91 முதல் 100 வரை
 
91. காமக் கருத்தை விலக்கல்

பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழிபெருங் காமநோய் வாங்கி-வழிபடா(து)
ஓடுமன னேவிடுத் தென்னை விரைந்துநீ
நாடிக்கொள் மற்றோ ரிடம்.
(பதவுரை) கழி பெருங் காமநோய் வாங்கி-மிகப் பெரிய ஆசை நோயை உட்கொண்டு, வழிபடாது-என் வழியே இணங்காமல், கன்றி ஓடும் மனனே-பெண்கள்பால் மிக்கு வருந்திச் செல்லுகின்ற மனமே!, நீ பழியொடு பாவத்தைப் பாராய்-நீ பழி பாவங்களைப் பாராய் (ஆதலால்), என்னை விடுத்து-என்னின் நீங்கி, மற்றோரிடம்-சேர்தற்குரிய வேறோரிடத்தை, நீ விரைந்து நாடிக்கொள்-நீ விரைந்து தேடியடைவாயாக.

(குறிப்பு) பழியொடு பாவம்-ஓடு: இடைச்சொல்; எண்ணும்மைப்பொருட்டு.  கழிபெரும்: மீமிசைச் சொல்; ஒரு பொருட் பன்மொழி; கழி: மிகுதிப்பொருள்தரு முரிச்சொல். (91)

 

   
92. காமிகள் மக்கள் எனக் கருதப்படார்

மக்களும் மக்களல் லாரும் எனஇரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம்-மக்கள்
அளக்குங் கருவிமற் றொண்பொருள் ஒன்றோ
துளக்குறு* வெள்வளையார் தோள்.
(பதவுரை) குண்டு நீர் வையகம்-ஆழமாகிய கடல் சூழ்ந்த உலகம், மக்களும் மக்களல்லாரும் என இரண்டு குப்பைத்தே-மனிதரும் மனிதரல்லாதாரும் என்ற இரண்டு குவியல்களை உடையது, மக்கள் அளக்குங் கருவி-மக்களை அளந்து காட்டுங் கருவிகள், ஒண் பொருள் ஒன்றோ துளக்குறுவெள் வளையார் தோள்-சிறந்த செல்வமும் விளக்குகின்ற சங்கவளையலை யணிந்த மகளிரது தோளுமாம்.

(குறிப்பு) குப்பைத்தே என்பதில் ''ஏ'' அசை, ''மற்று'' அசைநிலை. ''ஒன்றோ'' எண்ணிடைச்சொல். துளக்குறு என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. ''துளக்கறு'' என்ற பாடம் பொருளொடு பொருந்தாமை காண்க. பிறர்பொருள்களையும், பிறர் மனைவியரையும் விரும்பாதவர்களே மக்களாவர் என்பது கருத்து.           (92)

(பா-ம்) *துளக்கறு.

   
93. நன்னெறி காட்டுவோரே நட்பினராவர்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.
(பதவுரை) இம்மை-இப் பிறப்பில், அடக்கத்தைச் செய்து-மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து, புகழ் ஆக்கி-புகழினைப் பெருக்கி, உம்மை-மறுபிறப்பில், உயர்கதிக்கு உய்த்தலால்-வீடுபேற்றையடைவித்தலால் பட்டாங்கு-இயல்பாகவே, மெய்ம்மை அறம் உரைக்கும்-அத்தகைய உண்மை யறத்தினை உரைக்கும், பண்புடையாளரே-குணமுடையவர்களே, நட்டார் எனப்படுவார்-நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

(குறிப்பு) ஏகாரமிரண்டும் முறையே ஈற்றசையும், பிரிநிலையுமாம்.  எனப்படுவார்; எழுவாய் வேற்றுமையின் சொல்லுருபுமாம்.  (93)    

   
94. பிறநெறி விளக்குவார் பெருநட்பாளர்

நாட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பலபிறப்புத் துன்பமென்-றொட்டி
அறநெறி கைவிடா தாசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற் பவர்.
(பதவுரை) நாடுங்கால்-ஆராயுமிடத்து, நட்டார் எனப்படுவார்-நட்பினரெனப்படுதற்குரியார், வையத்து-பூமியில், பல பிறப்பு-பல பிறவிகளால், துன்பம் பட்டாம்-துன்பமடைந்தோம், என்று-என்று சொல்லி, ஒட்டி-துணிந்து, அறநெறி கைவிடாது- அறநெறியினைச் சோரவிடாது, ஆசாரம் காட்டி-ஒழுக்கத்தினையுணர்த்தி, பிறநெறி போக்கிற்பவர்-தீநெறியினின்றும் நீக்குபவரே யாவர்.

