141 முதல் 150 வரை
|
|
141. அடக்கம் அனைத்தையும்
தரும் |
- தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத்
தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை--தன்னைக் குடிகெடுக்குந்
தீநெஞ்சின் குற்றவேல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட
களிறு.
(பதவுரை)
தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்-தன்
செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன்
அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை-பின்னர்
அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்து மில்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ
நெஞ்சின் குற்றேவல் செய்தல்-தன்னைத்தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற
தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட
களிறு-பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத்
தகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.
(குறிப்பு)
களிறு-ஆண் யானை; பிடி-பெண் யானை. குறுமை+ஏவல்=குற்றேவல்; எளிய வேலைகள். கரி-சான்று,
சாட்சி. (141) |
|
|
|
|
|
142. உள்ளத்துயர்வே
உயர்வுறும் |
- உள்ளூர் இருந்துந்தம் உள்ளமறப்
பெற்றாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுளார் காட்டுள்ளும் உள்ளம் அறப்பெறு
கல்லாரேல் நாட்டுள்ளும் நண்ணி நடுவூ ருளார்.
(பதவுரை)
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்-இல் வாழ்க்கையை
மேற்கொண்டு நடுவூரின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறுவாராயின், கள்
அவிழ்சோலை ஆம் காட்டு உளார்-அவர், தேன் சொரிகின்ற மலர்கள் நிறைந்த
சோலையையுடைய காட்டின்கண்ணே வாழும் துறவியே ஆவர்; காட்டுள்ளும் உள்ளம்
அறப்பெறுகல்லாரேல்-துறவறத்தை மேற்கொண்டு காட்டின்கண்ணே வாழ்ந்தாலும் தம்
மனமடங்கப் பெறாராயின், நாட்டுள்ளும் நடுவூர் நண்ணி உளார்-அவர்
நாட்டின் கண்ணதாகிய நடுவூரில் மனைவாழ்க்கையை மேற்கொண்டிருந்து, தீய செயல்களைப்
பொருத்தி வாழும் கயவரையொப்பர்.
(குறிப்பு)
உள்ளூர், மக்கள் கூடிவாழும் இடமாதலின் இல்வாழ்க்கையைக் குறிக்கவல்லதாயிற்று. நடுவூர்
மக்களிடையே நெருங்கி வாழும் இடமாதலின் தீய செயல்களைச் செய்யப்படுமிடமாகக்
கருதப்பட்டது. (142) |
|
|
|
|
|
143. மனத்தை யடக்குவார்
மாபெருஞ் சிறப்படைவர் |
- நின்னை யறப்பெறு கிற்கிலேன்
நன்னெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்--நின்னை அறப்பெறு
கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டே துறக்கம் திறப்பதோர்
தாழ்.
(பதவுரை)
நல் நெஞ்சே நின்னை அறப் பெறுகிற்கிலேன்-நல்ல நெஞ்சே! உன்னைச்
சிறிதும் என் வசமாக்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றேன்;
பின்னை-இனி, யான்-உன்னையே
வசமாக்கிக்கொள்ளாத யான், யாரைப் பெறுகிற்பேன்-மற்றையவர்களை
எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!, நின்னை
அறப்பெறுகிற்பேனேல்-உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின்,
துறக்கம் திறப்பது ஓர் தாழ்-துறக்க உலகத்தினைத் திறந்துவிட
வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை, ஈண்டே பெற்றேன்-இம்மையிலேயே
பெற்றவனாவேன்.
(குறிப்பு) கில்:
ஆற்றல் இடைநிலை: பெற்றேன்: உறுதிபற்றி வந்த காலவழுவமைதி. மற்று: அசைநிலை. ஏ:
பிரிநிலை. (143) |
|
|
|
|
|
144, ஐம்பொறிகளும் ஆடம்பரத்
தோழர்களாம் |
- ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார்
ஐவரும் வீண்கிளைஞர்--தோழர் வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால்
ஆதன் இறுக்குமாம் உண்ட கடன்.
