31 முதல் 40 வரை
 
31. கீழ்மகன் நெஞ்சில் அறவுரை புகாது

வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.
(பதவுரை) வைகலும்- நாள்தோறும், நீருள் கிடப்பினும் - நீரினுள்ளேயே கிடந்தாலும், கல்லிற்கு-கல்லுக்கு, மெல்லென்றல்-மென்மையடைதல், சால அரிதாகும் - சிறிதும் இல்லை, அஃதே போல்-அதுபோல், வைகலும் - நாள் தோறும், நல்லறம்-நல்ல அறநூல்களை, கேட்பினும் - கேட்டாலும், கீழ் கட்கு-கயவர்களுக்கு, நெஞ்சு-மனமானது, கல்லினும் வல்லென்னும்-கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவே இருக்கும்.

(குறிப்பு) சால: உரிச்சொல், மிகுதிப்பொருள், பொருளின் போக்குக் கொண்டு சிறிதும் என உரைக்கப்பட்டது. (31)

   

 32. கீழ்மக்கட்குக் கட்டாயப் படிப்பாலும் பயனில்லை

கயத்திடை உய்த்திடினும் கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவா தற்றால் - இயற்றி
அறவுரை கேட்ட விடத்தும் அனையார்
திறவுரை தேறா தவர்.
(பதவுரை) கயத்திடை - குளத்தினிடை, உய்த்திடினும்-செலுத்தினாலும், கல் நனையாது-கல் மெல்லென ஊறியுறாது, என்றும்-எக்காலத்தும், பயறுகறி-பயறு களுள் பத்தினிப் பயறாக இருப்பது கறியினிடத்தே, வேவாது-வேவதில்லை, அற்று-அது போல், இயற்றி-விதிகளுக்குட்படுத்தி, அறவுரை கேட்டவிடத்தும்-அற நூல்களைக் கேட்குமாறு செய்தாலும், அனையார்-அக் கீழ்மக்கள், திறவுரை தேறாதவர்-உறுதி மொழிகளை யுணராதவர்களே யாவர்.

(குறிப்பு) இடை : ஏழனுருபு. பயறு-முனையினைக் கொண்டிராத பயறு: பத்தினிப் பயறு .அ: பண்டறி சுட்டு. ஆல்: அசை.                  (32)

   
33. நெஞ்சின் கொடுமை

அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்ற பொழுதே பிறநினைத்தி--எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு வாழ்க்கை
புலைமயங்கி யன்ன துடைத்து.
(பதவுரை) அற்ற பொழுதே-பொருளற்ற காலத்தில், அறம் நினைத்தி-பொருளிருப்பின் அறம் செய்யலாம்; இல்லையே என் செய்வது என்று நினைத்து வருந்துகின்றாய், யாதொன்றும் பெற்ற பொழுதே-ஏதாவது ஒரு செல்வத்தினை யடைந்த காலத்திலோ, பிற நினைத்தி-அறத்தினை மறந்து பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய், நிலைமையில் நன்னெஞ்சே-ஒரு நிலையில்லாத நல்ல மனமே!, எற்றே-இஃதென்னே, நின்னொடு வாழ்க்கை-உன்னோடு கூடிவாழ்தல், புலைமயங்கி அன்ன துடைத்து-புலைமக்களோடு சேர்ந்து வாழ்வது போலும்.

(குறிப்பு) புலை-புலைமக்கள், பண்பாகுபெயர். நினைத்தி: முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று. (33)

   
34. உடலி னழிவு

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட--திருவாளா!
வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக
வாணாள் படுவ தறி.
(பதவுரை) ஒருபால்-ஒருபுறம், திருத்த-தைக்க, ஒருபால்-மற்றொருபுறம், கிழியும்-கிழிகின்ற, பெருவாழ்க்கை- பெரிய வாழ்க்கையாகிய, முத்தாடை-விலையுயர்ந்த உடலாகிய ஆடையை, கொண்ட-உடுத்த, திருவாளா-செல்வமுடையவனே! நீ துன்னம் பொய்யே யாக-நீ தைத்தல் பயனின்றி, வாணாள் படுவது-ஆயுள் நாள் அழிவதை, வீணாள் படாமை அறி-நாள்கள் வீணாக கழியு முன் அறிக.

(குறிப்பு) திருவாளன் என்றது இழிவு பற்றியது. தின்னம்-தைத்தல். (34)

   
35. அறஞ்செய்யாமையால் வரு மிழிவு

உள்ளநாள் நல்லறஞ் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாட் போயேன றிடங்கடிந்து--தொல்லை
இடைக்கடையு மாற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலைவைத் தீயும் பலி.
(பதவுரை) தொல்லை இடைக் கடையும் ஆற்றார்-முன் தாம் செல்வமுடையரா யிருந்தகாலத்தில் அறம் சிறிதும் செய்யாமல், இல்லை நாட்போய் ஏன்று இடங்கடிந்து இரந்தார்க்கு-பின் வறியரான காலத்தில் தம்மிடம் விட்டுப் பெயர்ந்து ஆங்காங்குப் போய் ஏற்றுத் திரிந்து பிறர்பால் இரந்தார்க்கு, நின்றார் கடைத்தலை வைத்தீயும் பலி-இரக்கப்படுவார் தம் தலைவாயிலில் வைத்தீயும் பிச்சையானது, உள்ளநாள் நல்லறம் செய்க என்னும் சாற்றன்றோ-செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் அறத்தை செய்க என்று அவர்க்குச் சொல்லும் சொல்லாகு மன்றோ?

