71 முதல் 80 வரை
 

71. கற்றவர்க்குரிய நெறி

தேசுந் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றா ரினத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி.

(பதவுரை) தேசும்-கீர்த்தியும், திறன் அறிந்த திட்பமும்-நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து-மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்தகத்து மாசு இல்லாமை-மனத்திடைக் குற்றமில்லாமல், ஆசு இன்றிக் கற்றல்-மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், கடன் அறிதல்-தனது கடமையை அறிதலும், கற்றா ரினத்தராய் நிற்றல்-கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி-எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

(குறிப்பு) இல்லாமை: எதிர்மறை வினையெச்சம்.  வரைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.  ஏ: அசைநிலை.  (71)

   

72. மக்கட்குக் கல்வியின் இன்றியமையாமை

எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பிற் பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

(பதவுரை) எப்பிறப்பாயினும்-வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட்பிறப்பின்-மக்கட் பிறப்பினைப் போல, ஒருவற்கு-ஒருவனுக்கு, ஏமாப்பு-இன்பம் செய்வது, பிறிது இல்லை, - வேறு ஒன்று இல்லை, அப்பிறப்பில்-அம் மக்கட் பிறப்பில், கற்றலும்-கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவை கேட்டலும்-கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்டதன்கண் நிற்றலும்-கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும், கூடப்பெறின்-கூடப் பெற்றால்.

(குறிப்பு) “பெறின்பிறிதில்லை” என முடிக்க. பெறின்: எதிர்கால வினையெச்சம்.  கேட்ட+அதன்கண்=கேட்டதன்கண்: அகரந் தொகுத்தல் விகாரம்.           (72)

   

73. கல்விக்கழகு கரவின்றி வாழல்

கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத்-தெற்றென
நெஞ்சத்துட் டீமையெழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று.

(பதவுரை) கற்றது கற்று ஒருபால் நிற்பவும்-கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலாய அறிவு ஒழுக்கத்திற் கலவாது ஒருபுறம் நிற்கவும், கடைப்பிடி மற்றொருபால் போகவும்-எடுத்தகருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் றுணிபுகளிற் றிறம்பிமற்றொருபுறஞ் செல்லவும், மறித்திட்டு-நல்வழிச் செலவைத் தடுத்து, நெஞ்சத்துள்-மனத்தின்கண்ணே, தெற்றென-கடுக, தீமைஎழுதருமேல்-தீய எண்ணந் தோன்றுமாயின், கஞ்சத்துள்-தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள், கல் பட்டால் போன்று-பொருந்திய கல்லே போல, இன்னாது-அது மிகத் துன்பந் தருவதாகும்.


(குறிப்பு) கரவு-தீய எண்ணம். எழுதரல்-எழுதல;் தரு: துணைவினை, கஞ்சத்துள்-அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவினிடத்தே எனலுமாம். (73)

   

74. கற்றவர் செய்யுந் தவற்றினைப் பலரும் காண்பர்

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு.

(பதவுரை) விதிப்பட்ட நூல் உணர்ந்து-ஒழுக்க நூல்களை உணர்ந்து, வேற்றுமை நீக்கி-அவைகளுக் குடன்பாடாகாதனவற்றைச் செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை-ஞான நூல்களை, கை இகந்து-எல்லையில்லாமல், ஆக்கி-உலகோர் பொருட்டுச் செய்து, பதிப்பட்டு வாழ்வார்-இறைவனையடைய விரும்பி வாழ்கின்றவர், பழியாய செயதல்-பிறர் பழித்தற் கேதுவான செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில் பட்ட மறு-சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே யாகும்.


(குறிப்பு) வேற்றுமை-மதவேறுபாடு முதலியன எனலுமாம்.  பதிப்பட்டு-மனவமைதியுற்று எனலுமாம். வாழ்வார் வினையாலணையும் பெயர்.  (74)

   

75. கற்றறிமூடரைக் கண்டு விலகுக

பற்றொடு செற்றம் பயமின்றிப் பலபொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவி னாரை
அடையா ரறிவுடை யார்.

(பதவுரை) பற்றொடு செற்றம்பயமின்றி-ஆசையும்பகையும் அச்சமும் இல்லாமல், பல்பொருளும்-பல பொருள்களினியல்பும், முற்ற உணர்ந்தான் மொழிந்தன-விடாது அறிந்த அருகக்கடவுள் கூறியவற்றை, கற்றும்-படித்தும், கடையாய-பழிக்கப்படுவனவற்றை, செய்தொழுகும்-செய்தொழுகின்ற, காரறிவினாரை-அறிவில்லாதவர்களை, அறிவுடையார் அடையார்-அறிவுடை யவர்களைடையார்கள்.

(குறிப்பு) முற்ற உணர்ந்தான்-முழுவது முணர்ந்த இறைவன் எனலுமாம்.  உணர்ந்தான், மொழிந்தன: வினையாலணையும் பெயர்கள்.  கருமை+ அறிவு= காரறிவு, கரிய அறிவு, அறிவின்மை    (75)

   

76. கல்வி முதலியன செல்வங்கட்குக் காரணமாம்

நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.

