61 முதல் 70 வரை
 

61. அறுவகைப் பெரியோர்கள்

மன்ன னுடன்வயிறு மாண்புடைத் தாய்தந்தை
முன்னி முடிக்கு முனியாசான்-பன்னியங்
காய குரவர் இவரென்ப வையத்துத்
தூய குலஞ்சாதி யார்க்கு.
(பதவுரை) வையத்து-இப்பூமியில், தூய குலம்-அழுக்கற்ற குல நலனும், சாதியார்க்கு-சாதி நலனும் உடையவர்க்கு, மன்னனுடன்-மன்னனும், வயிறு மாண்புடைத் தாய் தந்தை-தம்மைப் பெறலால் மேம்பட்ட தாய் தந்தையரும், முன்னிமுடிக்கு முனி-கருகியதை முடித்தேவிடும் ஆற்றலுடைய துறவியும், ஆசான்-குருவும், பன்னி-அவர் பத்தினியும், ஆய இவர்-ஆகிய இவர்களே, குரவர் என்ப-குரவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

(குறிப்பு) “மாண்பு வயிறுடைத் தாய்” எனக் கோடலுமாம்.  அங்கு-ஆங்கு: அசைநிலை குறுக்கல் விகாரம்.         (61)

   

62. கோள்மொழி கேட்கும் குணமிலிகள்

கண்டதனைத் தேறா தவனுங் கனாக்கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள்விற்பக் கொள்ளாநின் றார்.
(பதவுரை) வையத்து-பூமியில், கோள்-பொய்யை, விற்ப-மெய்யென்று கூறி விற்க, கொள்ளாநின்றார்-அதனை விலை கொடுத்து வாங்குவோர், கண்டதனை-தானே நேரில் பார்த்ததை, தேறாதவனும்-தெளியாதவனும், கனாக் கண்டு பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-கனவில் தன் மனைவி அயலானைச் சேர்ந்திருக்கக் கண்டு அதனை உண்மையென மயங்கி அவளைக்கொன்றவனும், பண்டிதனாய் வாழ்விப்பக்கொண்டானும்-பண்டிதனாக இருந்தும் தனது நல்வாழ்க்கைக்குப் பிறருதவியை நாடுபவனும், போல்வர்-போன்று அறிவிலிகளேயாவர்.

(குறிப்பு) கோள், பிறர்மேல் இல்லது கூறலாதலின் பொய் எனப்பட்டது. (62)

   

63. பாசண்டி மூடம்

தோல்காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு-வேலொடு
பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும்.
(பதவுரை) தோல் காவி சீரை துணி கீழ்விழ உடுத்தல்-தோல் கல்லாடை மரவுரி துணி இவைகளைக் கீழே விழுமாறு உடுத்தலும், கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு பல் என்பு தாங்குதல்-தண்டு காவடி கமண்டலம் குடை செருப்பு வேல் பல் எலும்பு இவற்றை மேற்கொள்ளுதலுமாகிய இவை, பாசண்டி மூடமாய் நல்லவரால் நாட்டப்படும்-புறச் சமயிகளது அறியாமையாகப் பெரியோர்களால் சொல்லப்படும்.

(குறிப்பு) தோல்-புலித்தோல், மான்தோல் முதலியவற்றாலாகிய ஆடை.  துணி-நூலாடை.  கல்லாடை-காவியுடை.  கீழ் விழ உடுத்தல்-பாதங்கள் வரை படியுமாறு கட்டிக்கொள்ளுதல், பல் எலும்பு-பற்களாகிய எலும்பு அன்றி, புலிப்பற்களும்-மக்களுடலெலும்புமாம்  (63)

   

64. வெளிக்கோலத்தின் வீண்

ஆவரண மின்றி அடுவாளும் ஆனைதேர்
மாவரண மின்றி மலைவானும்-தாவில்
கழுதை யிலண்டஞ் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.
(பதவுரை) ஆவரணமின்றி அடு வாளும்-கேடகமின்றிப் போரில் பகைவரைக் கொல்லும் வாளும், ஆனை தேர் மா அரணம் இன்றி மலைவானும்-யானை தேர் குதிரை முதலிய படைகளும் அரணுமின்றிப் போர் செய்யும் வீரன் செயலும், தா இல் கழுதையில் அண்டம் சுமந்தானும் போல-குற்றமற்ற கழுதையில் ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவன் செயலும்போல், பாசண்டியார்க்குப் பழுதாகும்-போலித் துறவிகளுக்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயனற்றதாகும்.