(குறிப்பு) கைவிடாது என்பதில், கைவிடு: பகுதி.  பட்டாம்: தன்மைப்பன்மை வினைமுற்று; தனித்தன்மைப் பன்மையுமாம்.  அறநெறி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (94) 

   
95. தந்நலமற்றோரே தனிப்பெறா நட்பினர்

நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
விட்டாரை யல்லால் கொளல்வேண்டா-விட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னன்னாய்! உய்ப்பர்
மறிதர வில்லாக் கதி.
(பதவுரை) நறுமென் கதுப்பினாய்-நறுமணம் பொருந்திய மெல்லிய கூந்தலையுடையாய்!, நட்டாரை வேண்டின்-நட்பினரையடைய விரும்பின், விட்டாரையல்லால் கொளல் வேண்டா-பற்றற்ற பெரியோர்களை யல்லது பிறரை நட்பினர்களாகக் கொள்ள வேண்டா, பொறி சுணங்கு மென்முலை பொன் அன்னாய்-பொலிவினையும் தேமலையும் மென்மையினையுங் கொண்ட கொங்கையினையுடைய இலக்குமி போன்றவளே!, விட்டார்-அப் பற்றற்ற பெரியோர்கள், மறிதரவில்லாக் கதி உய்ப்பர்-பிறவாமைக் கேதுவாகிய வீடுபேற்றினை யடைவிப்பர்.

(குறிப்பு) விடுதல்-ஈண்டுப் பற்றை விடுதல்; தன்னலமற்று வாழ்தல்.  மறிதல்-மடங்குதல்; திரும்புதல்,  கதுப்பினாய், பொன்னன்னாய்: மகடூஉ முன்னிலைகள். (95) 

   
96. தந்நலமற்ற பெரியோர் தாயினை யொப்பர்

காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
பாலொடு நெய்பெய்யும் தாயனையர்-சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகு வார்.
(பதவுரை) சால-மிக, அடக்கத்தை வேண்டி-அடங்கியிருக்குமாறு செய்யக் கருதி, நாளும்-ஒவ்வொரு நாளும், அறன் வலிது கொடுத்து-அறத்தினைத் தாமாகவே வற்புறுத்திக் கூறி, மேற் கொண்டு ஒழுகுவார்-அடக்கியாளும் பெரியோர், காலொடு கை அமுக்கி-காலையும் கையையும் ஆட்டாதவாறு இறுகப் பற்றிக் கொண்டு, வாய் நெறித்து-வாயைப் பிளந்து, பிள்ளையை-குழைந்தைக்கு, பாலொடு நெய் பெய்யும்-பாலையும் ஆமணக்கு நெய்யையும் அருத்துகின்ற, தாயனையர்-தாய்க்கு நேராவர்.

(குறிப்பு) ஒழுகுவார் தாயனைய ரென்க.  பிள்ளையை: உருபு மயக்கம்.  ''வாய்வெறித்து'' எனவும் பாடம்.  நெறித்தல்-சுண்டித் திறப்பித்தல்.  (96)                                       

   
97. பெரியோர் நட்பாற் செல்வம் பெருகும்

கழியும் பகலெல்லாம் காலை யெழுந்து
பழியொடு பாவம் படாமை-ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு.
(பதவுரை) கழியும் பகலெல்லாம்-கழிகின்ற நாட்களிலெல்லாம், காலை எழுந்து-அதிகாலையில் எழுந்து, பழியொடு பாவம் படாமை-பழி பாவங்களுக்குக் காரணமாகிய செயல்கள் தங்கண் நிகழாமல், ஒழுகினார்-ஒழுகின பெரியோர்களை, உய்க்கும்-தம்மாட்டு அடைவிக்கும், பொறியாரை- திருவுடையாரை, நாடி-தேடி, துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு-அனுபவித்தற்குரிய பொருள்கள் பலவுஞ் சேர்ந்து, உழிதரும்-அடையும்.

