரு உடையாரே-நற் பேற்றினை உடையவர்களே, பிறவியை-பிறப்பினை, நீக்கும்-நீக்குதற்கேற்ற, திருஉடையார்-வீட்டுலகினையுடையவராவர்.

(குறிப்பு) காமத்து-அத்து: சாரியை. பிறவுரை-சோம்பல் முதலியவற்றை வளர்ப்பன. உரை-ஈண்டு நூலை உணர்த்தலின் ஆகு பெயர். திரு-ஈண்டு நற்பேற்றினையும், வீட்டினையும் உணர்த்திற்று. இதனால், அறவுரை கேட்டலின் இன்றியமையாமை கூறப்பட்டது. (2)

   
3. அறவுரைக் கின்றியமையா நான்கு

  உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.
(பதவுரை) உரைப்பவன்-அறங் கூறுபவனையும், கேட்பான் -அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படுவது - உரைக் கப்படும் அறத்தினையும், உரைத்ததனால் ஆயபயனும்- உரைப்பதனால் உண்டாகும் பயனையும், புரைப்பு இன்றி- குற்றமிலா வகை ஆராய்ந்து, நான்மையும் போலியை நீக்கி-அந் நான்கனுள்ளும் பிழைபடுவன வற்றை நீக்கி, அவை நாட்டல்-அவையினை நிலைபெறச் செய்தல், வான்மையின் மிக்கார் வழக்கு-ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.

(குறிப்பு) உரைப்பவன், கேட்பான், உரைக்கப்படுவது: வினையாலணையும் பெயர்கள். புரைப்பு-குற்றம். வாய்மை- உயர்வு: ஈண்டு ஒழுக்கம். இதன்கண் அறவுரைக் கின்றி யமையா நான்கும் அவற்றின் போலியும் தொகுத்துக் கூறப்பட்டன. அவற்றை மேலே விரிப்பர்.        (3)

   
4. அறமுரைப்பவன் இயல்பு

  அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
  இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
  மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
  பன்னுதற்குப் பாற்பட் டவன்.
(பதவுரை) அறம் கேட்டு-அற நூல்கள் பலவுங் கேட்டவனாயும், அருள் புரிந்து-அருளுடையவனாயும், ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது-ஐம்பொறிகளால் நுகரப்படும் இன்பங்களை விரும்பாதவனாயும், இருசார் பொருளும் துறந்து-அகப்பற்றுப் புறப்பற்றுகளை விட்டவனாயும், அடங்கி-அடக்கமுடையவனாயும்; மன் உயிர்க்கு-நிலைபெற்ற உயிர்களுக்கு, உய்ந்துபோம் வாயில்- வீடுபேற்றுக்குரிய வழியினை, உரைப்பானேல் - உரைப்பவன் ஒருவனுளனாயின், பன்னுதற்குப் பாற்பட்டவன்-அவன் அறமுரைத்தற்கு உரியவனாவன்.

(குறிப்பு) சார்-பற்று. மன்னுதல்-நிலைபெறுதல். பால்- உரிமை. இதனால், அறமுரைப்பவன் தன்மை விரித்துக் கூறப்பட்டது. அற நூல்களை அறமென்றது ஆகுபெயர். பன்னுதல்-விளக்கிச் சொல்லுதல். ஐம்பலன்கள்-சுவை; ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.  (4)

   
5. அறமுரைப்பவராகார் இயல்பு

  பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
  வெள்ளை களிவிடமன் வேட்கையான்-தெள்ளிப்
  புரைக்கப் பொருளுணர்வா னென்றிவரே நூலை
  உரைத்தற் குரிமையிலா தார்.
(பதவுரை) பிள்ளை-பாலனும், பேய்-பேய் கொண்டானும், பித்தன்-பைத்தியம் பிடித்தவனும், பிணியாளன்-நோயாளனும், பின் நோக்கி-எட்டிய நோக்கமில்லாதவனும், வெள்ளை - முட்டாளும், களி-கட்குடியனும், விடமன்-பிறர்க்குத் துன்பம் செய்பவனும், வேட்கையான்-பேராசையுடையவனும், தெள்ளிப் புரைக்க பொருள் உணர்வான்-குற்றமுடையன வற்றையே ஆராய்ந்து உட்கொள்பவனும், என்ற இவரே- ஆகிய இவர்களே, நூலை உரைத்தற்கு உரிமை இலாதார்- அறநூலைக் கூறுதற்கு உரிமையில்லாதவராவர்.

