101 முதல் 110 வரை
|
|
101. ஊனினை ஒழித்தால்
ஊறுபாடில்லை |
- கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே
ஒழிய விடுவானேல்-என்றும் இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக்
குள்ளே படுத்தானாந் தன்னைத் தவம்.
(பதவுரை)
கொன்று-உயிர்களைக் கொன்று, ஊன்
நுகரும்-புலால் உண்ணும், கொடுமையை-தீச்செயலை,
உள் நினைந்து-மனத்தாலாராய்ந்து,
அன்றே-அப்பொழுதே, ஒழியவிடுவானேல்-புலாலுண்ணலை
முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என
உண்டோ-எக்காலத்தும் அவனைத் துன்பங்களணுகா, இவ்வாழ்க்கைக்
குள்ளே படுத்தானாம் தன்னைத் தவம-அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற
நெறியினின்று தவஞ் செய்வாரை நிகர்வன்.
(குறிப்பு)
புலாலுண்ணாமையொன்றே தவத்தாலாகும் பயன்களை அடைவிக்கு மென்பதாம்.
ஊன்-இறைச்சி: னகரவொற்றுச் சாரியை. ஓ: எதிர்மறை
வினா. (101) |
|
|
|
|
|
102. புலால் உண்ணல்
புத்தியற்ற காரியமாம்
|
- தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண்
வறுத்த வறைதின்பர்-அந்தோ! நடுநின் றுலக நயனிலா மாந்தர் வடுவன்றோ
செய்யும் வழக்கு.
(பதவுரை)
தம் புண் கழுவி மருந்திடுவர்-தமக்கொரு புண்வரின் உலகத்தவர் அதனை
நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர், தாம் பிறிதின் செம் புண்
வறுத்தவறைதின்பர்-ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய
இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர், அந்தோ-ஐயகோ!,
நடு நின்று-நடு நிலையாக நின்று, உலக நயன்
இலாமாந்தர்-உலக நீதியை உணராத மனிதர், செய்யும்
வழக்கு-செய்யும் முறைமை, வடு
அன்றோ-குற்றமேயாகும்.
(குறிப்பு)
வறை-ஐ: செயப்படுபொருளுணர்த்தும் விகுதி. நயம்-நயன்; நீதி:
இறுதிப்போலி. அந்தோ: இரக்கக் குறிப்பு. அன்று, ஓ:
தேற்றப்பொருளன. (102) |
|
|
|
|
|
103. நா முதலிய உறுப்புக்களின்
தூய்மை |
- அறங்கூறு நாவென்ப நாவுஞ் செவியும்
புறங்கூற்றுக்
கேளாத என்பர்-பிறன்றாரத்(து) அற்றத்தை நோக்காத கண்ணென்ப
யார்மாட்டும் செற்றத்தைத் தீர்ந்ததாம்
நெஞ்சு,
(பதவுரை)
அறம் கூறும் நா என்ப நாவும்-அறத்தினைக் கூறுகின்ற நாவே நா ஆகும்
என்பர், செவியும் புறங்கூற்று கேளாத என்பர்-புறங்கூறுதலைக் கேளாத
செவியே செவியாகும் என்பர், பிறன் தாரத்து அற்றத்தை நோக்காத கண்
என்ப-அயலான் மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண்
என்பர், யார் மாட்டும் செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு-தீமை
செய்வாரிடத்தும் பகைமையின்றி இருப்பதே மனம் ஆகும்.
(குறிப்பு)
கூற்று-கூறப்படுவது; சொல், செற்றம்-நெடுங்காலமாகக் கொண்டுள்ள
சினம். 103 |
|
|
|
|
|
104. பிறர் பெண்டிர்
முதலியவற்றை விரும்புவார்க்குத் தூய்மை முதலியன
இலவாம்
|
- பெண்விழைவார்க் கில்லை பெருந்தூய்மை
பேணாதூன்
உண்விழைவார்க் கில்லை உயிரோம்பல் எப்பொழுதும் மண்விழைவார்க்
கில்லை மறமின்மை மாணாது தம்விழைவார்க் கில்லை
தவம்.
