181 முதல் 190 வரை
 
181. தன்னைப் போற்றுவதும் தனிப்பெரும் ஈகையே

சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன்மற்(று)
ஈரப் படினும் அதுவூரான்--ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல.
(பதவுரை) சோற்றூர்திப் பாகன் சோராப் பசிக்குமேல் ஈரப்படினும் அது ஊரான்-உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன் மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான், அதனால் முடிக்கும் கருமம் பல-அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல இருப்பதால், ஆரக் கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்-அவ்வுடலைத் தொழிற்படுத்தற் கேற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

(குறிப்பு) சோர-சோரும்படி: வினையெச்சம். சோர்தல்-தளர்தல். சோற்றூர்தி-உடல். மற்று: அசைநிலை. (181)

   
182. ஈகையைப்போன்று மறுமைக்கேற்றது எதுவுமில்லை

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி--மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடமை
பற்று விடுதல் இலர்.
(பதவுரை) தம் உடைமை உலகத்தில் யாவரும் கொள்ளாதவாறு - தமது பொருளை உலகில் மற்றை யாவரும் கவரா வண்ணம் காக்கவல்லதும், மேவ அரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுது-அப் பொருளை அடைதற்கரிய மறுபிறவியைத் தாம் அடையுங்காலத்தும் அதனைத் தம்பால் அடைவிக்க வல்லதும், எண்ணி ஓர்ந்து-அறமே என்பதனை ஆராய்ந்தறிந்து, பற்றுவிடுதல் இலர்-அப் பொருளின்கண் வைத்த பற்று நீங்காராய் ஈதலால், ஈவாரின் உலோபர் இல்லை-இரப்பவருக்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையார் வேறு இலர்.

(குறிப்பு) மேலரிய: அகரந்தொக்கது. எண்ணி ஓர்ந்து என்ற வினை யெச்சங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆராய்ந்தறிந்து எனப்பொருள்பட்டன. ஈகையின் சிறப்பினை உயர்த்துக் கூறுவான்,“ஈவாரின் உலோபர் இலர்” என்றார். (182)

   
183. உலோபி தடியடிக் குதவுவன்

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்--நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.
(பதவுரை) பட்ட-தம்பால் உள்ள பொருள்களை, ஈண்டும் இட்டக் கடைத்தரார்-நெருங்கிய நட்பினர்களுக்கும் கொடாமலும், பலிமரீஇ வழங்காத பான்மையார்-பிச்சை யேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் உலோப குணமுடையார், நட்ட சுரிகையாற்கானும்-உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், சுலாக்கோலாற்கானும்- தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், ஆபோல் சுரந்து சொரிவது ஆம்-பசு கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும்.

(குறிப்பு) சுரிகையாற்கானும், சுலாக்கோலாற்கானும் என்பதிலுள்ள ‘ஆன்’ இரண்டும் சாரியைகள். மரீஇ: சொல்லிசையளபெடை. (183)

   
184. அறிவுப்பொருளை ஈதலும் பெறுதலும்

கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின்--அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து.
(பதவுரை) கொடுப்பான்பசை சார்ந்து கொள்வான் குணத்தில் கொடுக்கப் படுதல் அமையின்-ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப உபதேசிக்க வல்லவனாதல் அமையின், அடுத்தடுத்துச் சென்று ஆங்கு அடைந்து-பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு, களைவினை என்பரே வென்றார் விளங்க விரித்து-‘பிறவிக்குக் காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணறுமாறு விரித்துக் கூறுவர்.

(குறிப்பு) ‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான் கொள்வான் என்பன ஆசிரியனை யும் மாணக்கனையும் முறையே உணர்த்தி நின்றன. அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். பன்மைப் பொருள் தந்துநின்றது. (184)

   
185. ஈதலும் ஏற்றலும் இல்லெனில், யாதும் இல்லையாம்

கொடுப்பான் வினையல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால்--அடுத்தடுத்து
நல்லவை யாதாங்கொல் நாடி யுரையாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து.
(பதவுரை) கொடுப்பான்-இவ்வுலகத்திலே கொடுக்குங் கொடையாளி, வினை யல்லன்-கொடுக்குஞ் செயலை மேற்கொள்ளாதவனாயும், கொள்வான்-கொள்பவனாகிய இரவலன், அல்லன்-அல்லாமல் யாவரும் செல்வராயும், கொடுக்கப்படும் பொருளும்-வழங்குவதற்குரிய பொருளும், அன்றால்-வழங்குதற்கல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால்; நாப்பண்-சன்றோர்களிடையே, அடுத்தடுத்து-அடிக்கடி(ஏற்படவேண்டிய), நல்லவை-நற்காரியங்கள், யாது ஆம்-எங்ஙனம் ஏற்படும் (என்பதை), நீ நயந்து-நீ உலக நன்மையை விரும்பியவனாய், நாடி-ஆலோசித்து, உரையாய்-சொல்வாயாக.

