11 முதல் 20 வரை
|
|
- காட்சி யொழுக்கொடு ஞானந்
தலைநின்று
மாட்சி மனைவாழ்த லன்றியு--மீட்சியில் வீட்டுலக மெய்தல்
எனவிரண்டே நல்லறங் கேட்டதனா லாய பயன்.
(பதவுரை) நல்லறம்-சிறந்த
அறநூல்களை, கேட்டதனால்- கேட்பதனால்,
ஆய-உண்டாகும், பயன்-பயன்களாவன, காட்சி
ஒழுக்கொடு-அறிவு ஒழுக்கங்களோடு, மாட்சி- பெருமை
பொருந்திய, மனை வாழ்தலும்-இல்லறத்தில் வாழ்தலும்,
அன்றி- அதுவேயன்றி, ஞானந் தலைநின்று-
ஞானத்தால் சிறந்து, மீட்சியில்-மீளுதலில்லாத,
வீட்டுலகம் எய்தலும்-வீடுபேற்றினையடைதலும், என
இரண்டே-ஆகிய இரண்டே ஆகும்.
(குறிப்பு) மனை வாழ்க்கையும் வீடுபேறுமாகிய இரண்டுமே
அறங்கேட்டதனாலாய பயனாம். மேற்கண்ட பத்துப்பாக்களும் இந்நூற்குப் பொதுவாகிய
இன்றியமையா நான்கினையும் விளக்குகின்றமையாற் பாயிரமாயின.
(11) |
|
|
|
|
|
- மெய்ம்மை பொறையுடைமை மேன்மை
தவமடக்கம்
செம்மையொன் றின்மை துறவுடைமை--நன்மை திறம்பா விரதந்
தரித்தலோ டின்ன அறம்பத்தும் ஆன்ற குணம்.
(பதவுரை)
மெய்ம்மை-உண்மையும், பெறையுடைமை-
பொறுமையும், மேன்மை-பெருமையும், தவம்-தவமும்,
அடக்கம்-அடக்கமும், செம்மை-நடுநிலைமையும்,
ஒன்றின்மை-தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும்,
துறவுடைமை-பற்றுவிடுதலும், நன்மை-நல்லன
செய்தலும், திறம்பா விரதம் தரித்தலோடு-மாறுபடாத விரதங்களை
மேற்கொள்ளுதலுமாகிய, இன்ன அறம் பத்தும்-இவ்வறங்கள் பத்தும்,
ஆன்ற குணம்-மேலான குணங்களாம்.
(குறிப்பு)
ஒன்றின்மை-தனக்கென வொன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தல்.
திறம்பா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
(12) |
|
|
|
|
|
13. அறமே அனைத்தினுஞ்
சிறந்தது |
- தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள்
இறைமையுஞ் செய்து-- மனக்கினிய போகந் தருதலால் பொன்னே!
அறத்துணையோ டேகமா நண்பொன்று மில்.
(பதவுரை)
பொன்னே-இலக்குமி போன்றவளே, தனக்குத்
துணையாகி-செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாக நின்று, தன்னை
விளக்கி-அவனைப் பலரும் அறியுமாறு செய்து, இனத்துள் இறைமையும்
செய்து- சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனக்கு இனிய
போகம் தருதலால்-மனதிற்கினிமையான செல்வத்தினையுங் கொடுப்பதால்,
அறத்துணையோடு- அறமாகிய துணையோடு,
ஏகமாம்-ஒன்றாக வைத்தெண்ணு தற்குரிய, நண்பு ஒன்றும்
இல்-நட்பினர் ஒருவரும் இல்லை.
(குறிப்பு)
மனக்கு: அத்துச்சாரியை பெறாது வேற்றுமை யுருபு ஏற்றுவந்தது. அறத்துணை: பண்புத்தொகை,
நண்பு - உதவி செய்வது என்றுமாம். (13)
|
|
|
|
|
|
14. அறமே மறுமைக்குத்
துணையாம் |
- ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும்
சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்--மூட்டும் எரியின்
உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட! தெரியின் அறமே
துணை.
(பதவுரை)
ஈர்ங்குன்ற நாட-குளிர்ந்த மலைநாட்டுக்கரசே!