(குறிப்பு) சாற்று-சொல், அன்று, ஓ: தேற்றப்பொருளன. செய்க+என்னும்=செய்கென்னும்: அகரந்தொகுத்தல் விகாரம்.        (35)

   
36. வயிற்றின் கொடுமை

ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக் கீந்தாலும் ஏலாய்--திருவாளா!
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே!
நின்னோடு வாழ்தலரிது.
(பதவுரை) இவ்வுடம்பே-இப் பசிநோயால் வருந்தும் வயிறே, ஒருநாளும் நீ தரியாய்-(உணவில்லாத காலத்தில்) ஒரு நாளாவது பொறுத்திராய், உண்ணென்று சொல்லி இரு நாளைக்கு ஈந்தாலும்-(நல்ல உணவை மிகுதியாகப் பெற்ற காலத்தில்) இதனை உண்பாயாக என்று கூறி இரண்டு நாளைக்கு வேண்டு வனவற்றை ஒரே தடவையில் கொடுத்தாலும், ஏலாய்-ஏற்றுக்கொள்ளாய், திருவாளா-திருவுடையோனே, உன்னோடு உறுதி பெரிது எனினும்-உன்னோடு சேர்ந்து வாழ்வதால் அடையும் பயன் சிறந்ததாயினும், நின்னோடு வாழ்தல் அரிது-உன்னோடு வாழ்வது துன்பமே.

(குறிப்பு) உடம்பு: இடவாகுபெயர். அரிது-கூடாது: கூடின் துன்பமே. ''ஒருநாளுணவை''எனத் தொடங்கும் நல்வழிச் செய்யுளை இதனோடு ஒப்பு நோக்குக. (36)

   
37. அறத்திற்கு இன்றியமையாதது அறிவே

கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடு மதுபோலும்--ஒட்டிய
காட்சி திரியி னறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம்.
(பதவுரை) கட்டளை-செங்கல் அறுக்கும் கருவி, கோடித்திரியின்- கோணலானால், கருதிய-அதனால் அறுக்கக் கருதிய, இட்டிகையும்-செங்கல்லும், கோடும்-கோணலாகும், அதுபோலும் -அதுபோல்,ஒட்டிய-பொருந்திய, காட்சி திரியின்-அறிவு வேறுபடின், அறம் திரியும்-அறம் வேறுபடும், என்று மாட்சியின் மிக்கவர் உரைப்பர்-என்று பெரியார் கூறுவர்.

(குறிப்பு) தாம்: அசைநிலை, இட்டிகையும்-உம்: இறந்தது தழுவிய எச்சவும்மை. (37)

   
38. அறநூலால் அறியவேண்டிய ஆறு பொருள்கள்

தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் றுணிவொடு பக்கம்--மலைவின்றி
நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார்.
(பதவுரை) நல் நெறியை-ஒழுக்க நெறியினை, காட்டி-விளக்கி, அறம் உரைப்பார்-அறநூலை உணர்த்துவோர், தலைமகனும்-அருகனும், நூலும்-மெய்ந்நூலும், முனியும்-துறவியும், பொருளும்-உண்மைப் பொருளும், தொலைவின் றுணிவு ஓடு-அழிவின் துணிவையும், பக்கம்-அருகனிடத்தன்பும், இவ்வாறும்-இவ்வாறு பொருள்களையும், மலைவு இன்றி காட்டி-மாறுபாடு அற்றவனாகக் கொண்டு, உரைப்பார்-சொல்லுவார்.

(குறிப்பு) தொலைவின் துணிவு-அழிவின் நிச்சயம். (38)

   
39. சமயம் நம்பிக்கையாலே நடைபெறுவ தென்பது

இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்றாற்றத்--துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம்.
(பதவுரை) சென்று-இல்லறத்தினின்று நீங்கி, ஆற்ற துறந் தார்கள் தம்பாலே-அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே, வாங்கி உரைத்ததனால்-பெற்றுச் சொன்னதனால், இறந்தும் பெரிய நூல்-மிகவும் சிறந்த நூல், எம்மதே-எம்முடையதே, தெய்வம் அறந்தானும் இஃதே-தெய்வமும் இதுவே அறமும் இதுவே, ஆராய்ந்து-நீவிரும் நன்கு ஆராய்ந்து, நல்ல அறம்-நல்ல அறமாகிய இதனை, நம்புக-நம்பி மேற்கொள்வீர்களாக.

(குறிப்பு) இதன்கண் அறத்தாலாகிய சமய முடிவு கூறப்பட்டுள்ளது. (39)

   
40. அகத்தூய்மையும் அருளுமே சிறந்த அறங்களாம்

ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந்-தொன்றோடொன்
றெவ்வா உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம்.
(பதவுரை) ஒன்றோடு ஒன்று ஒவ்வாத-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பாசண்டத்துள் எல்லாம்-புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று ஒவ்வா-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பொருள் தெரிந்து-பொருள் இவையென ஆராய்ந்தறிந்து, ஒன்றோடு ஒன்று ஒவ்வா-பலவகைப்பட்ட, உயிரோம்பி-உயிர்களைக் காத்து, உள்தூய்மை பெற்றதே-அகத்தூய்மை பெற்றதே, அவ்வாயது அறம் ஆகும்-சிறந்த அறமாகும்.

(குறிப்பு) ஏ-தேற்றப்பொருள் தரு மிடைச்சொல், உள்-அகம்; மனம். (40)