(குறிப்பு) பெரியார்களை அடைவிக்கும் நல்வினைச் செல்வமுடையாரைத் தேடி உலகத்திலுள்ள பொருளெல்லாம் தாமே அடையுமென்பதாம்.  படாமை: எதிர்மறை வினையெச்சம்.  ஒழுகினார்: வினையாலணையும் பெயர்.  (97)                                         

   
98. தீ நட்பினர் திருடர்களே யாவர்

காய உரைத்துக் கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம.
(பதவுரை) காய உரைத்து-சோர்வுற்றவழி மனமழுங்கக்கூறி, கருமஞ் சிதையாதார்-எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தக்கார்க்கு-பெரியோர்களுக்கு, தாயரோடு ஒவ்வாரோ-தாயை நிகர்வர், உள்ளம் உருக-கேட்போர் மனமுருகுமாறு, வாய் பணிந்து உரைத்த-வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, பொருள் கொள்வார்-உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள்; கள்ளரோடு ஒவ்வாரோ-திருடரை நிகர்வர்.

(குறிப்பு) ''ஒவ்வாரோ'' இரண்டெதிர்மறைகள் ஓர் உடன் பாட்டையுணர்த்தின.  தாம்: அசைநிலை.  காய உரைத்தல்-தவறு கண்டவழி இடித்துரைத்தல்.  ஒவ்வுதல்-ஒப்பாதல். (98)   

   
99. தீ நட்பினர் சேர்க்கை தீங்கே பயக்கும்


அறுதொழில் நீ்த்தாரை மெச்சா தவற்றோ(டு)
உறுநரைச் சார்ந்துய்யப் போதல்-இறுவரைமேல்
கண்ணின் முடவன் துணையாக நீள்கானம்
கண்ணிலான் சென்ற துடைத்து.
(பதவுரை) அறு தொழில் நீத்தாரை-அவ்விநயமாகிய அறு தொழில்களையும் விட்டவர்களை, மெச்சாது-விரும்பியடையாமல், அவற்றோடு உறுநரை-அவற்றைச் செய்தொழுகுகின்றவர்களை,சார்ந்து-அடைந்து, உய்யப்போதல்-பிறவிப் பிணியினின்றும் நீங்கக் கருதுதல், இறுவரை மேல்-கற்கள் நெருங்கின மலையின் மேல் உள்ள, நீள் கானம்-நீண்ட காட்டைக் கடத்தற்கு, கண்ணில் முடவன் துணையாக-கண்ணுங் காலுமில்லாத ஒருவனைத் துணையாகக்கொண்டு, கண்ணிலான் சென்றதுடைத்து-குருடன் போவதுபோலும்.

(குறிப்பு) அறுதொழில்:-அச்சம், ஆசை, இலௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம் என்பன.       (99)
                                              

   
100. தீ நட்பினர் சேர்க்கையால் பெரியோர் விட்டுப் பிரிவர்

குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச்
செற்ற முதலா உடையவரைத்-தெற்ற
அறிந்தாரென் றேத்து மவர்களைக் கண்டால்
துறந்தெழுவர் தூய்க்காட்சி யார்.
(பதவுரை) குற்றத்தை நன்று என்று கொண்டு-தீமையை நன்மையாகக் கருதி, குணமின்றி-நற்குணமென்பது சிறிதுமில்லாமல், செற்ற முதலா உடையவரை-வெகுளி முதலியன உடையவர்களை, தெற்ற-மாறுபட, அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்-அறிவாளிகள் என்று கருதித் துதிப்பவர்களைப் பார்த்தால், தூய்க் காட்சியார்-நல்ஞானமுடையோர், துறந்து எழுவர்-அவர்களை விட்டு நீங்குவர.

(குறிப்பு) தூய்க் காட்சியார் கண்டால், துறந்தெழுவர் என முடிக்க.  தெற்ற-தெளிவாக எனலுமாம்.                                      (100)