ஈட்டிய-தேடிய, ஒண் பொருளும்-சிறந்த செல்வமும்,
இல் ஒழியும்-மனையி லேயே நின்றுவிடும்,
சுற்றத்தார்-உறவினர், காட்டுவாய் நேரே கலுழ்ந்து
ஒழிவர்-சுடுகாட்டுவரை கூட அழுதுகொண்டு வந்து நீங்குவர், மூட்டும்
எரியின்- மூட்டப்படுகின்ற நெருப்பால், உடம்பு
ஒழியும்-உடல் அழியும், தெரியின்-ஆராயின்,
அறமே துணை-ஒருவனுக்கு துணையாவது அறமேயாகும்.
(குறிப்பு)
அறமே-ஏகாரம: பிரிநிலை. எரியின்- இன; ஐந்தனுருபு ; ஏதுப்பொருள்.
(14) |
|
|
|
|
|
15. இல்லற துறவறங்களின்
ஏற்றம் |
- நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி
இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி--யாப்புடைக் காழுங்
கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி ஆழிசூழ் வையத்
தறம்.
(பதவுரை)
நோற்பவர்-துறவிகள்,
இல்லவர்க்கு-இல்லறத் தாருக்கு,
சார்வாகி-பற்றுக்கோடாகியும், இல்லவரும்-
இல்லறத்தாரும், நோற்பவர்க்கு-துறவிகளுக்கு,
சார்வாய்- பற்றுக்கோடாகியும், அறம்
பெருக்கி-முறையே இல்லறம் துறவறங்களை வளர்த்தலால், ஆழி
சூழ்-கடல் சூழ்ந்த, வையத்து-பூமியில்,
அறம்-அவ்வறங்கள், கயக்கு இன்றி-
சோர்வில்லாமல், யாப்பு உடை-உறுதி பெற்ற, காழும்
கிடுகும்போல்-தூணும் சட்டப் பலகையும் ஒன்றுக்கொன்று ஆதரவாயிருத்தல்போல,
நிற்கும்-ஒன்றுக்கொன்று ஆதரவாக நிற்கும்.
(குறிப்பு)
நோற்பவர்-நோல்: பகுதி. காழும், கிடுகும் மறைப்பாக அமைக்கப்பட்ட வலுவான
ஊன்றுகோலும் மறைப்புத் தட்டியுமாம். ஆழி-ஆழமுடையது; கடல். (15)
|
|
|
|
|
|
- இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற்
களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர்
ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்
(பதவுரை)
இன்சொல்-இனியசொல்லே, விளை
நிலமா-விளை நிலமாகவும், ஈதலே-ஈகையே,
வித்தாக-விதையாகவும், வன் சொல்-
கடுஞ்சொல்லாகிய, களை கட்டு-களை பிடுங்கி,
வாய்மை-உண்மையாகிய, எரு அட்டி-எருவிட்டு,
அன்பு-அன்பாகிய, நீர் பாய்ச்சி-நீரைப்
பாய்ச்சி, அறக்கதிர்-அறமாகிய கதிரை,
ஈன்றது-ஈனுவதாகிய, ஓர்-ஒப்பற்ற,
பைங்கூழ்-பசிய பயிரை, சிறு காலை-
இளம்பருவத்திலேயே, செய்-செய்வாயாக.
(குறிப்பு)
நெஞ்சே என்ற விளி வரவழைத்துக் கொள்ளப்பட்டது. (16)
|
|
|
|
|
|
17. இளமையி லறஞ்செய்தலின்
இன்றியமையாமை |
- காலைச்செய் வோமென் றறத்தைக்
கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார்--மாலைக் கிடந்தான் எழுதல்
அரிதால்மற் றென்கொல் அறங்காலைச் செய்யாத வாறு.
(பதவுரை)
அறத்தை-அறத்தினை, காலை-இளம்
பருவத்திலேயே, செய்வோம் என்று-செய்வோமென்று கருதி,
கடைப்பிடித்து-உறுதியாகக்கொண்டு, சாலச்
செய்வாரே-மிகச் செய்வோரே, தலைப்படுவார்-
உயர்ந்தோராவார், மாலை-இரவில்,
கிடந்தான்-படுத்தவன், எழுதல்-காலையில் எழுவது,
அரிது-அருமை, (அங்ஙனமாகவும்), அறம்-அறத்தினை,
காலை-இளம் பருவத்திலேயே,
செய்யாதவாறு-செய்யாதிருத்தல், என்கொல்-என்ன
அறிவீனமோ?