(பதவுரை)
ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு-அறிவில்லாதவனும் மிக்க
மயக்கத்தையுடையவனுமாகிய ஒருவனுக்கு, தோழன்மார் ஐவரும் வீண்
கிளைஞர்-ஐம்பொறிகளாகிய நட்பினரைவரும் இடுக்கண் வந்துழி உதவாத
உறவினரேயாவர்: தோழர்-அந்நட்பினர்,
வெறுப்பனவும்-அறிஞர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக
வருவனவற்றையும், உண்டு-உவகையோடு நுகர்ந்து, எழுந்து
போனக்கால்-உடம்போடு எழுந்துபோன (மரணத்தின்) பின்னர், உண்ட
கடன்-அவர்களை உண்பிக்கத் தான்பட்ட கடனாகிய தீவினையை, ஆதன்
இறுக்கும் ஆம்-அவ்வறிவில்லாதவன் அதனால் வரும் துன்பத்தை மறுமையில்
அனுபவத்தே தீர்ப்பவனாவான்.
(குறிப்பு)
இதனால் அறிவில்லாதவர்கள் மறுமைக்காகச் செய்து கொள்வது துன்பமேயன்றி இன்பமில்லை
என்பது பெறப்பட்டது. ‘உண்ட’ என்பது பிறவினைப்பொருளில் வந்தது.
(144) |
|
|
|
|
|
145. மனத்தை யடக்கியவன்
மாபெருந் தெய்வம் |
- தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை
தான்றன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல்--என்னை எழுத்தெண்ணே நோக்கி
இருமையுங் கண்டாங்(கு) அருட்கண்ணே நிற்ப தறிவு.
(பதவுரை)
தன்னைப் பின்னை மனம் அறத்தான் பெற்றானேல்-இன்பம் பயப்பது
போன்ற தன்னைத் தீநெறிகளில் முன்னர்ச் செலுத்திப் பின்னர் வருந்துகின்ற மனத்தினை
ஒருவன் அடக்குவானாயின், தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை-அவனை
நிகர்க்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை; எழுத்து எண்ணே நோக்கி
என்னை-இலக்கணம் சோதிடம் முதலியவற்றையே ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன்
யாது, இருமையும் கண்டு-இம்மையிற் புகழும் மறுமையிலின்பமும் பயக்கும்
நூல்களையே ஆராய்ந்து அறிந்து, அருட்கண்ணே நிற்பது அறிவு-அருளை
மேற்கொண்டு ஒழுகுதலே அறிவுடைமையாகும்.
(குறிப்பு) ஆங்கு:
அசைநிலை; ஏழனுருபு. (145) |
|
|
|
|
|
146. அறிவார்க்கும்
அறியார்க்கும் கவலை யொன்றே |
- தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்*
விடுமாற்றந்
தேர்ந்தஞ்சித் துஞ்சார்--தடுமாற்றம் யாதும் அறியாரும் துஞ்சார்தம்
ஐம்புலனும் ஆரும்வகை யாதாங்கொ லென்று.
-
*தம்மையுடையார்
(பதவுரை)
தடுமாற்றம் அஞ்சிய தன்மையுடையார்-கலக்கத்திற்குக் காரண மாகிய
பிறப்பு இறப்புகளை அஞ்சிய பெரியோர்கள், விடுமாற்றம் தேர்ந்து அஞ்சித்
துஞ்சார்-அவற்றைப் போக்கும் உபாயத்தினை ஆராய்ந்துகொண்டே
அவ்வச்சத்தால் துயிலார், தடுமாற்றம் யாதும் அறியாரும்-பிறப்பு
இறப்புகளைச் சிறிதும் சிந்தியாதவர்களும், தம் ஐம்புலனும் ஆரும் வகை யாதாம்
என்று துஞ்சார்-தம் ஐம்பொறிகளாலும் இன்பத்தை நுகருதற்கேற்ற உபாயம் யாது?
என்று ஆரய்ந்துகொண்டே கவலையால் துயிலார்.
(குறிப்பு)
ஆர்தல்-நுகர்தல்; தடுமாற்றம்-தடுமாறுதல்: அம் ஈற்றுத்தொழிற்பெயர். கொல்: ஐயம்.
'பாலுக்குச் சர்க்கரையில்லை யென்பார்க்கும் பருக்கையற்ற, கூழுக்குப்போட உப்பில்லை
யென்பார்க்கும்......விசனமொன்றே' என்ற தொடர்மொழியின் பொருளை ஈண்டு ஒப்பு
நோக்குக. (146) |
|
|
|
|
|
147. ஐம்பொறிகளால்
ஆங்காலுந் துன்பம், போங்காலுந் துன்பம் |
- ஆர்வில் பொறியைந்திற் காதி
இருவினையால்
தீர்விலநீ கோதாதி சேர்விக்குந்--தீர்வில் பழியின்மை
யெய்தின் பறையாத பாவம் வழியும் வருதலு முண்டு.
