171 முதல் 180 வரை
|
|
171. முன் கொடுத்தலால் வந்த
செல்வத்தை மேலுங் கொடாதிருப்பது
மூடத்தனம் |
- கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங்
கொடாது
விடுத்துத்தம் வீறழிதல் கண்டார்--கொடுப்பதன்கண் ஆற்ற முடியா
தெனினுந்தாம் ஆற்றுவார் மாற்றார் மறுமைகாண் பார்.
(பதவுரை)
கொடுத்து-தாம் முற்பிறப்பில் செல்வம் பெற்ற காலத்து
வறியோர்க்கு வழங்கியதால், அறம் கொணர்ந்த செல்வம் கொடாது
விடுத்து-(விளைந்த) அறம் கொண்டுவந்து கொடுத்த செல்வத்தினை
வறியோர்க்குக் கொடாது விடுத்து, தம் வீறு அழிதல் கண்டார்-தம்
பெருமை யழிகின்ற பிறரைக் கண்ட பெரியார், கொடுப்பதன்கண் ஆற்ற
முடியாதெனினும்-வறுமையால் இரந்தோர்க்கு வள்ளன்மையோடு மிகுதியும்
வழங்கமுடியாதெனினும், தாம் ஆற்றுவார்-தம்செல்வநிலைக்கேற்றவாறு
கொடுத்துதவுவார், மாற்றார்- இரந்தவர்கட்கு இல்லை என்று கூறார், மறுமை காண்பார் - மறுமையின்பத்தை யடையுமவர்.
(குறிப்பு)
கொணர்தல்-கொண்டுவருதல்; கொணா: பகுதி வீறு-மற்றொன்றற் கில்லாச் சிறப்பு.
கொணர்ந்த+அறம்=கொணர்ந்தறம்: அகரந் தொகுத்தல். 'அறங் கொணர்ந்த செல்வம்' என
பிரித்துக் கூட்டுக. (171)
|
|
|
|
|
|
172. பகுத்துண்டு வாழல்
பருவுடம்பின் பயன் |
- பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு
வாட்செறிந்து
விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம்--ஒட்டிக் கலாய்க்கொடுமை
செய்யாது கண்டதுபாத் துண்டல் புலாற்குடிலா லாய பயன்.
(பதவுரை)
பட்டார்ப்படுத்து-முற்பிறப்பில் அறம் செய்யாது குறைந்த வாழ் நாளை
இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், படாதார்க்கு
வாட்செறிந்து -முன்னை அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு
அவர்க்கு முன் தன் வாளையுறையுள் புதைத்து அவரைக் கொல்லாது,
விட்டு-விடுதலை செய்து, ஒழிவதல்லால் -
செல்வதல்லாமல், அவ்வெங்கூற்றம்-கொடிய யமன், ஒட்டிக்
கலாய்க் கொடுமை செய்யாது-தன்மனம் சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு
துன்பம் செய்யான்; ஆதலால், கண்டது பாத்துண்டல்-ஒருவன் தனக்குக்
கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலால்
குடிலாலாய பயன் - புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம்
பயன்.
(குறிப்பு)
புலால்-இறைச்சி. பாத்து-பகுத்து; பிரித்து.
(172) |
|
|
|
|
|
173. அறிவிலார்க்குரிய
ஐந்தும், அறிவுடையார்க்குரிய ஐந்தும் |
- தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப்
பழுக்காறென்(று)
ஐந்தே கெடுவார்க் கியல்பென்ப--பண்பாளா! ஈதல் அறிதல்
இயற்றுதல் இன்சொற்கற் றாய்தல் அறிவார் தொழில்.
(பதவுரை)
பண்பாளா-நற்குணமுடையாய்!,
தண்டாமம்-(பெரியோர்களைப் பணியாமைக்குஞ் செய்யத் தகுவனவற்றைச்
செய்யாமைக்கும் காரணமாகிய) நன்மையின் நீங்கிய மானமும்,
பொய்-பொய்யே பேசுதலும்,வெகுளி-கோபித்தலும்,
பொச்சாப்பு-மறத்தலும், அழுக்காறு -
பொறாமையும், என்ற ஐந்து-என்று சொல்லப்படுகிற
ஐந்தும்,கெடுவார்க்கு இயல்பு என்ப-அழிகின்றவர்களுக்கு உரிய
குணங்களாகுமெனவும், ஈதல்-இரப்ப வர் குறிப்பறிந்து ஈதலும்,
அறிதல்-நல்லனவற்றை ஆராய்ந்தறிதலும்,
இயற்றுதல்- அறிந்தவற்றைச் சோர்வின்றிச் செய்தலும்,
இன்சொல்-யாவர்மாட்டும் இன்சொல் சொல்லுதலும்,
கற்றுஆய்தல்-அறிவு நூல்களைக் கற்று ஆராய்தலுமாகிய இவ்வைந்தும்,
அறிவார் தொழில் என்ப-அறிவுடையோர் தொழில்களாகுமெனவுங் கூறுவர்
பெரியோர்
(குறிப்பு)
என்றைந்து: அகரந் தொகுத்தல். ஏ: பிரிநிலை. என்ப: பலர்பால் எதிர்கால வினைமுற்று.