(குறிப்பு)
கொல்: ஐயப்பொருள்தரு மிடைச்சொல். ஆல், மற்று: அசைநிலைகள்.
(17) |
|
|
|
|
|
18. இளமையி
லறஞ்செய்யாமையின் இழிவு |
- சென்றநா ளெல்லாம் சிறுவிரல்வைத்
தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வரிது--என்றொருவன் நன்மை புரியாது
நாளுலப்ப விட்டிருக்கும் புன்மை பெரிது புறம்.
(பதவுரை)
சென்ற நாள் எல்லாம்-ஆயுளில் கழிந்த
நாட்களெல்லாவற்றையும், சிறுவிரல் வைத்து எண்ணலாம்-சிறிய
விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம், நின்ற நாள்-இனி உள்ள
நாட்களை, யார்க்கும் உணர்வு அரிது-இவ்வளவு என்று அளவிட்டறிய
யாராலும் இயலாது, என்று-என்று கருதி, ஒருவன் நன்மை
புரியாது-ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், நாள்
உலப்ப-ஆயுள்நாள் வீணே அழியுமாறு, விட்டிருக்கும்
புன்மை-விட்டிருப்பதால் வருந் துன்பம், புறம்பெரிது- பின்
மிகும்.
(குறிப்பு) சிறு
விரல் வைத்து-சிறிய சுண்டு விரலை முதலாகக் கொண்டு என்றுமாம். உலப்ப : வினை
யெச்சம்; உல : பகுதி, புறம்-அப்புறம்: பின்பு. புன்மை- இழிவென்றுமாம். (18)
|
|
|
|
|
|
19. கூற்றத்தின்
நடுவுநிலைமை |
- கோட்டுநா ளிட்டுக் குறையுணர்ந்து
வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால்--வீட்டுதற்கே வஞ்சஞ்செய் கூற்றம்
வருதலால் நன்றாற்றி அஞ்சா தமைந்திருக்கற் பாற்று.
(பதவுரை)
கோட்டுநாள் இட்டு-விதித்த நாளை விட்டு, குறை
உணர்ந்து வாராது-குறைநாளில் வருவதுமில்லை; மீட்டு ஒருநாள் இடையும்
தாராதால்-விதித்த நாளுக்குமேல் மிகுதியாக ஒருநாள் கூடக் கொடுப்பதும்
இல்லை; வஞ்சஞ் செய் கூற்றம்-வருதலை முன்னர் அறிவியாது வந்து
வஞ்சிக்கின்ற எமன், வீட்டுதற்கே-அழிப்பதற்கே,
வருதலால்- வருவதனால், நன்று ஆற்றி-அறத்தினை
மிகவும் செய்து, அஞ்சாது-(மரணத்திற்கு) அஞ்சாமல்,
அமைந்து இருக்கற்பாற்று-அடங்கியிருத்தல் வேண்டும்.
(குறிப்பு) ஆல்
முன்னிரண்டும் அசைநிலைகள்; பின்னது மூன்றனுருபு, கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது.
(19) |
|
|
|
|
|
20. உடலும் செல்வமும்
நிலையாமை |
- இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே
பிறருடைமை யாயிருக்கும்--நின்ற கருமத்த ரல்லாத கூற்றின்கீழ்
வாழ்வார் தருமந் தலைநிற்றல் நன்று.
(பதவுரை)
இன்று உளார் இன்றேயும் மாய்வர்-இன்றைக் கிருப்பவர்
இன்றே அழியினும் அழிவர், அவர் உடைமை அன்றே பிறருடைமை
ஆயிருக்கும்-அவர் செல்வம் அவர் இறந்த அப்பொழுதே அயலாருடைய செல்வமாகும்,
(ஆதலால்) அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்-கொடிய எமனது
ஆணையின்கீழ் வாழும் மாந்தர், நின்ற கருமத்தர்-நிலைபெற்ற
செயலையுடையராய், தருமம் தலைநிற்றல் நன்று-அறத்தினை மேற்கொண்டு
ஒழுகுதல் நல்லது.
(குறிப்பு)
தலைநிற்றல், ஒருசொல்; மேற்கொண்டொழுகுதல், (20)
|
|
|
|
|
|