161 முதல் 170 வரை
|
|
161. கொண்டாள் தன்னைக்
கொண்டாடும் வழி |
- வழிபா டுடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது
சொல்லிற்றுச் செய்தாங்--கெதிருரையா(து) ஏத்திப் பணியுமேல் இல்லாளை
ஆண்மகன் போற்றிப் புனையும் புரிந்து.
(பதவுரை)
வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்-கணவன் கொள்கையைப்
பின்பற்றி வாழ்க்கையினை நடத்தி, சொல்லிற்று முனியாது
செய்து-அவன் உரைத்ததை வெறுப்பின்றிச் செய்து, எதிர்
உரையாது-வெகுண்டு உரைத்தவிடத்தும் எதிர்த்துக் கூறாமல், ஏத்திப்
பணியுமேல்-புகழ்ந்து வணங்குவாளாயின், இல்லாளை-மனைவியை,
ஆண்மகன்-கணவன், புரிந்து-விரும்பி,
போற்றிப் புனையும்-காத்தல் செய்வான்.
(குறிப்பு)
நடாஅய்: இசைநிறை யளபெடை, ஆங்கு:அசை நிலை. (161)
|
|
|
|
|
|
162. கற்பிற்கிழுக்கான
காரியங்கள் |
- தலைமகனில் தீர்ந்துரைதல் தான்பிறரில்
சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல்--கலனணிந்து வேற்றூர்ப் புகுதல்
விழாக்காண்டல் நோன்பிடுதல் கோற்றொடியாள் கோளழியு
மாறு.
(பதவுரை)
தலைமகனில் தீர்ந்து உறைதல்-கணவனின் நீங்கி வாழ்தலும்,
தான் பிறர் இல் சேர்தல்-அடிக்கடி அயலார் வீடுகளைத் தானே
அடைதலும், நிலைமை இல் தீப்பெண்டிர்ச் சேர்தல்-நெறியில்
நீங்கிய தீய மகளிரைச் சேர்ந்து பழகுதலும், கலன் அணிந்து வேற்றூர்
புகுதல்-அணிகளை அணிந்து கொண்டு அயலூரைத் தனியே அடைதலும்,
விழாக்காண்டல்-தனியே சென்று திருவிழாக் காண்டலும்,
நோன்பிடுதல்-கணவன் கட்டளையின்றி விரதம் இருத்தலுமாகிய இவை,
கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு-திரண்ட வளையலணிந்த
பெண்ணினுடைய கற்பழிதற்குரிய வழிகளாம்.
(குறிப்பு) இல்:
முன்னது ஐந்தனுருபு; நீக்கப்பொருள்; இரண்டாவது, வீடு என்னும் பொருளது; மூன்றாவது இன்மைப்
பொருளது. (162) |
|
|
|
|
|
163. கற்பில் மகளிர்
கணவர்க்குக் கூற்றுவர் |
- அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர
எழுதிப்--புயலைம்பால் வண்டோச்சி நின்றுலாம் வாளேர்
தடங்கண்ணாள் தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று.
(பதவுரை)
அவன் அயலூர் போக-கணவன் வேற்றூரை யடைந்த சமயம் பார்த்து,
அம் மஞ்சள் ஆடி-அழகினைத் தரும் மஞ்சளைப் பூசிக் குளித்து,
கயல் ஏர் கண் ஆர எழுதி-கெண்டைமீனையொத்த கண்களுக்கு அழகு பெற
மையெழுதி, புயல் ஐம்பால் வண்டோச்சி நின்று உலாம்-கரிய மேகம்
போன்ற கூந்தலில் அணிந்த மயிரிலுள்ள தேனை உண்ணவரும் வண்டுகளை ஓட்டிக்கொண்டு
வெளியில் நின்று உலாவுகின்ற, வாள் ஏர் தடங்கண்ணாள்-வாள்
போன்ற பெரிய கண்களையுடையவள், தண்டு ஓச்சிப் பின் செல்லும்
கூற்று-கதாயுதத்தினை ஓங்கிக்கொண்டு அவனறியாவண்ணம் தன்னைக் கொண்டானது
பின்சென்று தாக்குகின்ற கூற்றேயாவள்.
(குறிப்பு) ஏர்:
உவமவுருபு, ஐம்பால் கூந்தல்: குழல்கொண்டை, சுருள், பனிச்சை, முடி என ஐவகையாக
முடிக்கப்படுதலின். (163) |
|
|
|
|
|
164. இணைபிரியாக் காதலே
இல்வாழ்க்கைக் குயிராம் |
- மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும்
பூண்டுய்ப்பின் அல்லால்--ஒருவரால் இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய
வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று.