ப: பலர்பால் விகுதி. (173) |
|
|
|
|
|
174. துறவிகளை யுண்பிப்பதே தூய
அறமாம் |
- நீத்தாற்றின் நின்ற நிலையினோர்
உண்டக்கால்
ஈத்தாற்றி னாரும் உயப்போவார்--நீத்தாற்றிற் பெற்றிப்
புணையன்னார் பேர்த்துண்ணா விட்டக்கால் எற்றான் உயப்போம்
உலகு.
(பதவுரை) நீத்து ஆற்றின்
நின்ற நிலையினோர் - பற்றுவிட்டுத் துறவற நெறிக்கண்ஒழுகும் பெரியோர்,
உண்டக்கால்-உண்பாராயின், ஈத்து ஆற்றினாரும்
- அவர்களை உண்பித்து அந் நெறியிடை வழுவாமல் செலுத்தினோரும்;
உயப்போவார்-பிறவிப்பிணியின் நீங்கப் பெறுவர், நீத்த
ஆற்றின்-தமது துறவொழுக் கத்தால், புணை அன்ன
பெற்றியார்-ஏனையோரையும் பிறவிக் கடலினின்று கரையேற்றவல்ல, புணைபோலுந்
தன்மையையுற்ற அவர், பேர்த்து-தமது இருக்கையினின்றும் பேர்ந்து,
உண்ணா விட்டக்கால்-உண்ணாதொழியின், உலகு என்றான்
உயப்போம்-இல்லறநெறியிடைப்பட்ட உலகினர் அக் கடலின் றெங்ஙனம்
கரையேறுவர்?
(குறிப்பு)
உண்டக்கால்: கால் ஈற்று வினையெச்சம். உலகு: இடவாகு பெயராய்
உலகினரை யுணர்த்தியது. ஈந்து: ஈத்து; வலித்தல் விகாரம். (174)
|
|
|
|
|
|
175. தீயோரை யுண்பிப்பது
தீங்காம் |
- கொடுத்துய்யப் போமாறு கொள்வான்
குணத்தில்
வடுத்தீர்த்தார் உண்ணிற் பெறலாம்--கொடுத்தாரைக் கொண்டுய்யப்
போவார் குணமுடையார் அல்லாதார் உண்டீத்து வீழ்வார்
கிழக்கு.
(பதவுரை)
குணமுடையார்-துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய குணங்களையுடையார்,
கொடுத்தாரை-தமக்கு உண்டி முதலியன உதவினாரையும், கொண்டு
உய்யப்போவார்-பிறவிப் பிணியின் நீக்கத் தாமும் நீங்குவர்,
அல்லாதார்-அக்குணங்களில்லாதவர்கள்,
உண்டு-பிறர் கொடுப்பதை உண்டு ஈத்து கிழக்கு
வீழ்வார்-தம்மை உண்பித்தாரையும் இழுத்துச்சென்று நரகிடை வீழ்த்துத் தாமும்
வீழ்வர்; (ஆதலால்) கொடுத்து உய்யப்போமாறு கொள்வான்-இல்லற
நெறிக்கண் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடையக் கருதுகின்றவன், குணத்தில்
வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம்-குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை
ஊட்டின் அதனை அடையலாம்.
(குறிப்பு)
கிழக்கு-பள்ளம்; ஈண்டு நரகம். ஈர்த்து என்பது ஈத்து என இடைக் குறைந்து.
(175) |
|
|
|
|
|
- அடங்கினார்க் கீதல் தலையே
அடங்கா(து)
அடங்கினார்க் கீதல் இடையே--நுடங்கிடையாய்! ஏற்பானும் தானும்
அடங்காக்கால் அஃதென்ப தோற்பாவைக் கூத்தினுள்
போர்.
(பதவுரை) நுடங்கு
இடையாய்-துவளுகின்ற இடையினையுடைய பெண்ணே!, அடங்கினார்க்கீதல்
தலை-கொடுப்போர் பணிவுடன் மனம் பொறி வழி போகாது அடங்கினவர்களுக்கு
உண்டி முதலியன உதவுதல் தலையாய அறம், அடங்காது அடங்கினார்க் கீதல்
இடை-அங்ஙனம் அவர் பணியாது அடங்கின வர்களுக்கு ஈவது இடையாய அறம்,
ஏற்பானும் தானும் அடங்காக்கால்-தானும் அடங்காது அடங்காதவனுக்கு
ஈயின், அஃது-அவ் வீகை, கூத்தினுள் தோற்பாவைப் போர்
என்ப-நாடக மேடையில் தோலாற் செய்த பொம்மைகள் ஒன்றோடொன்று
போர்புரிதலை யொக்கும் என்று கூறுவர் பெரியோர்.
