41 முதல் 50 வரை
 
41. உண்மை நூலை உணரு முறை

நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.
(பதவுரை) நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான்போல-பொன் வாங்குவோன் அதனைநிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்துவாங்குதல்போல, அறத்திறனும் ஆராய்ந்து உள்புக்கால்-அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால், பிறப்பு-பிறவியினை, அறுக்கும்-நீக்கும்படியான, மெய்நூல்-உண்மைநூலை, தலைப்படலாகும்-அடையலாம், கண் ஓடிக்கண்டதே கண்டு-கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின், ஆகாது-உண்மை நூலை அடைய இயலாது.

(குறிப்பு) அறுத்தல்-வெட்டிப்பார்த்தல், சுடல் - நெருப்பிலிட்டுக் காய்ச்சி நோக்கல். மற்று:அசைநிலை.ஏ: பிரி நிலைப்பொருள் தரும் இடைச்சொல். (41)

   
42. நடுநிலை காணு முறை

காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையோர் கண்ணதே--காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றாத தாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்.
(பதவுரை) காய்வதன்கண் உற்ற-வெறுக்கப்படும் பொருளி லுள்ள, குணம் தோன்றாததாகும்-குணம்ஆராய்வா னுக்குத் தோன்றாது. உவப்பதன்கண் -விரும்பப்படு வதன்கணுள்ள, குற்றமும் தோன்றாக்கெடும் - குற்றமும் தோன்றாது மறையுமாதலால்,காய்தல் உவத்தல் அகற்றி-வெறுப்பு விருப்புஇல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல், அறிவுடையோர் கண்ணதே-அறிவுடையார்செயலாகும்.

(குறிப்பு) ஏ: தேற்றப்பொருள் தருமிடைச்சொல், உம்மை இறந்தது தழுவியது. (42)

   

43. உண்மைத் துறவியினை உணரு முறை

துறந்தார் துறந்தில ரென்றறிய லாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம்--துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காண*லாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை.

(பா-ம்) *‘கொடுப்பவற்றார் காண’
(பதவுரை) துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம்-துறவிகள் மேற்கொண்டொழுகும் வேடத்தால், துறந்தார் துறந்திலர் என்று அறியலாகும்-பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம், அவர் உள்ளங் கிடந்தவகை-அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை, துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றால் காணலாம்-அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும் அறியலாம்.

(குறிப்பு) வேடம்-வேஷம், கொள்ளுதல்-பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக் கொண்டு மற்றவை விடல், கொடுத்தல். உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல். மற்று: அசை.                 (43)

   

44. உம்ப ருலகுக் குரியார் இவரென்பது

இந்தியக் கொல்கா விருமுத் தொழில்செய்தல்
சிந்தைதீ ரப்பியத்தின் மேலாக்கல்--பந்தம்
அரித லிவையெய்து* மாறொழுகு வார்க்கே
உரிதாகும் உம்ப ருலகு.
(பதவுரை) இந்தியக்கு-இந்திரியத்துக்கு, ஒல்கா-தளராத, இரு முத்தொழில் - இரண்டு மூன்றுமாகிய ஐந்து இந்திரியங்களின் தொழிலை, செய்தல்-இயற்றுதல், சிந்தை-அவாவினை, தீர-ஆற்ற, அப்பியத்தின்மேல் ஆக்கல்-வெறுத்து அறுத்தல், பந்தம்-பாசக்கட்டினை, அரிதல்-கெடுத்தல், இவை-ஆகிய இவை, எய்தும் ஆறு-பொருந்தும்படியாக, ஒழுகுவார்க்கே-நடக்கிறவர்களுக்கே, உம்பர் உலகு-மேலுலகம், உரி(த்)தாகும்-உரியதாகும்.

