151 முதல் 160 வரை
|
|
151. உயர்வுக்குந் தாழ்வுக்கும்
ஒருவன் செயலே காரணம் |
- தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு
மறுமையும் இம்மையும் தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக்
கரி
(பதவுரை) தனக்குப் பகைவனும்
நட்டானும் தானே-தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும்
நட்பினனும் தானேயாவான், பிறரன்று; தனக்கு மறுமையும் இம்மையும்
தானே-தனக்கு மறுமையின்பத்தையும் இம்மை யின்பத்தையும் செய்துகொள்பவனும்
தானே, தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால்-தான் செய்த
வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால், தனக்குக் கரி
தானே-தான்செய்த வினைகளுக்குச் சான்றா வானும் தானேயாவன்.
(குறிப்பு)
ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளன; அன்றி, தேற்றமுமாம். உம்மைகள்
எண்ணுப்பொருளன. (151) |
|
|
|
|
|
152. செய்வினையே ஒருவனுக்குச்
சிறந்த துணையாம் |
- செய்வினை யல்லால் சிறந்தார்
பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம்--மெய்வினவில் தாயார்
மனைவியார் தந்தையார் மக்களார் நீயார் நினைவாழி
நெஞ்சு.
(பதவுரை)
நெஞ்சு-நெஞ்சே!, செய்வினை அல்லால்-நீ செய்த வினை
உனக்குத் துணையாவதன்றி, சிறந்தார் பிறரில்லை-சிறந்த துணைவராவர்
பிறரிலர், மற்றைப் பொரு ளெல்லாம்-நிலையானவை யென்று நீ
கருதுகின்ற மற்றைப் பொருள்களெல்லாம், பொய்வினை-அழியுந்
தன்மையனவே, மெய்வினவில்-உண்மையையறிய விரும்பிக்
கேட்பாயாயின், தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் நீ
யார்-தாயும் மனைவியும் தந்தையும் மக்களுமாகிய இவர்கள் நின்னோடு எத்தகைய
தொடர்பினையுடையார்? நினை-அவர்கள்நிலையான தொடர்புடையவர்களா?
என்பதை ஆராய்ந்து அறிவாயாக.
(குறிப்பு) வாழி:
முன்னிலையசை: நினை: முன்னிலை யேவலொருமை வினைமுற்று. (152) |
|
|
|
|
|
- உயிர்திகிரி யாக உடம்புமண் ணாகச்
செயிர்கொள்
வினைகுயவ னாகச்--செயிர்தீர எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும்
மற்றதனுள் எண்ணருநோய் துன்பம் அவர்க்கு.
(பதவுரை) செயிர் கொள்
வினை-குற்றம் தரும் வினை, குயவன் ஆக-குலாலனாக நின்று,
உயிர் திகிரியாக-உயிர்காற்றையே தண்ட சக்கரமாகவு,
உடம்பு மண்ணாக-எழுவகைத்தாதுவையே களிமண்ணாகவுங் கொண்டு,
செயிர் தீரா-குற்றத்தின் நீங்காத, எண் அரு
நல்யாக்கைக் கலம் வனையும்-நினைத்தற்கரிய உடலாகிய பாண்டத்தைச்
செய்யும், அதனுள்-அவ்வுடலுள், அவர்க்கு-அதனை
யனுபவிக்கும் சீவர்க்கு எண் அரு நோய் துன்பம்-அளவிடற்கரிய கொடிய
நோய்கள் பல உளவாம்.
(குறிப்பு)
உயிர், உடம்பு, வினை, யாக்கை, நோய் முதலியன திகிரி, மண், குயவன்,
கலம், துன்பமாக உருவகிக்கப்பட்டுள்ளது. மற்று: அசை நிலை. (153) |
|
|
|
|
|
154. மக்களாகப் பிறந்தோர்
மறுமையைக் கருதல்வேண்டும் |
- முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின்
நல்லதோர்
இற்பிறந் தின்புறா* நின்றவர்--இப்பிறப்பே இன்னுங் கருதுமேல்
ஏதம் கடிந்தறத்தை முன்னி முயன்றொழுகற் பாற்று.
*இப்புறத் தின்புறா.
