191 முதல் 200 வரை
 
191. பிறவிப் பிணியினைப் பெயர்க்கும் வழி

உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி--உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடைய னாகுமேல்
பேர்கின்ற தாகும் பிறப்பு.
(பதவுரை) உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக - அறிவை அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி யென்னும் வண்டியில், புணர்ச்சி புலனைந்தும் பூட்டி- ஐம்பொறி களாகிய புரவிகளைந்தையும் சேர்த்துப் பூட்டி, உணர்ந்து அதனை ஊர்கின்ற பாகன்-செலுத்தும் நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், உணர்வு உடையனாகுமேல்-தெளிந்த அறிவினையும் உடையனாயின், பிறப்புப் பேர்கின்றதாகும்-பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.

(குறிப்பு) உணர்ச்சி உசா புலன் இவை முறையே அச்சு வண்டி புரவிகளாக உருவகிக்கப்பட்டுள்ளன. பெயர்தல்-பேர்தல்: மரூஉ. (191)

   
192. பிறவியை யொழித்தலே பேரறிவாம்

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி.
(பதவுரை) எண்ணின்-ஆராயின், தறுகண் தறுகட்பம் - அஞ்சாமையுள் அஞ்சாமையாவது, தன்னைத்தான் நோவல்-தன்கண் குறையுளதாயின் அதனைக் கண்டு வருந்துதலாம், உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல்-நல்ல செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம், அறிவிற்கறிவாவது ஈண்டு மறுபிறப்பு வாராநெறி-அறிவினுள் அறிவாவது இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய நெறியின்கண் ஒழுகுதலாம்.

(குறிப்பு) தறுகண்-அஞ்சாமை, ''தந்திரிக் கழுகு தறுகண் ஆண்மை'' என்ற தொடரில் இப்பொருள் காண்க. தறுகட்டறு கட்பம்-பெருமைக்கெல்லாம் பெருமை என்பாருமுளர். மற்று: அசைநிலை. (192)

   
193. வீட்டுலகினை யுறும்விதம்

உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்றுண்ணும் வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலத்தின் றென்னை?--செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாங்
கூற்றங் குறுகா இடம்
(பதவுரை) உயிர் வித்தி ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை-உயிர்களாகிய விதையை விதைத்து உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக வாழ்க்கையை மெய்யென நம்பி, செயிர் வித்தி - தீமையை விதைத்து, சீலம் தின்று என்னை - நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல் தின்பதால் வரும் பயன் யாது?, செயிரினை மாற்றி- தீவினையை மாற்றி, மறுமை புரிகிற்பின்-மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைச் செய்யின், கூற்றம் குறுகா இடம் காணலாம்-எமன் அணுகாத வீட்டினை அடைந்து இன்புறலாம்.

(குறிப்பு) உயிர், ஊன், இவ்விரண்டும் விதைகளாகவும் விளைபொருளாகவும் கூறப்பட்டுள்ளன. (193)

   
194. நல்லொழுக்கமே வீட்டிற்கு வித்தாம்

இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை--கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர்.
(பதவுரை) உலகத்து இயற்கை இருளே-இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,கற்ற அறிவுடைமை இருள் அகற்றும் கைவிளக்கே- ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை அவ் விருளைப்போக்கும் கைவிளக்கேயாகும்; நெஞ்சத்து அருளுடைமை கைவிளக்கின் நெய்யே-மனத்தின்கண்ணுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய நெய்யேயாகும், நெய் பயந்த பால்போல் ஒழுக்கத்தவரே-நெய்க்குக் காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே, பரிவு இல்லா மேல் உலகம் எய்துபவர்-துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) ஒருவன் கல்வியறிவொளியாலும் நெஞ்சத்தருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலக மெய்துவன் என்பது கருத்து. பயந்த-பய: பகுதி. இஃது ஐந்தடிகளான் வந்த பஃறொடை வெண்பா. (194)

   
195. வீட்டு நெறியின் இயல்பு

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பார்--நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு.
(பதவுரை) ஆர்வமும் செற்றமும் நீக்கி-காமவெகுளிகளை நீக்கி, அடங்குதல்- மனமொழி மெய்களால் தீயன புரியா தடங்குதல், சீர்பெறு வீட்டுநெறி என்பர்-சிறப்புடைய வீடுபேற்றினை யடைவிக்கும் நெறி என்று ஆன்றோர் கூறுவர், (அவ்வழி அடங்காது) நீர் புகப் பட்டிமை புக்கான் - புனல் மூழ்கித் துறவி வேடமட்டுங் கொண்டான், அடங்கினன் என்பது-அடங்கினனாகப் பாவித்திருத்தல், கெட்டார் வழி வியக்குமாறு-தீயூழினையுடையார் அதனை வியந்து பின்பற்றுவதை யொக்கும்.