(பதவுரை)
நீ ஆர்வில் பொறி ஐந்திற் காதி-நீ செல்வமுற்ற காலத்து
நிரப்புதற் கொண்ணாத மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும்
ஆளாகின்றாய்; இன்மை எய்தின்-நீ வறுமையுற்ற காலத்து, இரு
வினையால்-நல்வினை தீவினை என்னுமிருவினைகளால், தீர்வில கோதாதி
சேர்விக்கும்-விட்டு விலக இயலாத குற்றமுதலியவற்றில் படிவிக்கும்படியான,
தீர்வில் பழி-நீங்குதலில்லாத பழியும், பறையாத
பாவம்-இத்தன்மையதென் றியம்ப வொண்ணாத கொடிய நிலையும்,
வழியும்-அப்பொறிகளின் வழியாக,
வருதலும்உண்டு-ஏற்படுதலும்கூடும்.
(குறிப்பு)
சேர்விக்கும்: பிறவினைப் பெயரெச்சம். வழியும்-உம்: அசைநிலை, வருதலும்-உம்:
எதிர்மறைப்பொருளது. (147) |
|
|
|
|
|
148. மனத்துறவுள்ளோர்
மயக்கில் அகப்படார் |
- அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண்
நீர்நிலா தாகும்--அலைவிற் புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே மலங்கடி
வாளா தவர்க்கு.
(பதவுரை)
அலை புனலுள் நிற்பினும்-அலைகளையுடைய நீரின் கண்ணே நின்றாலும்,
தாமரை ஈன்ற இலையின்கண்-தாமரையிலையிடத்து, நீர்
நில்லாது ஆகும்-நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவிற்
புலன்களில் நிற்பினும்-சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு
கூடியிருந்தாலும், தவர்க்கு-முனிவர்களை, கடிவுமலம்
ஆளா-அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா;
பொச்சாப்பு இலர்-அவர்களும் மறதியால் அவற்றின் வயப்படுதலு
மிலர்.
(குறிப்பு)
'தவர்க்கு' என்பதில் இரண்டனுருபுக்கு நான்கனுருபு வந்துள்ளது: உருபு மயக்கம். ஏ: ஈற்றசை.
அலை புனல்: வினைத்தொகை. (148) |
|
|
|
|
|
149. தன்னலமற்ற அறமே தலையாய
அறமாம் |
- பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண்
நில்லா தறஞ்செய்க--மற்றது பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த
ஊர்நாடிக் கன்றுடைத் தாய்போல் வரும்.
(பதவுரை)
பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்-நெஞ்சே! நற்குணமிக்க
செயல்களைத் தவறாமல் செய்யக்கருதினால், பற்றின்கண்நில்லாது
அறஞ்செய்க-அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக,
அது-அவ்வறம், பொன்றாப் புகழ்
நிறுத்தி-இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து,
போய்ப் பிறந்த ஊர் நாடி-மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி,
கன்று உடை தாய்போல் வரும்-தாய்ப்பசு தன் பாலை யருந்தத் தன்
கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால்
விரைந்து வரும்.
(குறிப்பு)
பொன்றா: பொன்றாத என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ''பல்லாவுள'' எனத்
தொடங்குகின்ற நாலடியாரின் செய்யுட் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக.
(149) |
|
|
|
|
|
150. இன்பமும் துன்பமும்
ஒன்றென எண்ணுக |
- பேறழிவு சாவு பிறப்பின்பந் துன்பமென்
றாறுள
அந்நாள் அமைந்தன--தேறி அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து) இவையிவை
என்றுணரற் பாற்று.
(பதவுரை)
பேறு-செல்வம், அழிவு-வறுமையும்,
சாவு-இறப்பும், பிறப்பு-பிறப்பும்,
இன்பம்-இன்பமும்,துன்பம்-துன்பமும்,
என்ற ஆறு-என்று சொல்லப்படுகின்ற ஆறும், அந்நாள்
அமைந்தன உள-முன்செய்த வினைகாரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன;
அவையவை வந்தால்-இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி
வருந்தோறும், விம்மாது-மகிழாமலும்,
அழுங்காது-வருந்தாமலும், இவை-நம்மை நாடி வந்த
இவை, இவை என்று தேறி உணரற்பாற்று-இன்ன வினைகளால் வந்தவை என்று
ஆராய்ந்தறிந்து அடங்குதலே செயத்தக்கது.
(குறிப்பு)
என்ற+ஆறு=என்றாறு: அகரம் தொகுத்தல். அவை அவை: அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளது.
(150) |
|
|
|
|
|