21 முதல் 30 வரை
 
21. இளமை நிலையாமை

மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.
(பதவுரை) மின்னும்-மின்னல் போலும், இளமை-இளமைப் பருவமானது, உளதாம்-நிலைத்திருக்கும், என மகிழ்ந்து - என்று மகிழ்ந்து, பின்னை-முதுமையில், அறிவென் என்றல்-அறத்தினைப்பற்றி அறிவேன் என்று கருதுதல், பேதைமை-அறியாமையேயாகும், கூற்றம்-எமன், அணித்தாய்-இளமையிலேயே, வருதலும் உண்டு - ஆயுளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு, (ஆதலால்) தன்னைத் துணித்தானும்-தனது உடலை வருத்தியேனும், தூங்காது-காலதாமதம் செய்யாமல், அறம் செய்க-அறத்தினை ஒவ்வொருவனும் செய்வானாக.

(குறிப்பு) அறிவென்: என் ஈற்றுத்தன்மை ஒருமை வினைமுற்று. துணித்தல்-துண்டாக்கல், வருத்தல். (21)

   
22. அறவரணத்தின் இன்றியமையாமை

மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும்-ஆற்ற
அறவரண மாராய்ந் தடையினஃ தல்லால்
பிறவரண மில்லை யுயிர்க்கு.
(பதவுரை) மூப்பொடு தீ பிணி-முதுமையையும் கொடிய நோயையும், முன்னுறீஇ-முன்னரடைவித்து, கூற்ற அரசன்-எமனாகிய அரசன், பின் வந்து-பின்னர் அடைந்து, குறும்பு எறியும்-உடலாகிய அரணை அழிப்பான், ஆராய்ந்து -பலவற்றாலும் ஆராய்ந்து, ஆற்ற அற அரணம்-மிக்க அறமாகிய பாதுகாவலை, அடையின் அஃது அல்லால் - அடைந்தாலன்றி, உயிர்க்கு பிற அரணம் இல்லை - உயிர்களுக்குப் பாதுகாவலான இடம் வேறொன்றுமில்லை.

(குறிப்பு) முன்னுறீஇ: சொல்லிசை யளபெடை. அறவரணம்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (22)

   
23. நன்கு செய்யப்பட வேண்டியது நல்லறமே

திருத்தப் படுவ தறக்கருமந் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க--பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஞமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு.
(பதவுரை) திருத்தப்படுவது-நன்றாகச் செய்யத் தகுவது, அறக் கருமம்-அறச்செயல்களேயாகும், பெருங் கூற்றம்-வலிமிக்க எமன், பெருக்க வரவும்-உயிர்களைக் கவர்ந்து செல்லப் பலமுறை வருதலையும், வன்கண்-கொடிய, ஞமன்-அவ் யமனது, கீழ்த்தர வறுத்து-கட்டளையை மீறி, மீளாமை-அவனால் கவரப்பட்ட உயிர்கள் திரும்பாமையையும், கண்டு-காணலால், மாண்புடையார்-பெரியோர்கள், தம்மை-தமதுடலை, வருத்தியும்-வருத்தியேனும், செய்க-அவ்வறத்தினைச் செய்வார்களாக.

(குறிப்பு) வன்கண்மை-கொடுமை, ஞமன்-யமன்; யகர ஞகர முதற்போலி; அன்றி நமன் ஞமன் என நகர ஞகரப் போலியுமாம். (23)

   
24. அறத்தினை விரைந்து செய்க

முன்னே ஒருவன் முடித்தான்றன் துப்பெலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல்?--முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து.
(பதவுரை) முன்னே-தனக்கு முன்னே, ஒருவன்-பிறனொருவன், தன் துப்பு எலாம்-தன் நுகர்பொருள்பலவற்றையும், முடித்தான்-அழித்துச் சென்றான், ஒருவன்-அதனைப் பார்த்த அவன், இகழ்ந்திருத்தல்-(அறத்தினைச்செய்யாமல்) ஏளனஞ் செய்திருத்தல், என்னே-என்ன பேதமை!, முன்னே முடித்த படியறிந்து-முன்னே பெரியோர்கள் செய்த வழியை யறிந்து, முன்முன்-மேலும்மேலும், பெரிதாய் விரைந்து-மிக விரைந்து, அறத்தைப்பிடிக்க-அறத்தினைச் செய்க.

