131 முதல் 140 வரை
 
131. உடலினைமட்டும் ஓம்பலாற் பயனில்லை

புகாஉண்பார் அல்லுண்ணார் போகுந் துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும்--அவாவினைப்
பற்றுச்செய் தென்னை பயமின்றால் நன்னெஞ்சே!
ஒற்றி உடம்போம் புதற்கு
(பதவுரை) நன்னெஞ்சே-எனது நல்ல நெஞ்சமே!, புகா உண்பார்-பகலில் சோறுண்டாரும், அல்லுண்ணார் -இரவில் சோறுண்ணவிராது மாய்வர், போகுந் துணைக்கண் -உயிர் நீங்குங்காலத்தில், தவாவினை-தவறாது ஒருவன் செய்த வினையே (அவனை) வந்தடையக் கண்டும்-வந்து சேர்வதை அறிஞர்வாய்க் கேட்டுணர்ந்தும், ஒற்றி உடம்போம்புதற்கு - உடைமையல்லாத இவ் வுடம்பினைப் பாதுகாத்தற்கு, அவாவினைப் பற்றுச் செய்தென்னை-பொருள்களிடத்து ஆசை கொள்ளுதலால் விளைவதென்னை?, பயமின்று - யாதொரு பயனுமில்லை.

(குறிப்பு) தவா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஆல்: அசைநிலை. ஒற்றி - அடைமானமாய்க் கொண்டுள்ளபொருள். (131)

   
132. மூப்பு இறப்புகளின் கொடுமை

புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய்--விழுத்துமிழ்ந்(து)
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நன்னெஞ்சே! நாடாய்காண் நற்கு
(பதவுரை) புழுப்போல் உவர்ப்பு ஊறி - புழுக்கள்போல் வெறுக்கத் தக்க குணங்களும் மிகுதலால், பொல்லாங்கு நாறும்-தீமைகள் பிறப்பதற்கிடமாக இருக்கின்ற, அழுக்கு உடம்பு தன்னுள்-தூயதல்லாத உடம்பினிடத்தே, நல்நெஞ்சே-நல்ல மனமே! வளர்ந்தாய்-நீ வளரா நிற்கின்றாய், விழுத்து உமிழ்ந்து-நீ வளரும் உடம்பு படுக்கையிடை வீழ்ந்து கோழையைக் கக்கி உமிழ்ந்து, இன்ன நடையாய் இறக்கும் வகையினை-இவைபோன்ற பிற ஒழுக்கத்தோடும் இறக்கு மென்பதனை, நற்கு நாடாய்-நன்கு ஆராய்ந்தறிந்து அதன்மீதுள்ள பற்றினை விடுவாயாக.

(குறிப்பு) 'விழுத்து' என்பது விழுந்து என்பதன் விகாரம். நன்கு நற்கு என்றாயது. ''மென்றொடர் மொழியிற் சில வேற்றுமையில் தம்மின வன்றொடர்.'' என்ற விதியாலாம். காண்: முன்னிலையசை. (132)

   
133. ஒழுக்கமிலாதான் உயிர்விடுதல் நன்று

ஒழுக்க மிலனாகி ஓர்த்துடைய னேனும்*
புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாம்--கழுக்கிரையை
ஓம்பின்மற் றென்னை உறுதிக்கண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று.
*ஓர்த்துடைய யென்னும்.
(பதவுரை) ஓர்த்து உடையனேனும் - அறிவு நூல்களை ஆராய்ந்துணர்ந்த அறிவினனே யெனினும்,புழுப்பொதிந்த-புழுக்கள் நிறைந்த, புண்ணிற்கொடிதாம் கழுக்கிரையை-புண்ணினுங் கொடியதும் கழுகுகளுக் கிரையாவதுமாகிய உடலை, ஒழுக்கமிலனாகி ஓம்பின் - தீயொழுக்கத்தை மேற்கொண்டு வளர்த்து வருவானாயின், மற்று என்னை-அவன் அவ் வறிவாலடையும் பயன் யாது?, உறுதிக் கண் நில்லாக்கால்-நன்னெறிக்கண் நில்லாதவிடத்து, தேம்பி விடுதலே நன்று-அவன் அழிந்துவிடுதலே நல்லது.