(குறிப்பு) என்பர்: பலர்பால் எதிர்கால வினைமுற்று. கெட்டார் வழி வியக்கும் ஆறு-தவறிய ஒழுக்கமுடையார் அவ்வொழுக்கினை வியப்பது எனலுமாம். (195)

   
196. அற்றது பற்றெனின் உற்றது வீடு

அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும்--தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு.
(பதவுரை) அருளல் அறம் வளரும்-துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது வளரும், ஆள்வினையால் ஆக்கம்-முயற்சியால் பெருவாழ்வு உளதாம், நாளும் பொருளால் பொருள் வளரும்-எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம், தெருளா விழை வின்பத்தால் காமம் வளரும்-மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம விழைவின்மையால் வீடு வளரும்-ஆசையைவிட வீடுபேறு உளதாம்.

(குறிப்பு) தெருள்-அறிவு. இதன் எதிர்மொழி மருள். தெருளா விழைவு-புணர்ச்சி, இணை விழைச்சு. விழைவு-விருப்பம். (196)

   
197. வீட்டுக்குரிய பொருளை வினவலே செவிப்பயனாம்

பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல--திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி.
(பதவுரை) பண் அமை யாழ் குழல் கீதம் என்றின்னவை நண்ணி நயப்ப செவியல்ல-இசையொடு பொருந்திய யாழ் குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை யடைந்து விரும்பிக் கேட்பன செவிகளாகா, திண்ணிதின் - உறுதியொடு, வெட்டெனச் சொல் நீக்கி-பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாது, விண்ணின்பம் வீட்டொடு கட்டுரை கேட்ப செவி - துறக்க இன்பத்தினையும் வீடுபேற்றையும் பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.

(குறிப்பு) இயற்கையிற் செவிக் கின்பஞ்செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால் மகிழ்வுறும் செவி செவியல்ல என்றபடி. (197)

   
198. அஞ்செவிக் கழகு அறிவுரை கேட்டல்

புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல--நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞான நீக்கி
மறவுரை விட்ட செவி.
(பதவுரை) புண்ணாகப் போழ்ந்து-புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் பழிப்பத் தாம் வளர்ந்து-புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து, வண்ணப்பூண் பெய்வ செவியல்ல-அழகிய அணிகள் அணியப் படுவன செவிகளல்ல, நுண் அறநூல் உரை கேட்டு உணர்ந்து-நுண்ணிய அறநூற்பொருள்களைக் கேட்டாராய்ந்து, அஞ்ஞானம் நீக்கி - அறியாமையைப் போக்கி, மறவுரை விட்ட செவி-பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளா தொழிவன செவிகளாகும்.

(குறிப்பு) நுண்மை நூல்-நுண்ணூல். போழ்தல்-பிளத்தல்; குத்தல். அறம்xமறம்: எதிர்மொழிகள். அம் - அழகு. (198)

   
199. அறநூலைக் கேட்டறிந்தனவே அழகிய செவிகளாம்

கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல--கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி.
(பதவுரை) கண்டவர் காமுறூஉம் காமருசீர் காதில் குண்டலம் பெய்வ செவியல்ல-பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் குண்டலங்க ளணியப்படுவன செவிகள் ஆகா, உலகில் மூன்றும் உணர்ந்து கொண்டு-உலகின்கண் அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்துகொண்டு, அவற்றின் -அவற்றுள், முன்னது-தலைமையான அறநூலை, முட்டு இன்றி-ஒழிவின்றி, சூன்று சுவைப்ப செவி-கேட்டு ஆராய்ந்து இன்புறுதற்குக் காரணமாவன செவிகளாகும்.

(குறிப்பு) சூன்று: சூல் என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். சூலல்-தோண்டுதல்; ஈண்டு ஆராய்தல். ''நுங்கு சூன்றிட்டன்ன'' நாலடி. காமுறூஉம்: இன்னிசை யளபெடை. (199)

   
200. கடவுட் காட்சிகளைக் கண்டனவே கண்களாம்

பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல--மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்.
(பதவுரை) பொருள் எனப் போழ்ந்தகன்று-பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து, பொன் மணி போன்று-அழகிய நீலமணிபோல, எங்கும் இருளறக் காண்பன கண் அல்ல -எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா, மருள் அற-காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு, பொய்க்காட்சிநீக்கி-பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து, பொரு அறு முக்குடையான்-ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது, நற்காட்சி காண்பன கண்-நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.

(குறிப்பு) பொரு-ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம். ''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி. (200)