(குறிப்பு) முன்முன்: அடுக்குத் தொடர், விரைவுப் பொருள் கூறியது. பிடிக்க: வியங்கோள். (24)

   
25. அறஞ்செய்யாமையால் வருங்கேடு

குறைக்கருமம் விட்டுரைப்பிற் கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க--பிறப்பிடைக்கோர்
நெஞ்சேமாப் பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும்.
(பதவுரை) பிறப்பிடைக்கு-மறு பிறப்பிற்கு, ஓர்-ஒப்பற்ற, நெஞ்சு-தன் மனத்தை, ஏமாப்பு இல்லாதான்-அரணாகக் கொள்ளாதவன், வாழ்க்கை-வாழ்க்கையானது, நிரயத்து-நரகில், துஞ்சா-அழிவில்லாத, துயரம் தரும்-துன்பத்தினைக்கொடுக்கும் (ஆதலால்) அறக் கருமம்-அறவினையை, ஆராய்ந்து செய்க- (நெஞ்சே!) ஆராய்ந்து செய்வாயாக, குறைக்கருமம்-இன்றி யமையா வினைகளை, விட்டு உரைப்பின்-விரித்துக் கூறப்புகின், கொள்ள உலவா-அளவிலடங்கா.

(குறிப்பு) குறைக்கருமம்-வேண்டிய நிலையிற் குறைந்த வினைகள். (25)

   
26. உடல் நிலையாமை

அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண மென்னை?--மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மை யால்.
(பதவுரை) ஒருவன்-நான்முகன், நாட்டு-படைத்த, விடக்கு ஊர்தி-இறைச்சியாலாகிய வாகனம் (உடல்), அச்சு இறுங்காலத்து-அச்சொடிந்து (உயிர் பிரிந்து) அழியுங் காலத்தில், கூட்டும் திறம் இன்மையால்-அதனைப் பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும், அறம் புரிந்து-அறத்தினை விரும்பி, ஆற்றுவ செய்யாது-இயன்ற அளவு செய்யாமல், மறந்து நாளும் உறங்குதல்-மறந்துபோதலால் எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல், என்னை காரணம்-(நெஞ்சே) யாது கருதி?

(குறிப்பு) அச்சு-உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம் . (26)

   
27. அறனில்லா வாழ்க்கை யழிவேயாம்

பாவம் பெருகப் பழிபெருகத் தன்னோம்பி
ஆவதொன் றில்லை யறனழித்துப்--பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறாவுண்ணும் ஆற்றவு நின்று.
(பதவுரை) முறைசெய்-நீதியைச் செய்கின்ற, பொரு இல்-ஒப்பற்ற, ஞமன்-எமன், பாவம் பொறாஅ-நாம் செய்யும் பாவத்தினைப் பொறாமல், ஆற்றவும் நின்று-மிகவும் அசைவின்றி நின்று, கீழ் அறா உண்ணும்-மறைந்து ஆயுளைக் குறைத்து உண்பானாதலின், அறனழிந்து-அறத்தினைக் கொன்று, பாவம் பெருக-பாவம் பெருகவும், தன் ஓம்பி-தன்னை ஓம்பி வாழ்வதால்,ஆவது ஒன்று இல்லை-ஆகும் பயனொன்றும் இல்லை.