(குறிப்பு) வெண்மை-அறிவின்மை.பிள்ளை முதலியோர் அற முரைப்பவராகார் என்பது கருத்து. பின் நோக்கி - முன்னேற்றத்தில் நோக்கம் இல்லாதவனுமாம். ஏகாரம்: பிரிநிலைப் பொருள் கொண்டது. என்ற+இவரே-என்றிவரே: அகரந்தொகுத்தல் விகாரம். (5)

   
6. அறங்கேட்டற்குரியா னியல்பு

  தடுமாற்ற மஞ்சுவான் தன்னை யுவர்ப்பான்
  வடுமாற்ற மஞ்சித்தற் காப்பான்-படுமாற்றால்
  ஒப்புரவு செய்தாண் டுறுதிச்சொல் சேர்பவன்
  தக்கான் தரும உரைக்கு.
(பதவுரை) தடுமாற்றம் அஞ்சுவான்-தன் சோர்வு படுதலுக்கு அஞ்சுபவனும், தன்னை உவர்ப்பான் - பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும், வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான்-பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும், படும் ஆற்றால் ஒப்புரவு செய்து-தன்னால் இயன்றவளவு பிறருக்கு உதவிசெய்து, ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் - அந்நிலையிற் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன், தரும உரைக்குத் தக்கான்-அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.

(குறிப்பு) அஞ்சுவான்,உவர்ப்பான்,காப்பான்,சேர்பவன் வினை
யாலணையும் பெயர்கள். ஒப்புரவு-  யாவர்க்கும்ஒருபடித்தாய் உதவி செய்தல்.      (6) 

   
7. அறங்கேட்டற்காகார் இயல்பு

  தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
  புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான்-இன்சொல்லை
  ஏன்றிருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்
  கான்றவர்கள் கூறா ரறம்.
(பதவுரை) தன்சொல்லே மேல் படுப்பான்-தான் கூறியதே சிறந்ததென்று கூறுபவனும், தண்டி-மானமுள்ளவனும், தடிபிணக்கன்-மிக்க மாறுபாடு கொண்டவனும், புன் சொல்லே போதரவு பார்த்து இருப்பான்-பிறர் கூறும் இழிசொற்களின் வரவினையே எதிர்பார்த்து இருப்பவனும், இன்சொல்லை ஏன்று இருந்தும் - இன்பந்தரும் உறுதிமொழிகளைக் கேட்கக் காலமும் இடமும் வாய்த்தும், கேளாத ஏழை-கேளாத மூடனும், என இவர்கட்கு-ஆகிய இவர்களுக்கு, ஆன்றவர்கள்- பெரியோர்கள், அறம் கூறார்-அறநூலைச் சொல்லார்கள்.

(குறிப்பு) தடுமாற்றம்-அம் ஈற்றுத் தொழிற்பெயர். தடுமாறு: பகுதி; போதரவு-போதல்: தொழிற்பெயர்; 'நுண்ணுணர்வின்மை வறுமை' என்றாராகலின். ஏழை-மூடன்.     (7) 

   
8. நல்லற வியல்பு

  வினையுயிர் கட்டுவீ டின்ன விளக்கித்
  தினையனைத்தும் தீமையின் றாகி--நினையுங்கால்
  புல்லறத்தைத் தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம்
  நல்லறத்தை நாட்டுமிடத்து.
(பதவுரை) நினையுங்கால்-ஆராயுமிடத்து, நல்அறத்தை நாட்டுமிடத்து-நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின், (அந்நல்லறமானது) வினைஉயிர் கட்டு வீடு இன்ன விளக்கி வினையும் ஆன்மாவும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, தினை அனைத்தும் -தினையளவும், தீமை இன்று ஆகி-குற்றமில்லாததாய், புல்லறத்தை-பாவச்செயல்களை, தேய்த்து-அழித்து, உலகினோடும் பொருந்துவதாம்-உயர்ந்தோர் ஒழுக்கத்தோ டும் பொருந்துவதாகும்.

