81 முதல் 90 வரை
 
81.    பொறுமையே சிறந்த தவமாகும்

எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும்-மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று* வேண்டா தவம்.
 
(பதவுரை)  பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல்-தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல்.  கொள்ளி வைத்தாற் போல்-நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும்-தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால்-அறிவாகிய நீரால், மெள்ள-அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின்-அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும்-வேறு தவம் ஒன்றும், வேண்டா-செய்ய வேண்டுவதில்லை.

(குறிப்பு) கொள்ளி-எரிகின்ற கொள்ளிக்கட்டை, இன்னாச் சொல்-வசை மொழி; துன்பம் விளைத்தலின் அங்ஙனம் கூறப்பட்டுள்ளது.  மெள்ள: குறிப்புவினையெச்சம்.   (81)

   
82.  கடுஞ்சொல் களைகணையும் ஒழிக்கும்

நம்மைப் பிறர்சொல்லும் சொல்லிவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவையென் றெண்ணி
உரைகள் பரியர் துரைப்பாரில் யாரே
களைகண தில்லா தவர்.
 
*பிறிதெனினும்
 
(பதவுரை)  நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை-நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை-நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி-என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில்-தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொற் கூறுவராயின் அவரைப்போல், யாரே களைகணது இல்லாதவர்-பற்றுக் கோடற்றவர் பிறர் யார்? ஒருவருமிலர்.

(குறிப்பு) களைகண்-ஆதரவு: பற்றுக்கோடு இல்: ஐந்தனுருபு: ஒப்புப்பொருள்.  ஏ: எதிர்றை வினாவிடைச் சொல்.  அது: சாரியை.  (82)

   
83.  முற்பகல் செய்வன பிற்பகல் விளையும்

பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத்-தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்து முளவோ பிற.
 
(பதவுரை)  பிறர்க்கு இன்னா செய்தலின்-மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும், பேதைமை இல்லை-அறியாமை வேறு ஒன்று இல்லை, பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு-மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னாவித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்-தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ-பிற அறியாமைதான் வேறு உண்டோ? நீயே கூறு.

(குறிப்பு) இன்: இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருள்.  “வேலிக்கிடு முள் காலுக்காம்” என்பது பழமொழி.  ஓ: எதிர்மறை வினாவிடைச் சொல்.   (83)

   
84.  புறங்கூறலின் இழிவு

முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை
 
(பதவுரை)  தேவர் விழித்து இமையார் நின்ற நிலை-தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று-ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக-கல்லும் உருகுமாறு முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து-முகமலர்ந்து வாயால் இன்சொற்கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று-அவள் அகன்ற பின்னர், இழித்துரைக்கும்-அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே-கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும்.

(குறிப்பு) அஞ்சியே: ஏகாரம் தேற்றப்பொருள் கொண்டுள்ளது.  தேவர்கள் இயல்பிலே இமையாமல் நின்ற நிலையினை இங்ஙனத் தொடர்புபடுத்திக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம்.  கயவர்களைச் சான்றோர் என்றது இழிவுபறறியாம். (84)

   
85.  புறங்கூறாமையின் உயர்வு

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும்-மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.
 
(பதவுரை)  புறனுரையைத் தன்மேல் படாமை தவிர்ப்பான்-புறங்கூறலாகிய தீமை தன்கண் நிகழாமல் காப்பவன், பொய்ம்மேற்கிடவாத நாவும்-பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய்ம்மேல் பிணிப் பண்பு அழியாமையும்-மெய் பேசுதலில் பிணிப்புண்டிருக்கும் பண்புடைமை நீங்காமையையும், பெற்ற பொழுதே-பெற்றவப்போதே, தணிக்கு மருந்து தலை-பிறவிப் பிணி தணிக்குந் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

(குறிப்பு) “தவிர்ப்பானும்” என்பதன்கண் உள்ள உம்மையைப் பிரித்தெடுத்து, “பண்பழியாமையும்”எனக் கூட்டுக. பொழுதே: ஏகாரம் பிரிநிலைப் பொருளது.  (85)

   
86.  குடியால் உண்டாகுந் தீங்கு

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடைய ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து.
 
(பதவுரை)   களி என்னும் கட்டுரையால்-"கட்குடியன்" என்னும் பொருள்சேர் பழிச்சொல்லால், கோதப்படுமேல்-ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால், ஒளியும்-எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும், ஒளி சான்ற செய்கையும்-அம் மதிப்பினுக்கேற்ற செயலும், சான்றோர் தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் "இவர் தெளிந்த அறிவினையுடையவர்" என்று கூறும் புகழும், இவையெல்லாம்-ஆகிய இவை யெல்லாம், வேறாய்-வேறுபட்டு, விரைந்து-விரைவில், விட்டொழியும்-அவனை விட்டு நீங்கும்.