(குறிப்பு) கேடகமின்றி மேற்கொள்ளும் வாள், போரில் பயன்படாதென்பதாம்.  கோவேறு கழுதை யென்பார், “தாவில் கழுதை” என்றார்.  கழுதை+இலண்டம் எனப் பிரித்து, கழுதைச் சாணம் எனலுமாம். (64)

   

65. எண்வகைச் செருக்கு

அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறுவலி நற்றவ மோங்கிய செல்வம்
பொறிவனப்பின் எம்போல்வா ரில்லென்னு மெட்டும்
இறுதிக்கண் ஏமாப் பில.
(பதவுரை) அறிவுடைமை-அறிவாலும், மீக்கூற்றம்-புகழாலும், ஆன குலனே-உயர்ந்த பிறப்பாலும்.  உறுவலி-மிக்க வலிமையாலும், நல் தவம்-நல்ல தவத்தாலும், ஓங்கிய செல்வம்-உயர்ந்த செல்வத்தாலும், பொறி வனப்பின்-நல்லூழாலும் உடல் அழகாலும், எம்போல்வார் இல் என்னும்-எம்மைப் போன்றவர் இல்லையென்று கூறி மகிழும், எட்டும்-எட்டுவிதமான செருக்கும், இறுதிக்கண்-முடிவில், ஏமாப்பு இல-இன்பம் செய்யாவாம்.

(குறிப்பு) மீக்கூறு-மேம்படக் கூறும் புகழ்: அம்: தொழிற் பெயர் விகுதி.  பொறி-ஊழ்.  வனப்பு-மேனியழகு. ஏமாப்பு-பாதுகாப்பு; இன்பம்.    (65)

   

66. சினத்தா லாம்பயன் சிறிது மின்று

உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற் றுண்ண
இழந்திழந் தைங்கணுந் தோன்றச்-சுழன்றுழன்ற
சுற்றத்தா ரல்லாதா ரில்லையால் நன்னெஞ்சே
செற்றத்தால் செய்வ துரை,
(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, உழந்து உழந்து-முயன்று முயன்று, கொண்ட-நாம் அடைந்த, உடம்பினை-உடல்களை, கூற்று உண்ண-எமன் உண்ண, இழந்து இழந்து-பலகாலும் இழந்து, எங்கணும்-எல்லாவிடத்தும், தோன்ற-பிறத்தலால், சுழன்று உழன்ற-உலக வாழ்க்கையில் நம்மொடு கூடிச் சுழன்று தடுமாறித் திரிந்த மக்களில், சுற்றத்தா ரல்லாதாரில்லை-உறவினரல்லாதார் வேறொருவருமில்லை; (அங்ஙனமாயின்), செற்றத்தால் செய்வது உரை-பிறர்பால் கொள்ளும் வெகுளியால் நீ செய்வது யாதோ? சொல்.

(குறிப்பு) உழந்துழந்து, இழந்திழந்து: அடுக்குத் தொடர்கள்; பன்மை கருதின.  கூற்று-உயிரினையும் உடலினையிம் கூறாக்கிப் பிரிப்பது எமன்.  ஆல் அசைநிலை.  “சுற்றிச் சுற்றிப் பார்ப்போமாயின், தோட்டியும் நமக்கு உதவுவான்” என்ற பழமொழிப் பொருளை ஈண்டுக்கொண்டு நோக்குக. (66)


   

67. சினத்தினை நீக்கிக் குணத்தினைக் கொள்க

உயிரும் உடம்பும் பிரிவுண்மை யுள்ளிச்
செயிருஞ் சினமுங் கடிந்து-பயிரிடைப்
புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன் போல்
நற்பயன் கொண்டிருக்கற் பாற்று.