(குறிப்பு) இந்தியக்கு-இந்திரியத்துக்கு: அத்துச்சாரியை தொகை. இந்நூலாசிரியரே பின் இந்தியக் குஞ்சரத்தை ‘ஞானவிருங்கயிற்றால்’ என்று குறித்தலும் காண்க. இவ்வாசிரியர், ‘ஆர்வில் பொறி யைந்தில்’ என்பது போல், வள்ளுவரும், “உரனென்னுந் தோட்டியா னோரைந்தும் காப்பான். வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” எனக் கூறியிருத்த லுணர்க. அப்பியம்-அப்பிரியம் என்பதன் விகாரம். இனி அப்பியம் என்பதை அவ்வியம் என்பதின் திரிபாகக் கொண்டு அப்பியத்தின் மேலாக்கல் என்பதற்கு மனத்தைக் கோட்டமின்றிச் செய்தல் என்க. தீர்தல்-மிகுதல், உரித்து என்பது உரிது என எதுகை நோக்கி இடை குறைந்து வந்தது. இருமுத்தொழில் அறுவகைத் தொழிலுமாம். அவ்வியம்-அவியம் என்பதன் விரித்தல் விகாரமுமாம்.              (44)

  (பா-ம்)    * ‘வருவா ரிவையெய்து’
 

   
45. முனிவர் தொழில்

அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி தன்னியல்பே நாடும்--அழலதுபோல்
காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து.
(பதவுரை) அழல் அடையப்பட்டான் - சூரிய வெப்பத்தால் தெறப்பட்டவன், அதற்கு மாறுஆய - அதற்குப் பகையான நிழல் ஆதி தன்னியல்பே நாடும் - நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான். அழலது போல்-அதனைஅடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,காமம் ஆதியால் ஆம்-காமவெகுளி மயக்கங்களால் ஆகிய, கடுவினை கட்டு அழித்து-கொடியவினையாலாகிய தளையை அழித்து, போமாறுபுரிந்து செய்வார்-வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம் செய்வோரேமுனிவர் ஆவர்.

(குறிப்பு) நிழல் ஆதி- நிழல், நீர், காற்று, உணவு,உடை என்பன. (45)

   
46. ஒழுக்கமே விழுப்பம் தரும்

வெப்பத்தா லாய வியாதியை வெல்வதூ உம்
வெப்பமே என்னார் விதியறிவார்--வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய வொழுக்கு.
(பதவுரை) விதி அறிவார்-நோய் நீக்கும் நெறியினை அறிந்தோர், வெப்பத்தால் ஆய-வெப்பத்தினாலாகிய,வியாதியை-நோயை, வெல்வதூஉம்-போக்குவதும்,வெப்பமே என்னார்-வெப்பமே என்று சொல்லார்,வெப்பம் தணிப்பதுவும் தட்பமே-வெப்பத்தைப் போக்குவதும் குளிர்ச்சியே, (அதுபோல்) தான் செய்வினையை-தான் செய்த தீவினையை, துணிப்பதூஉம்-அழிப்பதும், தூய ஒழுக்கு-குற்றமற்ற ஒழுக்கமேயாகும்.

(குறிப்பு) தணிப்பதூஉம், வெல்வதூஉம், துணிப்பதூஉம் : இன்னிசை யளபெடைகள், ஏகாரம்: முன்னது அசை நிலை: பின்னது தோற்றம். (46)

   
47. பொய்ந் நூல்களின் இயல்பு

தத்தம திட்டம் திருட்ட மெனவிவற்றோ
டெத்திறத்தும் மாறாப் பொருளுரைப்பர்--பித்தரவர்
நூல்களும் பொய்யேயந் நூல்விதியி நோற்பவரும்
மால்கள் எனவுணரற் பாற்று.
(பதவுரை) பொருள்-தாம் கூறும் பொருள்களை, தத்தமது - தங்கள் தங்கள், இட்டம்-விருப்பம், திருட்டம்-காட்சி, என இவற்றோடு-என்ற இவையோடு, எத்திறத்திலும் மாறா உரைப்பர்-ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களை,பித்தர் என-பைத்தியக்காரர் எனவும், அவர் நூல்களும்பொய்யே என-அவர் கூறும் நூல் களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல் விதியின்நோற்பவரும் -அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும்,மால்கள் என-மயக்கமுடையார் எனவும், உணரற்பாற்று-உணர்தல் வேண்டும்.