(குறிப்பு) புரவலரும் இரவலருமின்றி உலகமிருக்குமானால் நல்வினைக்கே இடனின்றி யாவும் நிலைத்திணைப்பொருளாய் நிற்குமென இங்கு நினைப்பூட்டலாயினர். ‘கொடுக்கப்படு பொருளுமன்றால்’ என்ற பாடபேதம் திருவாளர் செல்வக்கேசவராய முதலியார் கண்டதாம். இதனைத் தமிழ்ச் செல்வம் என்ற நீதிநூற்றொகையாலும் காணலாம். (185)

   
186. நன்ஞானத்தின் இயல்பு

அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறியைந்தும் வெல்லும்வாய் போற்றிச்--செறிவினான்
மன்னுயி ரோம்புந் தகைத்தேகாண் நன்ஞானந்
தன்னை உயக்கொள் வது.
(பதவுரை) நன்ஞானம் தன்னை உயக்கொள்வது-நன்ஞானம் தன்னை யுடையவனுக்கு உய்யும் நெறியை யருளுவதாவது, அறிவு மிகப் பெருக்கி-அறிவினை மிகப் பெருகுமாறு செய்து, ஆங்காரம் நீக்கி-ஆங்காரத்தினைப் போக்கி, பொறியைந்தும் வெல்லும் வாய்போற்றி-ஐம்பொறிகளையும் வெல்லும் வழியினை வளர்த்து, செறிவினான்-அடக்கத்தோடு,மன்னுயிர் ஓம்பும் தகைத்து-நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகாவகை காக்கும் தன்மையை உடையனாக்குவதேயாகும்.

(குறிப்பு) காண்: முன்னிலை அசை. வாய்-வழி. ஏ: அசை நிலை. தகைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.(186)

   
187. செயற்கரிய செய்வதே சிறப்பாம்

சோறியாறும் உண்ணாரோ? சொல்லியாருஞ் சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ?--தேறி
உரியதோர் ஞானங்கற் றுள்ளந் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு.
(பதவுரை) சோறு யாறும் உண்ணாரோ, சொல்யாரும் சொல்லாரோ, ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ-சோறு உண்ணுதலையும், அரியன செய்வேனென்று சொல்லுதலையும், ஊர்திகளில் ஏறிச் செல்லுதலையும் உலகத்துள் எல்லாரும் செய்வர், உரியதோர் ஞானங்கற்றுத் தேறி-கற்றற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து, உள்ளந்திருத்தி-மனமாசறுத்து, அரிய துணிவதாம் மாண்பு-செயற்கரியன செய்து வீடுபேற்றினையடையக் கருதுவதே பெருமையாகும்.


(குறிப்பு) சோறு+யாரும்=சோறியாரும், இகரம் குற்றியலிகரம். ஏறு: ஏறப்படுவது. அரிய: அன்சாரியை பெறாத பலவின்பால் வினையாலணையும் பெயர். (187)

   
188. ஒரே பொருள் இடவேறுபாட்டால் உயர்வும் தாழ்வும்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீர் அமுதமாம்--ஓம்பற்(கு)
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு.
(பதவுரை) பாம்பு உண்ட நீரெல்லாம் நஞ்சு ஆம்(அது போல்)-பாம்புகள் பருகிய நீரனைத்தும் நஞ்சாக மாறுதல் போல, கடையாயார் மாட்டு ஞானம் களியாம்-கயவர்கள்கற்கும் ஞானநூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்; பசு உண்ட தெண்ணீர் தேம்படு அமுதம் ஆம் அதுபோல்-பசுக்கள் பருகிய தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல்போல, உயர்ந்தார்கண் ஞானம் ஓம்தற்கு ஒளியாம்-உயர்ந்தோர்கள் கற்கும் ஞான நூல்கள் அவர் மாட்டுப் போற்றுதற்குரிய அறிவினை வளர்க்கும்.

(குறிப்பு) களி-களிப்பைத் தருவது; மயக்கம். தேம்-இனிமை; நல்ல சுவை படுதல்-பொருந்துதல், ''அதுபோல'' என்பதனை ஈரிடத்தும் கூட்டுக.(188)

   
189. ஞான நூல்களின் ஆராய்ச்சி எப்பொழுதும் வேண்டும்

கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவது அருளே--அடுத்தடுத்து
உண்ணப் படுவது நன்ஞானம் எப்பொழுதும்
எண்ணப் படுவது வீடு.
(பதவுரை) நாளும் கெடுக்கப்படுவது தீக்கருமம்-எக்காலத்தும் அழிக்கப்படு வது தீவினையே, கொடுக்கப்படுவது அருளே-பிறர் பால் செய்தற்குரியது அருளே, அடுத்தடுத்து உண்ணப் படுவது நன் ஞானம்-பலமுறையும் ஆராய்ந்து இன்புறுதற் குரியது நல்ல ஞான நூலே, எப்பொழுதும் எண்ணப்படுவது வீடு-எஞ்ஞான்றும் மனத்தால் நினைக்கப்படுவது வீடுபேறேயாம்.

(குறிப்பு) வீடு-விடப்படுவது: முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். (189)

   
190. வீட்டுலகடைய வேண்டுவோர் இயல்பு

இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே--பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்து வார்.
(பதவுரை) இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப் படுத்துவார்-இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருது கின்றவர்கள், இந்தியக் குஞ்சரத்தைச் சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே-இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து (விலகாவகை) ஞான இருங் கயிற்றால் பந்திப்பர்-ஞானமென்னும் வலியகயிற்றால் இறுகக் கட்டுவர்.

(குறிப்பு) இந்தியம்-இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு, தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது. (190)