(பதவுரை)
மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும்-ஒத்த அன்பினையுடைய
மனைவியும் கணவனுமாகிய இருவரும், பூண்டு-மேற்கொண்டு,
உய்ப்பின் அல்லால்-செலுத்தினாலன்றி,
ஒருவரால்-அவ்விருவருள் ஒருவரால், இல்வாழ்க்கை என்னும்
இயல்பு உடைய வான் சகடம்-இல்வாழ்க்கையாகிய அழகிய உயர்ந்த வண்டி
செலுத்தப்படின், தெற்றிற்று நின்று செல்லாது-செல்லாமல் தடைப்பட்டு
நின்றுவிடும்.
(குறிப்பு)
சகடம்-சகடுகளையுடையது: காரணப் பெயர். சகடு-சக்கரம். (164)
|
|
|
|
|
|
165. இல்லறத்தான்
இயல்புகள் |
- பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும்
நோக்காது பொய்யொரீஇ--நிச்சலுங் கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு
வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு.
(பதவுரை)
பிச்சையும் ஐயமும் இட்டு-இரந்தார்க்கும் துறந்தார்க்கும்
வேண்டுவனவற்றை ஈந்து, பிறன் தாரம் நிச்சலும் நோக்காது-அயலான்
மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் ஒரீஇ-பொய்பேசாது,
நிச்சலும் கொல்லாமை காத்து-கொலைத்தொழிலை எஞ்ஞான்றும்
செய்யாது, கொடுத்து உண்டு வாழ்வதே-விருந்தினரை உண்பித்துத் தாமும்
உண்டு வாழ்தலே, இல்வாழ்க்கை இயல்பு என்னும்-இல்வாழ்க்கைக்குரிய
இயல்பு என்று நூல்கள் கூறும்.
(குறிப்பு)
பிச்சை-இரப்போர்க்கிடுவது, ஐயம்-அறவோர்க்கிடுவது. ஒரீஇ: சொல்லிசையளபெடை.
நிச்சல்-நித்தல்; தகர சகரப்போலி.
(165) |
|
|
|
|
|
166. இல்லறத்தானாகான்
இயல்புகள் |
- விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக்
கவரையும் பேணான்--பிரிந்துபோய்க் கல்லான் கடுவினை மேற்கொண்
டொழுகுமேல் இல்வாழ்க்க்கை யென்ப திருள்.
(பதவுரை)
விருந்து புறந்தரான்-தன்பால் வந்த விருந்தினரை யோம்பாமலும்,
வேளாண்மை செய்யான்-இரப்பார்க்கு ஒன்று ஈயாமலும்,
பெருந்தக்கவரையும் பேணான்-பெருமையிற் சிறந்தோரையும் மதியாமலும்,
பிரிந்துபோய்க் கல்லான்-மனைவி மக்களைப் பிரிந்து சென்று அறிவு
நூல்களைக் கல்லாமலும், கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்-தீவினையை
மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின், இல்வாழ்க்கை என்பது
இருள்-அவனால் நடத்தப்பெறும் மனைவாழ்க்கை அவனுக்கு
நரகமேயாகும்.
(குறிப்பு)
புறந்தரான், செய்யான்,பேணான்,கல்லான்,என்பன முற்றெச்சங்கள்; எண்ணும்மைகள்
தொக்கன. ஒருவன் என்னும் எழுவாயினை வருவிக்க. (166)
|
|
|
|
|
|
167. செயலற்றார்க்குச்
செய்யும் அறமே சிறப்பானதாம் |
- அட்டுண்டு வாழ்வார்க் கதிதிகள்
எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர்--அட்டுண்டு வாழ்வார்க்கு வாழ்வார்
அதிதிகள் என்றுரைத்தல் வீழ்வார்க்கு வீழ்வார்
துணை.
(பதவுரை)
அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழ்கின்ற இல்லறத்
தார்க்கு, அதிதிகள்-விருந்தினராவார்,
எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அட்டு உண்ணா மாட்சி
உடையவர்-சமைத்து உண்ணாத பெருமையினையுடைய துறவறத்தினரே யாவர்,
அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு,
வாழ்வார்-அவ்வாறு வாழும் இல்லறத்தார், அதிதிகள் என்று
உரைத்தல்-விருந்தினராவர் என்று சொல்லுதல்,
வீழ்வார்க்கு-மலையுச்சியினின்றும் நிலமிசை வீழ்வார்க்கு,
வீழ்வார்-அங்ஙனம் வீழா நின்றவர்,
துணை-துணையாவரென்று கருதுதல் போலாம்.