(குறிப்பு) இட்டம்-இஷ்டம்: மனத்தே கண்டது. திருட்டம்-திருஷ்டியிற் படுவது; காட்சி. ஏ: தேற்றப்பொருள். (47)

   
48. மெய்யுணர்வு நற்கதிக் கின்றியமையாமை

குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முள்
தெருட்டி வழி *சொல்லிச் சேறல்--திருட்டேட்டம்
மாறு கொளக்கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பா ரியல்பு.
(பதவுரை) திருட்டம்-ஐம்புலக் காட்சியும், இட்டம்- உள்ள உணர்ச்சியும், மாறுகொளக் கிடந்த மார்க்கத் தால் - செலுத்தும் நெறிகள் மெய்ந் நெறிகளின் மாறுபடக்கிடப்பதை (அறியாமல்) அந்நெறியிற் சென்று நற்கதியில் ஏறுதும் என்பார். இயல்பு-நற்கதியை அடையக்கருதுவோர் செயல், குருட்டுச் செவிடர் கள்-குருடுஞ்செவிடுமாகிய இரு தன்மையையும் ஒருங்கே அடைந்த இருவர், கோல்விட்டு-கோலினு தவியாலும், தம்முள் வழி தெருட்டிச் சொல்லி-ஒருவருக்கொருவர் வழியின தியல்பைவிளக்கிக்கொண்டும், சேறல்-குறித்த இடத்தினை அடையக்கருதிச் செல்லு தலை நிகர்க்கும்.

(குறிப்பு) திருட்டம்-பார்வை: உபலக்கணத்தல் ஐம்புலக்காட்சியினை யுணர்த்தியது. இட்டம் - கருத்து. திருட்ட+ இட்டம்=திருட்டேட்டம்: வடமொழிக் குணசந்தி. சேரல்=செல் + தல். ஏறுதும்: தன்மைப்பன்மை வினைமுற்று. (48)

   
49. அறவுரையை உரைப்பவரும் கேட்பவரும்

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந் தறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே--மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து.
(பா-ம்.) *தெருட்டு வழி
(பதவுரை) கற்று அறிந்த மாந்தர்-மெய்ப்பொருளைக்கற்றுத் தெளிந்த மாந்தர், அற்றறியும் காரணத்தை-பற்றற்றுத் துறந்து அறியவேண்டிய மெய்ந் நூல்களை அறியும் காரணத்தையும், அறவுரையை - அறப் பொருளையும், ஆராய்ந்து உரைப்ப - ஆராய்ச்சி செய்து உரைப்பர். அதனை-அவ்வுரையை, மாட்சி புரிந்த மதியுடையாளரே-நற்குணமிக்க அறிவுடையவர்களே,கெழுமி இருந்து-உளமிசைந்து உரிமை யுடன், கேட்பர்-கேட்பராவர்.

(குறிப்பு) அறுதல்-பற்றொழிதல். அறவுரை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ: முன்னது அசைநிலை;பின்னது பிரிநிலை. (49)

   
50. வீட்டினை அடையும் வழி

உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில் தலைமகனோ டின்ன--ஒருவாறு
கண்டு கருதிக் கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டுவீ டேற்க வறம்.
(பதவுரை) உருவும் வடிவமும் ஒழுக்கமும்-நன்னடக்கையும், நூலும்-உரைக்கும் நூலும், பொருளும்-அந்நூலுட் கூறப்படும் பொருளும், பொருவில் தலைமகனோடு இன்ன-ஒப்பில்லாதுயர்ந்த இறைவனுமாகியஇவற்றை, ஒருவாது - நீங்காது, கண்டு - ஆராய்ந்து, கருதி-சிந்தித்து, கயக்கு அற தேர்ந்த பின்-கலக்கமில்லாதுணர்ந்த பின்னர், அறம் கொண்டு-அறத்தினை மேற்கொண்டு, வீடு ஏற்க-முத்தியை அடைய முயல்க.

(குறிப்பு) உருவு-தொலைப் பொருள்களின் வடிவினையுணருங் காட்சியறிவு. ஏற்க: வியங்கோள் வினை. (50)