(குறிப்பு) கோதப்படல்-குற்றப்படுத்தப்படல்.  களி=கள்+இ; கள்ளினை உட் கொள்பவன்; இ: வினைமுதற்பொருள் தரும் விகுதி.       (86)

   
87.  சூதுப் போரால் விளையும் தீமை

ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை யெனப்படும் மேன்மையும்-சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை.
 
(பதவுரை)   சூது பொரும் என்னும் சொல்லினால்-சூதாடுவான் என்னும் பழியால், புல்லப்படுமேல்-ஒருவன் பற்றப்படுவானாயின், ஓதலும்-அறிவு நூல்களைக் கற்றலும், ஓதி உணர்தலும்-கற்றவற்றை ஆராய்தலும், மேதை எனப்படும் மேன்மையும்-அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும், இவை ஒருங்கே-ஆகிய இவை முழுதும், இருளாம்-அவனை விட்டு மறையும்.

(குறிப்பு) பொருதல்-போர் செய்தல்; ஆடுதல், சூதுப் போரால் அறிவு மழுங்கி விடும் என்பது கருத்து,       (87)

   
88. மானங் கெடின் மடிதலே நன்று

தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால்
உணற்கு விரும்புங் குடரை-வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பத்தாங் கொள்வ தறிவு.
(பதவுரை) தனக்கு தகவு அல்ல செய்து-தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச் செய்து, ஓர் ஆற்றால் உணற்கு விரும்புங்குடரை-ஒருவாறு உண்ணுதலை விரும்புகின்ற குடலை, ஆம்பம்தாள் வாடலேபோல-நீரற்றவிடத்தில் ஆம்பற்கொடி வாடுதலே போல, வனப்பு அற-அழகு கெடவும், தேம்ப-இளைக்குமாறும், தாம் அகத்தடக்கிக்கொள்வது-தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது, அறிவு-அறிவுடைமையாகும்.

(குறிப்பு) குடர்-குடல்: இறுதிப்போலி.  கொள்வது தொழிற்பெயர்.  வனப்புற என்பதும் பாடம்.  ஆங்கு: அசைநிலை,      (88)

                              

   
89. பிறன்மனை விரும்பேல்

அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடைய னென்றுரைக்கும் தேசும்-பிறனில்
பிழைத்தா னெனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை.
(பதவுரை) பிறன் இல் பிழைத்தான் என-அயலான் மனைவியை விரும்பினான் என்று, பிறரால் பேசப்படுமேல்-மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும்-அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும்-அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே-இவை முழுவதும், இழுக்கு ஆம்-பழியாம்.

(குறிப்பு) இல்-மனையாள் இடவாகுபெயர்.  அறன் திறன் என்பன அறம், திறம் என்பவற்றின் போலி.  (89)

   
90. காமக் கருத்தின் கொடுமை

சாவாய்நீ நெஞ்சமே! சல்லிய வென்னைநீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கொட்டாய்-ஓவாதே
கட்டழித்துக் காமக் கடற்கென்னை ஈர்ப்பாயே
விட்டெழுங்கால் என்னாவாய் சொல்.
(பதவுரை) நெஞ்சமே நீ சாவாய்-மனமே! நீ கெடுவாயாக, சல்லிய என்னை-கலக்கமுற்ற என்னை, ஆவதன்கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய்-நன்னெறியில் ஒருசிறிதும் நிற்குமாறு விடாமல், ஓவாதே-ஒழிவின்றி, கட்டு அழித்து-உறுதியைக் கெடுத்து, காமக் கடற்கு-ஆசையாகிய கடலுக்கு, என்னை ஈர்ப்பாய்-என்னை இழுக்கின்றாய், விட்டெழுங்கால்-உன் பற்றைவிட்டு நான் எழுங்கால், நீ என் ஆவாய்-நீ யாது நிலையடைவாய், சொல்-அதனை எனக்குக் கூறு.

(குறிப்பு) ''ஒட்டாய்'' என்பது முற்றெச்சம்.  நிற்க+ஒட்டாய்-நிற்கொட்டாய்: அகரந் தொகுத்தல்.  ஈர்ப்பாயே என்பதில் 'ஏ' ஈற்றசை.  ஓவாதே என்ற எதிர்மறை வினையெச்சத்தில் ஓவு: பகுதி; ஏ: அசைநிலை.    (90)