(குறிப்பு) பொறாஅ: இசைநிறை யளபெடை, ஞமன்-யமன்; முதற்போலி . (27)

   
28. அறனை மறவேல்

முற்செய் வினையின் பயன்றுய்த் ததுவுலந்தால்
பிற்செய் வினையின்பின் போகலால்--நற்செய்கை
ஆற்றுந் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே!
கூற்றங் குடில்பிரியா முன்.
(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, முன் செய் வினையின்-முற்பிறப்பிற் செய்த வினையினது, பயன் துய்த்து-பயனை அனுபவித்து, அது உலந்தால்-அஃது அழிந்தால், பின் செய்-இப் பிறப்பில் செய்த, வினையின்பின் போகலால்-வினைவழியே சென்று வேறு பிறப்பினை அடைவதால், கூற்றம்-எமன், குடில் பிரியா முன்-உடலினின்றும் உயிரை வேறு படுப்பதன் முன், நற்செய்கை-நல்வினையை, ஆற்றுந் துணையும்-செய்ய ஆற்றலுளதாங் காலம் முடிய, அறம் மறவேல்-அறத்தினை மறவாது செய்வாயாக.

(குறிப்பு) குடில்-உயிரின் இருக்கையாகிய உடல். மறவேல்: எதிர்மறை ஏவலொருமை வினைமுற்று. (28)

   
29. கிடைத்ததைக்கொண்டு அறஞ்செய்க

திரையவித்து நீராட லாகா உரைப்பார்
உரையவித் தொன்றுஞ்சொல் இல்லை-அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகா துளவரையால்
செய்வதற்கே ஆகுந் திரு.
(பதவுரை) திரை அவித்து நீராடல் ஆகா-அலைகளை ஒழித்துப் பின் கடல் நீராடுதல் எவர்க்கும் ஆகாது (என்று), உரைப்பார் உரை அவித்து-உரைப்பவர் உரையை விட்டால், ஒன்றும் சொல் இல்லை-வேறு மெய்ம்மை பொருந்தும் சொல் இல்லை, (ஆதலின்), அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகாது-ஒருவர் அரசராய்ப் (பெருஞ் செல்வம்) பெற்றபின் அறத்தினைச் செய்வேமெனக் கருதின் அக்காலத்துச் செல்வம், அவருக்கு அறஞ்செய்ய உதவுவதில்லை, உளவரையால் செய்வதற்கே ஆகும் திரு-பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ்செய்யப் புகுகின்றவனுக்கே அறஞ்செய்வதற்குத் துணையாக நிற்கும் அவனது செல்வம்.

(குறிப்பு) “அலையொழிந்து கடலாடலாகாது” என்பது பழமொழி. உரைவித்து: எச்சத்திரிபு. அரைசர்-அரசர்; இடைப்போலி. (29)

   
30. மூடனுக்கு அறவுரையாற் பயனில்லை

கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லைமற் றொன்றும் அறனுணர்தல்--நல்லாய்
நறுநெய் நிறைய முகப்பினு மூழை
பெறுமோ சுவையுணரு மாறு.
(பதவுரை) நல்லாய்-நற்குணமிக்க பெண்ணே!, மூழை - அகப்பையானது, நறு நெய்-நல்ல நெய்யோடு கலந்த உணவை, நிறைய முகப்பினும்-நிறைய முகக்கு மாயினும், சுவை உணருமாறு-சுவையினை அறியுந் தன்மையை, பெறுமோ-உடையதாகுமோ? (ஆகாது), அதுபோல, கல்லா ஒருவனை-படியாத ஒருவனுக்கு, காரணம் காட்டினும்-காரணங்காட்டி விளக்கிச் சொன்னாலும், அறன் உணர்தல் மற்று ஒன்றும் இல்லை-அவன் அறத்தினை ஒரு சிறிதும் உணரான்.

(குறிப்பு) ஒருவனை: உருபு மயக்கம். ‘அகப்பை யறுசுவை யறியுமோ?’ என்பது பழமொழி .காட்டினும், முகப்பினும்: உயர்வு சிறப்பும்மைகள். (30)