(பதவுரை)
பெண் விழைவார்க்கு பெருந் தூய்மை இல்லை-பிற மகளிரை
விரும்புவாரிடத்து மாசின்மை இல்லை, பேணாது ஊன் உண் விழைவார்க்கு
உயிரோம்பல் இல்லை-அருளை விரும்பாமல் புலாலுண்ணலை விரும்புவாரிடத்து
உயிர்களைக் காக்குந் தன்மை இல்லை, எப்பொழுதும் மண் விழைவார்க்கு
மறமின்மை இல்லை-எக்காலத்தும் அயலானது நாட்டினைக் கவர விரும்புவாரிடத்து
அறம் இல்லை, மாணாது தம் விழைவார்க்கு தவம் இல்லை-பெருமைக்
கேலாத செயல்களைச் செய்து தம்மைக் காக்க விரும்புவாரிடத்துத் தவவொழுக்கம்
இல்லை
(குறிப்பு)
உண்-உண்ணல் முதனிலைத் தொழிற்பெயர். மறமின்மை-அறம் மறத்தின் எதிரது
அறமாதலின். 104 |
|
|
|
|
|
105. பொல்லாரும்
நல்லாரும் இன்னர் என்பது |
- கல்லான் கடைசிதையும் காமுகன் கணக்காணான்
புல்லான்
பொருள்பெறலே பொச்சாக்கும்-நல்லான் இடுக்கணும் இன்பமும் எய்தியக்
கண்ணும் நடுக்கமும் நன்மகிழ்வு மில்.
(பதவுரை)
கல்லான் கடை சிதையும்-கல்லாதவன் கடையனாய் அழிவான்,
காமுகன் கண் காணான்-காமுற்ற ஒருவன் கண் தெரியாதவனாவான்,
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும்-அற்பன் பொருள் பெற்ற
அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான், நல்லான்-அறிவுடையவன்,
இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும், நடுக்கமும் நன்மகிழ்வும்
இல்-துன்பமுற்றவிடத்து வருந்துதலும் இன்பமுற்றவிடத்து மகிழ்தலும்
இலனாவன்.
(குறிப்பு)
காமுகன் கண்காணானாதலாவது காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவரெனவும்
சேரத் தகாதார் இவரெனவும் அறியானாய் ஒழுகுதல். ''காமத்துக்குக் கண்ணில்லை''
என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட வொழுக்கத்தால் உடனிலை கெட்டுக் கண்பார்வையினை
இழப்பான் எனலுமாம். கடை-கடையன்; இழிந்தவன்:
குணவாகுபெயர். (105) |
|
|
|
|
|
106. பழிப்பிலாத
வாழ்க்கைக்குரியன |
- தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின்
மிக்க உசாத்துணையும்-மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை பழியாமல்
வாழுந் திறம்.
(பதவுரை)
தானத்தின் மிக்க தருமமும்-உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன
உதவுதலைக் காட்டினுஞ் சிறந்த அறமும், தக்கார்க்கு-பெரியோர்க்கு,
ஞானத்தின் மிக்க-அறிவைக் காட்டிலும் சிறந்த,
உசாத்துணையும்-ஆராயுந் துணைவனும், மானம் அழியா
ஒழுக்கத்தின் மிக்கதூஉம்-பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த
நல்லொழுக்கமும், இல்லை-இல்லை, பழியாமல் வாழுந்
திறம்-இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற
செயல்களாகும்.
(குறிப்பு)
உசாவுதல்-கேட்டறிதல், அழியா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மிக்கதூஉம்:
இன்னிசை யளபெடை. (106) |
|
|
|
|
|
107. மிகவும் உயர்வாகிய
முக்குணங்கள் |
- தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்* துன்பங்கள்
ஆய
பொழுதாற்றும் ஆற்றலும்-காயவிடத்து வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு
மிம்மூன்றும் சாற்றுங்கால் சாலத் தலை.
(பதவுரை)
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்-குற்றமில்லாமல் சொல்லுங்
குணமும், துன்பங்கள் ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-துன்பமடைந்த
விடத்தும் அதனால் தளர்ச்சியடையாதிருக்கும் பொறுமையும், காய்விடத்தும்
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும்-தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை
கொள்ளாத உண்மை நிலையும், இம்மூன்றும் சாற்றுங்கால்
சாலத்தலை-கூறுமிடத்து இவை மூன்றும் மிக உயர்ந்தனவாகும்.
(குறிப்பு)
காய்வு: தொழிலாகுபெயர். சால: உரிச்சொல். கொண்டாடல்-மேற்
கொள்ளல். (107) (பாடம்) *வண்மையும |
|
|
|
|
|
108. உலக வாழ்க்கைக்குரிய
மூன்று |
- வெம்மை யுடைய தடிசில் விழுப்பொருட்கள்
செம்மை
யுடையதாஞ் சேவகம்-தம்மைப் பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை
இம்மூன்றும் உறவருவ தோர்வதாம்
ஓர்ப்பு.