(குறிப்பு) கழுகுக்கிரை என்பது கழுக்கிரை எனக்குறைந்தது. கழுகுக்குன்றம் என்பது கழுக்குன்றம் எனவருதல் போல. (133)

   
134. உண்மைப் பெரியார் உலக வாழ்க்கையை வெறுப்பர்

முடையுடை அங்கணம் நாடோறும் உண்ட
கடைமுறைவாய் போதரக் கண்டுந்--தடுமாற்றில்
சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.
(பதவுரை) முடை யுடை-அழுகல் நாற்றத் தினையுடைய, அங்கணம்-சாக்கடையினைப்போன்று, நாடோறும்-தினந்தோறும், உண்ட-சாபிட்ட உணவுப் பொருள்கள், கடைமுறை-இழிவான நிலையில், வாய் - எருவாய் முதலியவற்றின் வழியாக, போதர - வெளி வருதலைச் செய்ய, கண்டும்-பார்த்திருந்தும், தடுமாறு இல்-(மக்கள்) மனமயக்கத்தினாலே, சாவா-செத்தும், -பிறவா-பிறந்தும்(வாழுகின்ற) இச் சம்பிரத வாழ்க்கைக்கு - இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே, மெய்கண்டார் - உண்மைப்பொருளையுணர்ந்த பெரியோர்களின், நெஞ்சு - மனம், மேவாதாம்-பொருந்தாததாகும்.

(குறிப்பு) இல்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளானது. சாவா, பிறவா, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். வாழ்க்கைக்கு: வேற்றுமை மயக்கம். (134)

   
135. அறிவாளிகளின் கடமை

வயிறு நிறைக்குமேல் வாவின்மிக் கூறிச்
செயிரிடைப்பா டெய்துமாஞ் சீவன்--வயிறுமோர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்.
(பதவுரை) வயிறு நிறைக்குமேல் - உணவால் வயிறு நிறைக்கப்படுமாயின், சீவன்-உயிர், வாவின் மிக்கு ஊறி-மிக்கு அவாவினை யடைந்து, செயிரிடைப் பாடு எய்தும்-தீவினைகளிடைக் கேட்டினை யடையும் (ஆதலால்), வயிறும்-வயிற்றையும், ஓர் பெற்றியால் ஆர்த்தி-கரணங்கள் தொழிற்கு உரியனவாகுமாறு சிறிது உண்பித்து, பெரும்பயன் கொள்வதே-இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்து பெரும்பயன் கொள்வதே, கற்று அறிந்த மாந்தர் கடன்-அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

(குறிப்பு) வாவின்: தலைக்குறை. இடை: ஏழனுருபு. ஏ: தேற்றம். (135)

   
136. மீதூண் விரும்பேல்

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் புலங்கள்
ஒறுக்கும் பருவத் துசாத்துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன்
(பதவுரை) நெஞ்சே-மனமே!, பொச்சாந்து புலன்கள் பொருட்டாக-மேல் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் நுகரப்படும் இன்பத்தின் பொருட்டு, சலங்களை சாராவொழுகல்-தீவினைகளை மேற்கொண்டு ஒழுகாதே, ஒறுக்கும் பருவத்து-அத் தீவினைகளை உன்னை ஒறுக்கும்பொழுது, புலன்கள் உசாத்துணையும் ஆகா-அப் பொறிக ளைந்தும் உனக்கு மதி கூறுவதற்கேற்ற துணையுமாகா, (ஆதலால்) நீ வெறுத்து உண்டல் கடன்-புலனுகர்ச்சி கருதி மீதூணை விரும்பாது மறுத்துண்டல் கடனாகும்.

(குறிப்பு) ஒழுகல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. உண்டல்: தொழிற்பெயர். புலன்: பின்னது தானியாகுபெயர். (136)

   
137. மீதூணால் வருங்கேடு

புகாப்பெருக ஊட்டிற் புலன்கண்மிக் கூறி
அவாப்பெருகி அற்றந் தருமால்--புகாவுமோர்
பெற்றியா னூட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்.
(பதவுரை) புகாப் பெருக ஊட்டின் - வயிற்றினுக்கு மிக்க உணவை ஊட்டினால், புலன்கள் மிக்க ஊறி-ஐம்பொறிகளும் அடங்காது எழுதலால், அவாப் பெருகி-ஆசையானது வளர்ந்து, அற்றம் தரும் - அழிவினைப் பயக்கும்; (ஆதலால்) புகாவும்-உணவையும், ஓர்பெற்றியான் ஊட்டி-கரணங்கள் தொழிற்படுதற்கேற்ற நிலையில் சிறிதளவு வயிற்றினுக்கு ஊட்டி பெரும்பயன் கொள்வதே இவ்வுடம்பால் வீடுபேற்றினுக்குரிய காரியங்களைச்செய்துகொள்வதே, கற்று அறிந்த மாந்தர் கடன்-அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