(குறிப்பு)
அடங்காதார் அடங்காதார்க் கீதல் கடை என்ப. இது தோற்பாவைப் போர்
எனப்பட்டது. ஏ:முன்னது சிறப்புப் பொருளது; பின்னது தெரிநிலைப் பொருளது. முதலடி ஐஞ்சீர்
பெற்றுள்ளது. (176) |
|
|
|
|
|
177. ஊண் கொடையே உயர்ந்த
கொடையாம் |
- வாழ்நா ளுடம்பு வலிவனப்புச் செல்கதியும்
தூமாண்
நினைவொழுக்கங் காட்சியும்--தாமாண்ட உண்டி கொடுத்தான் கொடுத்தலால்
ஊண்கொடையோடு ஒன்றுங் கொடையொப்ப நில்.
(பதவுரை) மாண்ட உண்டி
கொடுத்தான் - மாட்சிமைப்பட்ட உணவினைக் கொடுத்தவன், வாழ்நாள்
உடம்புவலி வனப்பு செல்கதி தூமாண் நினைவு ஒழுக்கம் காட்சி
கொடுத்தலால்-ஆயுள் உடல்வலிமை அழகு மறுமைப்பயன் தூயசிறந்த எண்ணம் ஒழுக்கம்
நற்காட்சி முதலியவற்றையும் அவ் வுணவு வாயிலாகக் கொடுப்பதால், ஊண்
கொடையொடு ஒப்பது கொடை ஒன்றும் இல்-பசித்தவர்கட்கு உணவு கொடுத்தலோடு
ஒத்த கொடை வேறொன்றும் இல்லை.
(குறிப்பு) 'உண்டி
முதற்றே உணவின் பிண்டம்,' என்ற புறநானூற்றடி யீண்டு நோக்கற்பாலது. மாண்ட-மாண்:
பகுதி. முதலிரண்டடிகளில் வரும் உம் இரண்டும் பெயர்ச் செவ்வெண்- உண்ணப்படுவது ஊண்.
(177) |
|
|
|
|
|
178. கொடுப்பவர் கொடையினும் இரப்பவர் கொடை யேற்றமாம் |
- பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட்
கெல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை- இரப்பவர் இம்மைப் புகழும்
இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்த லால்.
(பதவுரை) இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத்
தலைப்படுத்தலால்-இரப்பவர் இம்மையிற் புகழையும் மறுமையில் இன்பத்தையும்
ஈவோருக்கு உதவுதலால், பரப்பு நீர் வையத்துப்
பல்லுயிர்கட்கெல்லாம்-கடல் சூழ்ந்த உலகில்உள்ள எல்லா மக்களுயிர்கட்கும்,
இரப்பாரின் வள்ளல் களுமில்லை-இரப்பார் போன்ற சிறந்த
வள்ளல்கள் பிறரிலர்.
(குறிப்பு)
இரப்பாரின்: இன் உருபு, ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். (178)
|
|
|
|
|
|
179. செல்வர்கள் செய்ய
வேண்டுவன |
- செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து
செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு--நல்லவாம் தானம் மறவாத
தன்மையரேல் அஃதென்பார் வானகத்து வைப்பதோர்
வைப்பு.
(பதவுரை) செல்வத்தைப்
பெற்றார்-பொருளையடைந்தவர்கள்,
சினங்கடிந்து-வெகுளியினீங்கி,
செவ்வியராய்-காண்டற்கு எளியராய், பல்கிளையும்
வாடாமல்-சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாவண்ணம், பாத்து
உண்டு-அவர்கட்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு,
நல்ல ஆம்-இம்மை வறுமைப் பயன்களை
யடைவிக்கின்ற, தானம் மறவாத தன்மையரேல்-அறத்தினையும் மறவாது
செய்யுந்தன்மையராயின், அஃது வானகத்து வைப்பதோர் வைப்பு
என்பர்-அத்தன்மையைமேலுலகத்தில் தமக்கு உதவுமாறு வைக்கின்ற
ஒப்பற்றசேமநிதி என்று பெரியோர் கூறுவர்.
(குறிப்பு)
வைப்பு-பாதுகாப்பாக வைக்கப்படுவது, பொருள் முதலியன. பாத்து பகுத்து: மரூஉ.
(179) |
|
|
|
|
|
180. தானஞ் செய்வார்க்கு
வானம் வழி திறக்கும் |
- ஒன்றாக நல்ல(து) உயிரோம்பல்
ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல்--என்றிரண்டும் குன்றாப்
புகழோன் வருகென்று மேலுலகம் நின்றது வாயில் திறந்து.
(பதவுரை) ஒன்றாக நல்லது
உயிரோம்பல்-அறங்களுள் தன்னோடொப்ப தின்றித் தானாகச் சிறந்து
உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து
அடங்கினார்க்கு ஈத்து உண்டல்-அதனையடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி
வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற
இரண்டும் குன்றாப் புகழோன்-இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி
யடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது-வருக
என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா
நின்றது.
(குறிப்பு)
என்றிரண்டு: அகரந்தொகுத்தல். வருகென்று: அதுவுமது. குன்றா: ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம். (180) |
|
|
|
|
|