(பதவுரை)
வெம்மை உடையது அடிசில்-வெப்பத்தோடு கூடியிருப்பதே உண்டியாகும்,
விழுப்பொருட்கண் செம்மையுடைய தாம் சேவகம்-மிக்க வருமானத்தோடு
நடுவுநிலைமை தவறாமலிருப்பதே உத்தியோகமாகும், தம்மைப் பிறர் கருதி
வாழ்வதாம் வாழ்க்கை-தம்மை மற்றவாக்ள் நினைத்து வாழ்வதற்கேற்ற ஈகைக்
குணத்தோடு வாழ்வதே வாழ்க்கையாகும், இம்மூன்றும் உற வருவது ஓர்வதாம்
ஓர்ப்பு-இம் மூன்றையும் அடைவிப்பதே ஆராய்ந்து தெளிதலாகிய கருமம் முடிக்குந்
துணிவாகும்.
(குறிப்பு)
அடிசில்: அடப்பட்டது; உண்டி. ஓர்ப்பு-நினைவு: நினைந்து தீர்மானிக்கும் துணிவினை
ஈண்டு உணர்த்தியது.
(108) |
|
|
|
|
|
109. தீமையினை நன்மையினாலே
வெல்
|
- ஒறுப்பாரை யானொறுப்பன் தீயார்க்கும்
தீயேன்
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப-ஒறுத்தியேல் ஆர்வம் மயக்கம்
குரோதம் இவைமூன்றும் ஊர்பகை நின்கண் ஓறு.
(பதவுரை)
நெஞ்சே! ஒறுப்பாரை யான் ஒறுப்பன்-என்னைத் துன்புறுத்துகின்றவர்களை
யான் துன்புறுத்துவே னெனவும், தீயார்க்கும்
தீயேன்-கொடியவர்களுக்குக் கொடியவனாவேன் எனவும், வெறுப்பார்க்கு
நான் மடங்கே என்ப-வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும்
உலகத்தார் கூறுவர். ஒறுத்தியேல்-நீ இவற்றை மேற்கொண்டு
பிறரை அடக்கக் கருதுவாயாயின், ஆர்வம் மயக்கம் குரோதம் இவை
மூன்றும்-ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும், ஊர்
பகை-நின்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும், நின்கண்
ஓறு-ஆதலின் உன்னிடத்து அவை உளவாகாவாறு அடக்கு.
(குறிப்பு) ஊர்
பகை: வினைத்தொகை. ''அடிக்கு அடி; குத்துக்குக் குத்து; பொய்க்குப் பொய்;
கோளுக்குக் கோள்;''
என்ற கூற்று மக்களிடைப் பெருங் குழப்பத்தினை உண்டாக்குமாகலின்,
எக்காலும் பொறுமையினை மேற்கொள்ளல் மக்களுக்கு இன்றியமையாதது என்பது
கருதது. (109)
|
|
|
|
|
|
110. குலம் குப்பையிலே பணம்
பந்தியிலே
|
- குலத்துப் பிறந்தார் வனப்புடையார்
கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர்-வினைப்பயன்கோல் கல்லார்
குலமில்லார் பொல்லார் தறுகட்பம் இல்லார்பின் சென்ற
நிலை.
(பதவுரை)
குலத்துப் பிறந்தார்-உயர்குடியிற் பிறந்தவர்களும்,
வனப்புடையார்-அழகுடையவர்களும்,
கற்றார்-கற்றவர்களும், நினைக்குங்கால் நின்றுழியே
மாய்வர்-மானமழிந்ததை நினைக்குமிடத்து நின்ற இடத்திலேயே
உயிர்விடக்கூடியவர்களுமாகிய பெரியோர்கள்,
கல்லார்-கல்லாதவர்களும்,
குலமில்லார்-இழிகுலத்தவர்களும்,
பொல்லார்-தீயவர்களும், தறுகட்பம்
இல்லார்-தீவினை செய்ய அஞ்சாதவர்களுமாகிய செல்வமுடைய இழிந்தோர்களை,
பின் சென்ற நிலை-வழிபட்டு நிற்பதற்குக் காரணம்,
வினைப் பயன்கொல்-அவர்கள் முன்செய்த தீவினைப்
பயன்தானே?
(குறிப்பு)
செல்வமானது சில வேளைகளில் மானிகளையும் மயக்கிவிடுகின்றது என்பது கருத்து.
தறுகட்பம்: பெருமையெனலுமாம். கொல்: ஐயவினாப்
பொருள். (110)
|
|
|
|
|
|