(குறிப்பு) புலன்:தானியாகு பெயர். ஆல்: அசை. ஏ: தேற்றம் . (137)

   
138. பேராசையினை அடக்கலே பிறரை யடக்கலாம்

ஒறுக்கிலேன் ஊர்பசை என் கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுரைப்பை யாகில்-கறுத்தெறிந்த
கற்கறித்துக் கற்கொண் டெறிந்தாரைக் காய்கல்லாப்
பற்கழல்நாய் அன்ன துடைத்து.
(பதவுரை) என் கண் ஊர் பசை ஒறுக்கிலேன் பிறரை ஒறுக்கிற்பேன் என்று உரைப்பாயாகில் - என்னை யூர்ந்து செலுத்துகின்ற அவாவினையடக்கேன், நான் கருதிய பொருளையடைதற்கு இடையூறு செய்கின்றவர்களை அடக்குவேன் என்று நெஞ்சே! நீ சொல்வாயாயின்; கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லா - கல்லால் தன்னை எறிந்தவர்களை வெகுண்டு கடியாமல், கறுத்து எறிந்த கல் கறித்து-அவர்களால் வெகுண்டு எறியப்பட்ட கல்லைக் கடித்து, பல் கழல் நாய் அன்னது உடைத்து - பல்லை இழக்கின்ற நாயினது செயலை ஒக்கும் உனது செயல்.

(குறிப்பு) ஊர்பசை: வினைத்தொகை. காய்கல்லா:ஈறுகெட்ட எதிர்மரை வினையெச்சம். (138)

   
139. பெரியாரைத் துணைக்கோடல்

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலனைந்துங் காப்பமைத்து-வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித் துணைபெற்றக் கால்.
(பதவுரை) துறவிப் பெருங் குணத்தாரைத் துணை பெற்றக்கால்-துறவியாகிய சிறந்த குணமுடயவரை ஒருவர் தமக்குத் துணைவராகப் பெறுவாராயின், உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து-அவர் தமது மனமாகிய சிறந்த குதிரையின் மீதேறி, வயப்படுத்தி-அதைத் தம் வயப்படுத்தி, கள்ளப் புலனைந்துங் காப்பமைத்து-தம்மை வஞ்சிக்கின்ற புலன் களைந்தையும் நுகருதற்குப் பொறிகளின் வழியே அது புறத்தே செல்லுதலைத் தடுத்து, வெள்ளப் பிறவிக் கண் நீத்தார் - வெள்ளமென்னும் எண்ணினது அளவைக் கொண்ட மிகப் பல பிறவிகளையும் கடந்து வீடுபேற்றினை யடைந்தவராவர்.

(குறிப்பு) பெற்றக்கால்: எதிர்கால வினையெச்சம். நீத்தார்: தெளிவின்கண் வந்த காலவழுவமைதி. (139)

   
140. மனத்தினை யடக்கியாளல்

பரிந்தெனக்கோர் தம்மை பயப்பாய்போல் நெஞ்சே!
அரிந்தென்னை ஆற்றவுந் தின்னல்--புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ.
(பதவுரை) நெஞ்சே-மனமே!, பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய்போல்-எனக்கு ஓர் உறுதியை விரும்பிச் செய்வதுபோற் காட்டி, என்னை ஆற்றவும் அரிந்து தின்னல்-என்னை மிகவும் அரிந்து தின்னாதே, நீ புரிந்து வேண்டுவ வேண்டுவேன் அல்லேன்-நீ விரும்பி அடையக் கருதுகின்றவற்றை நான் விரும்பிச் செய்வேனல் லேன், விழுக்குணம் பூண்டேன்-பற்று விடுதலை மேற்கொண்டுள்ளேன்; பொறியிலி-பேதையே!, போ-அப்பாற்செல்.

(குறிப்பு) தின்னல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. பொறியிலி: அண்மைவிளி. வேண்டுவ: வினையாலணையும் பெயர். (140)