(பதவுரை) உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி-உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து-பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல்-பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து-மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன்கொண்டு இருக்கற்பாற்று-இன்பத்துக்கேதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

(குறிப்பு) உயிரு முடம்பும் பிரிவுண்மை-உடனிலையாமை, இடை: ஏழனுருபு.  நல்வினையினை அதன் காரியமாகிய பயனாகக் கூறியுள்ளார்.  கடிதல்-விலக்கல்.  (67)


   

68. நற்காட்சிக்குரிய எண்வகை உறுப்புகள்

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல்-மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கஞ் செய்தலோ
டென்றிவை எட்டாம் உறுப்பு.

(பதவுரை) ஐயம்-சந்தேகமும், அவா-ஆசையும், உவர்ப்பு-வெறுப்பும், மயக்கு இன்மை-மயக்கமுமாகிய இவை யில்லாமையும், செய்பழி நீக்கல்- பழியாயினவற்றினின்று உள்ளத்தை மீட்டலும், நிறுத்துதல்-மனமொழி மெய்களை நன்னெறியில் நிறுத்துதலும், மெய்யாக அன்புடைமை-உயிர்களிடத்து மாறாத அருளுடைமையும், ஆன்ற அறவிளக்கம் செய்தல் ஓடு-சிறந்த அறத்தினைப் பலர்க்கும் விளக்குதலுடனே, என்ற இவை எட்டாம் உறுப்பு-ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

(குறிப்பு) நற்காட்சி மன அமைதியாலுண்டாம் அரிய கடவுள் தோற்றம்.  இதனை, “மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி யென்றுரைப்பர், எப்பொருளும் கண்டுணர்ந்தார்” என்ற அருங்கலச் செப்புச் செய்யுளால் தெளிக.  ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை என இன்மையை மூன்றிடத்தும் கூட்டுக.  உறுப்பு-பயனுறுங் கருவிகள்.  என்ற+இவை=என்றிவை அகரந் தொகுத்தல்.    (68)


   

69. அறத்தின் இன்றியமையாமை

மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்க ளறிவும் அறிவரிது-மக்கள்
அறிவ தறிந்தா ரறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகு வார்.

(பதவுரை) மக்கள் உடம்பு பெறற்கரிது-மக்கட் பிறப்பினை அடைதல் அருமை, பெற்றபின்-பிறந்தாலும், மக்கள் அறிவும் அறிவு அரிது-மக்களுணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை, மக்கள் அறிவது அறிந்தார்-ஆறறிவினையுமுடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர், அறத்தின் வழுவார்-அறநெறியிற் சிறிதும் வழுவார்.  நெறிதலை நின்று ஒழுகுவார்-அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கேற்ப நடப்பார்.

(குறிப்பு) “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையு முடையராய்’ என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது.  அறிந்தார்: வினையாலணையும் பெயர்.  வழுவார் முற்றெச்சம்.  (69)

   

70. ஒழுக்கமே உயர்வளிக்கும்

பிறந்த இடநினைப்பின் பேர்த்துள்ள லாகா
மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே!-சிறந்த
ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப் புடைத்து,

(பதவுரை) மாண்பு ஒழியும் நெஞ்சே-பெருமையிலாத நேஞ்சே!, பிறந்த இடம்-இதற்குமுன் பிறந்த இடங்களை, நினைப்பின்-நீ நினைந்து பார்க்கின், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா-அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து-புழுக்கள் கூடி வாழுமிடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டாம் மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி-பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப்போதி-துன்பத்தினின்றும் உய்தி.

(குறிப்பு) உடைத்தல்-நொறுக்குதல்; கெடுத்தல்.  உய்தல்-தப்பிப் பிழைத்தல்.  போதி: இகரவிகுதி பெற்ற ஏவலொருமை வினைமுற்று.  அன்று, ஏ: அசைநிலைகள்.      (70)