(குறிப்பு) தகட்டு - பாசம். தினை - சிறிய அளவு. நல்லறத்திற்கு எதிர்மொழியாகப் புல்லறம் எனப் பின்வருவது நினைவிலிருத்தற்குரியது.    (8) 

   
9. புல்லற வியல்பு

  ஆவட்டை போன்றறியா தாரை மயக்குறுத்திப்
  பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க்--காவிட்(டு)
  இருமைக்கும் ஏமம் பயவா தனவே
  தருமத்துப் போலிகள் தாம்.
(பதவுரை) ஆவட்டை போன்று-மரணமடையு நிலையிலி ருப்பார் போன்று, அறியாதாரை-அறிவில்லாதவர்களை, மயக்குறுத்தி - மயக்கி, பாவிட்டார்க்கு எல்லாம் - விரும்பினவர்களுக்கெல்லாம், படுகுழியாய் - மிக்க துன்பம் பயப்பவாய், காவிட்டு - துன்பம் உற்றுழி உதவுதலின்றி, இருமைக்கும் ஏமம் பயவாதென - இம்மை மறுமைக ளுக்கு உறுதி பயவாதவை யாவை அவை, தருமத்துப் போலிகள்தாம் - அறநூல்கள் போன்றிருப்பினும் அறநூல்க ளாகா.

(குறிப்பு) மரண நிலையிலிருப்போர் தன்மையைக் குறித்து 'ஆவட்டை கோவட்டையாயிருக்கிறது' என்று சொல்வது சேர நாட்டிடை வழங்குவதொரு வழக்கு. மரண நிலையிலிருப்பார் அறிவிலிகள். மனத்தில் குழப்பத்தினை யுண்டாக்குபவர் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. ஆவட்டை ஒரு பூண்டுமாம் துன்பம் உற்றுழி உதவுதலாவது சேற்றுநிலத்தி லியங்குவார்க்கு ஊன்று கோல் போன்று உதவுதல். இம்மை மறுமைகட் குறுதி களாவன புகழ் இன்பங்கள் 'பயவாவெனவே' என்பதூ உம் பாடம்; பொருந்தாமையை ஆராய்ந்தறிக. பாவிட்டார்-பாவிடு: பகுதி; இடு: துணை வினை. பாவி - கருது, விரும்பு.   (9) 

   
10. அறவுரையா லாம்பயன்

  புல்ல வுரைத்தல் புகழ்தல் பொருளீதல்
  நல்ல ரிவரென்று நட்பாடல்--சொல்லின்
  அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார்
  மறங்கேள்வி மாற்றி யவர்.
(பதவுரை) சொல்லின்-சொல்லுமிடத்து, மறம் கேள்வி மாற்றியவர் - பாவத்தன்மையை அறநூல்களைக் கேட்டலால் மாற்றிய பெரியோர்கள், புல்ல உரைத்தல்-பலரும் தம்மை அடையுமாறு சொல்லு தலும், புகழ்தல்-பலரானும் புகழப்படுதலும், பொருள் ஈதல்-பொருள் ஈயப்படுதலும், நல்லர் இவர் என்று நட்பாடல்-இவர் நல்லவரென்று கருதிப் பலரும் நட்பினராக வந்தடைதலுமாகிய இவற்றை, அறம் கேள்வியால்-அந் நூல்களைக் கேட்பதனால், ஆம்- வரும், பயன் என்று உரைப்பர்-பயனென்று சொல்லுவார்கள்.

(குறிப்பு) புல்ல வுரைத்தல் மூன்றும் அறவுரையை அறிந்தமையாலாம் பயனாம். மாற்றியவர் உரைப்பர் எனமுடிக்க.   (10)