(பதவுரை) முற்பிறப்பில்
தாம்செய்த புண்ணியத்தின் - முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக,
நல்லதோர் இல்பிறந்து இன்புறா நின்றவர்-உயர்குடியிற் பிறந்து
இன்பத்தை நுகர்கின்றவர்கள், இப் பிறப்பே-இம்மை யின்பத்தையே,
இன்னும் கருதுமேல்-இன்னமும் கருதி முயல்வாராயின்,
ஏதம்-மறுமையில் உறுவது துன்பமேயாகும்; (ஆதலால்)
கடிந்து-இம்மையின்பத்தில் செல்லுங் கருத்தை ஒழித்து,
அறத்தை முன்னி முயன்று ஒழுகற்பாற்று-மறுமை யின்பத்துக்குக்
காரணமாகிய அறத்தினைக் கருதி முயன்று செய்தலே தக்கது.
(குறிப்பு) இன்:
ஐந்தனுருபு; ஏதுப்பொருளது. ஆநின்று: நிகழ்கால இடைநிலை. ''இற்பிறந் தின்புறா நின்றவ
ரிற்பிறப்பே''என்றும் பாடம். (154) |
|
|
|
|
|
155. மறுமையறஞ் செய்யார்
மாமூட ராவர் |
- அம்மைத்தாஞ் செய்த அறத்தினை வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர்--உம்மைக்(கு) அறம்செய்யா(து) ஐம்புலனும்
ஆற்றல் நல்லாக் கறந்துண்பஃ தோம்பாமை யாம்.
(பதவுரை)
அம்மை-முற்பிறப்பில், தாம் செய்த அறத்தின் வரு
பயனை-தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை,
இம்மை-இப்பிறப்பில், துய்த்து-நுகர்ந்து,
இன்புறா நின்றவர்-மகிழ்கின்றவர்கள்,
உம்மைக்கு-மறுமையின்பத்தின் பொருட்டு,
அறஞ்செய்யாது-அறத்தினைச் செய்யாமல், ஐம்புலனு
மாற்றுதல்-ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா
இருத்தல், நல் ஆ-நல்ல பசுவினை, கறந்து-பாலைக்
கறந்து, உண்டு-மகிழ்ச்சியோடு பருகி, அஃது ஓம்பாமை
ஆம்-பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.
(குறிப்பு)
வருபயன்: வினைத்தொகை. ஓம்பாமை: மையீற்றுத் தொழிற்பெயர். (155)
|
|
|
|
|
|
156. நல்வினை தீவினைகளே
ஒருவரின் நற்பிறப்புத் தீப்பிறப்புக்குக்
காரணம் |
- இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த
பிறப்பால் அறிக--பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக
இனிப்பிறந்(து) எய்தும் வினையின் பயன்.
(பதவுரை)
தாம்-மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், இறந்த
பிறப்பில்-முற்பிறப்பில், செய்த வினையை-செய்த
நல்வினை தீவினைகளை, பிறந்த பிறப்பாலறிக-பிறந்த இப்
பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக, இனிப் பிறந்து
எய்தும் வினையின் பயன்-இனி வறுமையில் அடையும் இன்ப துன்பங்களையும்,
பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக-இம்மையில் தாம் பிறந்து
செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக.
(குறிப்பு) அறிக:
வியங்கோள் வினைமுற்று. (156) |
|
|
|
|
|
157. வீடுறாப் பிறவி
விழற்கிறைத்த நீரே |
- தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார்
சுற்றத்தா
ராய்வந்து தோன்றி அருவினையால்--மாய்வதன்கண் மேலைப் பிறப்பும்
இதுவானால் மற்றென்னை? கூலிக் கழுத குறை.
(பதவுரை)
அருவினையால்-மக்கள் வேறொரு தொடர்பு மின்றித் தத்தம் வினைகாரணமாக,
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் வந்து
தோன்றி-(உலகிடைத் தம்முள்) தாயுந் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும்
சுற்றத்தாருமாக வந்து பிறந்து, மாய்வதன்கண்-வீடுபேற்றினையடைய
முயலாமல் தம்முட் சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்து, மேலைப் பிறப்பும்
இதுவானால்-வரும் பிறப்பிலும்அவர் மீண்டும் அங்ஙனம் தோன்றி அவருள் வேறு
சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்தால், கூலிக்கழுத குறை-அவர்
வாழ்க்கை ஒருவர்க்கொருவர் கூலியின் பொருட்டு அழுத காரியமாக முடியுமேயன்றி,
மற்று என்னை-அதனாலாகும் பயன் வேறு யாது?