(பதவுரை) சிறந்தார் பின் ஆயினும்-தன்னை நேசிப்பவர்களிடத்திலாயினும், நல்வினைப் பின் அல்லால்-நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள்-செல்லாள், நல்லவினை-அந்நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல் இல்லை.

(குறிப்பு) நறுந்தாமரை-அழகின் நலமிக்க செந்தாமரை,  ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர்.  வழி ஏழனுருபு.  தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய தருமம்.          (76)

   

77. தன்னை உயர்த்துங் கருவி தானே யாவன்

தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான்.

(பதவுரை) நெறி நிற்பில்-ஒருவன் நன்னெறிக்கண் நிற்பானாயின், தன்னின் தெய்வம் பிறிதில்லை-அவனின் வேறான தெய்வம் ஒன்று இல்லை, தான் ஒன்றானும் நெறிநில்லானேல்-அவன் ஒருவிதத்திலும் நன்னெறிக்கண் நில்லானாயின், அவனிற்றாழ்ந்தது வேறொன்றில்லை, தன்னை இறைவனாச் செய்வானும் தானே-தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும் தான்-தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்துகொள்பவனும் தானே யாவன்.

(குறிப்பு) தானே-ஏ: பிரிநிலைப் பொருள்.  “நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம்.     (77)

   

78. தீவினையை ஒழித்து நல்வினையை நாடுவாயாக

அஞ்சினா யேனு மடைவ தடையுங்காண்
துஞ்சினா யென்று வினைவிடா-நெஞ்சே
அழுதா யெனக்கருதிக் கூற்றொழியா தாற்றத்
தொழுதேன் நிறையுடையை யாகு.

(பதவுரை) நெஞ்சே அஞ்சினாயேனும்-மனமே! துன்பத்தைக் கண்டு அச்சமுற்றாயானாலும், அடைவது அடையும் காண்-வரும் துன்பம் வந்தே சேரும், துஞ்சினாய் என்று வினை விடா-தீவினைப் பயனைப் பொறாமல் இறந்தாயென்று கருதிச் செய்த வினைகள் மறுபிறப்பில் உன்னைத் தொடராமலிரா, அழுதாயெனக் கருதி-இறப்புக் கஞ்சி அழுதாய் என்று கருதி, கூற்று ஒழியாது-வந்த யமன் உயிரைக்  கவராது நீங்கான்: (ஆதலால்), ஆற்றத் தொழுதேன்-உன்னை மிக வணங்குகின்றேன், நிறை உடையை ஆகு-நிறையுடையை ஆகுவாயாக.

(குறிப்பு) நிறை-மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள், ஆகு: ஏவலொருமை வினைமுற்று. (78)

   

79. தற்புகழ்ச்சியினை யொழிப்பாயாக

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்.

(பதவுரை) அலர் கதிர் ஞாயிற்றை-பரந்தகதிர்களையுடைய சூரியனை, கைக் குடையும் காக்கும்-கையிலுள்ள சிறிய குடையும் மறைக்கும்; (ஆதலால்) யாம் பல கற்றோம் என்று-யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று, தற்புகழ வேண்டா-ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாகாது, பல கற்றார்க்கு-பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும், அச்சு ஆணி அன்னது ஓர் சொல்-அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல், சில கற்றார் கண்ணும் உளவாம்-சில நூல்களைப் பயின்றாரிடத்து உளவாதலும் உண்டு.


(குறிப்பு) கைக்குடையும், சிலகற்றார் கண்ணும்: உம்மைகள் இழிவு சிறப்புப் பொருளை அச்சு ஆணி-தேர்ச் சக்கரத்தின் இருசில் கோக்கும் ஒருவகை இருப்பாணி; அது சக்கரத்தினைக் கழன்றோடவிடாமல் காக்கவல்லது.   (79)

   
80.   பொறுமையினை மேற்கொள்ளு முறை

தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப்
பின்னை யுரையாப் பெருமையான்-முன்னை
வினைப்பயனு மாயிற்றா மென்றதன்கண் மெய்ம்மை
நினைத்தொழிய நெஞ்சினோ யில்.
 
(பதவுரை)  ஒருவன் தன்னை இகழ்ந்து உரைப்பின்-ஒருவன் தன்னை இகழ்ந்து கூறினால், பின்னை-பின்னர், தான்-தானும், அவனை உரையாப் பெருமையான்-அவனை இகழ்ந்து கூறாத பெருமையை உடையோன், முன்னை வினைப்பயனும் ஆயிற்றாம் என்று-முற்பிறப்பில் தான் செய்த தீவினைப்பயனும் இதனால் முடிந்தது என்று, அதன்கண் மெய்ம்மை நினைத்து ஒழிய-அதன் உண்மையை நினைத்து அதனைக் கருதாதொழிய, நெஞ்சில் நோய் இல்-அவன் மனத்தின் கண்ணும் துன்பம் இலவாம்.

(குறிப்பு) உரையா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  நோய்-வருத்தம்; துன்பம்.  “நெஞ்சினும்” எனற்பாலது தொகுத்தல் பெற்று, ‘நெஞ்சின்’ என நின்றது.  (80)