(குறிப்பு)
அட்டுண்ணா மாட்சி-சமைத்தற்கியலாநிலை எனினுமாம்.
(167) |
|
|
|
|
|
168. கொடுத்துண்டு வாழ்தலே
குறையா வாழ்க்கையாம் |
- நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு
கோட்டொடு பன்றியும் வாழும் அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற்
றெல்லாம் வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று.
(பதவுரை)
நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு-நொய்யாற் சமைத்த கூழினை
வயிறார வுண்டு, பிறங்கு இருகோட்டொடு பன்றியும்
வாழும்-விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும்,
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை-ஆதலால் அறத்தினைச் செய்து
வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும்,
மற்றெல்லாம்-அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய
இல்வாழ்க்கை யெல்லாம், வெறும் பேழை
தாழ்க்கொளீஇயற்று-தன்னகத்தொன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப்
பூட்டிவைத்தல் போலாம்.
(குறிப்பு)
பன்றியும்-உம்மை: இழிவு சிறப்பு. ஏ: பிரிநிலை. மற்று: பிறிது என்னும் பொருளது.
கொளீஇ: சொல்லிசையளபெடை.
(168) |
|
|
|
|
|
169. உடலும் பொருளும்
பிறர்க்குதவவே உண்டாயின |
- உப்புக் குவட்டின் மிசையிருந்(து)
உண்ணினும்
இட்டுணாக் காலத்துக் கூராதாம்--தொக்க உடம்பும் பொருளும்
உடையானோர் நன்மை தொடங்காக்கால் என்ன பயன்
(பதவுரை)
உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்-குன்று போன்ற உப்புக்
குவியலின்மீது ஒருவன் அமர்ந்து உணவினை உண்டாலும், இட்டு உணாக்காலத்து
கூராது-அவுணவில் உப்பினை இடாது உண்பானாயின் அதன் சுவை உணவில் பொருந்தாது,
தொக்க உடம்பும் பொருளும் உடையான்-எழுவகைத் தாதுக்களும் கூடிய
உடம்பினையும் செல்வத்தினையும் உடையான், ஓர் நன்மை
தொடங்காக்கால்-ஒப்பற்ற அறத்தினை தொடங்கிச் செய்யானாயின்,
என்ன பயன்-அவற்றால் அவன் ஒரு பயனையும் அடையான்.
(குறிப்பு)
கூர்தல்-மிகுதல், நிறைதல். உண்ணினும்: உம்மை உயர்வு சிறப்புப்பொருளது. ஆம்:
அசைநிலை. (169) |
|
|
|
|
|
170. கிடைத்தவற்றில்
சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக |
- பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள்
ஆற்றுவதொன்(று)
இற்றைநாள் ஈத்துண் டினிதொழுகல்--சுற்றும் இதனில் இலேசுடை
காணோம் அதனை முதனின் றிடைதெரியுங் கால்.
(பதவுரை)
நெஞ்சே! பெற்றநாள் பெற்றநாள்-செல்வத்தினை யடையுந்தோறும்,
பெற்றதனுள்-பெற்ற அச் செல்வத்தில்,
ஆற்றுவது-செய்வதற்குரிய, ஒன்று-அறத்தினை,
இற்றை நாள்-இப்பொழுதே செய்வோமென்று கருதி,
ஈத்து-இரப்பவர்க்குக் கொடுத்து, உண்டு-நீயும்
உண்டு, இனிது ஒழுகல்-இனிமை பயக்கும் நன்னெறிக்கண் நின்று
ஒழுகுவாயாக, அதனை-அவ்வறஞ் செய்தற்குரிய வழியை,
முதல்நின்று இடை தெரியுங்கால்-முதலிலிருந்து முழுவதும் ஆராயுமிடத்து,
சுற்றும்-எவ்விடத்தும், இதனில்-இதைக்
காட்டினும், இலேசு உடை காணோம்-எளியது வேறொன்றும்
இல்லை.
(குறிப்பு)
பெற்றநாள் பெற்றநாள்: அடுக்குத்தொடர்: பன்மைப்பொருளது. ஒழுகல்: அல்லீற்று
வியங்கோள். (170) |
|
|
|
|
|