(குறிப்பு) மற்று:
பிறிது என்னும் பொருளது. (157) |
|
|
|
|
|
158. மாறில்லா மனையறம்
தவத்தினும் மாண்டதாம் |
- வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின்--புனைகோதை மெல்லியல் நல்லாளும் நல்லன்
விருந்தோம்பிச் சொல்லெதிர் சொல்லா னெனில்.
(பதவுரை) வினை
காத்து-தீவினைகளை விலக்கி, வந்த விருந்து
ஓம்பி-தன்பால் வந்த விருந்தினரைப் பேணி,
நின்றான்-வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனது,
மனைவாழ்க்கை தவத்தின் நன்று-இல்வாழ்க்கை தவத்தினும்
சிறந்ததாகும், புனைகோதை-அழகிய கூந்தலையும், மெல்
இயல்-மெல்லிய இயலையுமுடைய, நல்லாளும்-பெண்ணும்,
விருந்து ஓம்பி-வந்த விருந்தினரைப் பேணி,
சொல் - கணவன் சொல்லுக்கு, எதிர் சொல்லாள்
எனில்-மாறுபாடாக எதிர்த்தொன்றும் சொல்லா திருப்பாளாயின்,
நல்லள் - சிறந்தவளே யாவள்.
(குறிப்பு)
நின்றான், நல்லாள்:வினையாலணையும் பெயர்கள். கோதை-கூந்தல்; பெண்மயிர்;
அன்றிப் பூமாலை யெனினுமாம். (158) |
|
|
|
|
|
159. மனைவியாவாட்குரிய
நற்குணங்கள் |
- கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது
கண்டு விழையாமை--விண்டு வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி உறுப்போ
டுணர்வுடையாள் பெண்.
(பதவுரை) கொண்டாள்
குறிப்பு ஒழுகல்-கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், கூறிய
நாணுடைமை-மகளிர்க்குக் கூறிய நாணினையுடைமையும், கண்டதுகண்டு
விழையாமை-எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும்,
விண்டு வெறுப்பன செய்யாமை-கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச்
செய்யாமையுமாகிய, (இவற்றை) வெஃகாமை-விரும்பாமையாகிய
தீக்குணத்தினை, நீக்கி-விலக்கி (அஃதாவது விரும்பி
மேற்கொள்ளுதலோடு), உறுப்போடு உணர்வுடையாள் பெண்-உடலழகும்
அறிவும் உடையவளே பெண்ணாவாள்.
(குறிப்பு)
கொண்டான்-மனையின் வாழ்க்கைப் பொறுப்பை மேற்கொண்டவன் (கணவன்):
வினையாலணையும் பெயர். (159) |
|
|
|
|
|
160. நற்பெண்டிர்
இவரென்பது |
- மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால்
முடிப்பதூஉம்
எல்லாருஞ் செய்வர்--படைத்ததனால் இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம்
நல்லறத்தே நிற்பாரே பெண்டிரென் பார்.
(பதவுரை)
மடப்பதூஉம்-இளமைப் பருவமாகிய மங்கைப் பருவத்தை யடைதலும், மக்கட்
பெறுவதூஉம்-புதல்வர்களைப் பெறுதலும், பெண்பால்
முடிப்பதூஉம்-பெண்களுக்குரிய அணிகலன்களை அணிந்துகொள்ளுதலுமாகிய இவற்றை,
எல்லாரும் செய்வர்-எல்லா மகளிருஞ் செய்வர்;
படைத்ததனால் - பெற்ற பொருள் சிறிதேயாயினும் அதனால்,
இட்டு- இரப்பார்க்கு இட்டு, தாம் உண்டு-தாமும்
உண்டு, இல் வாழ்க்கை புரிந்து - மனை வாழ்க்கைக்குரிய மற்றைய
கடன்களையும் விரும்பிச் செய்து, நல் அறத்தே நிற்பாரே-கற்பு
நெறியின் வழுவாது நிற்பவர்களே, பெண்டிர் என்பார்-பெண்டிரென்று
சிறப்பித்துச் சொல்லப்படுவார்.
(குறிப்பு)
மடப்பதூஉம், பெறுவதூஉம், முடிப்பதூஉம்:இன்னிசை யளபெடைகள். ஏ: முன்னது
ஈற்றிசை; பின்னது பிரிநிலை. (160) |
|
|
|
|
|