201 முதல் 210 வரை
 
201.   திருவடிமலர்களைச் சேர்ந்து முகர்வதே மூக்காம்

சாந்தும் புகையும் துருக்கமுங் குங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல--வேந்தின்
அலங்குசிங் காதனத் தண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதா மூக்கு.
 
(பதவுரை)  சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும் மோந்தி்ன்புறுவன மூக்கல்ல-சந்தனம், அகிற்புகை, கத்தூரி, குங்குமப்பூ முதலியவற்றை முகந்து மகிழ்வன மூக்கன்று; ஏந்து இன் அலங்கு சிங்காதனத்து-உயர்ந்து இனிது விளங்குகின்ற சிம்மாதனத்தில் எழுந்தருளியிருக்கும், அண்ணல் அடிக்கீழ் இலங்கு இதழ் மோப்பது மூக்கு ஆம்-அருகனின் திருவடிகளிற் பெய்து விளங்குகின்ற மலர்களை முகந்து இன்புறுவதே மூக்காம்.

(குறிப்பு) அலங்கு-விளங்கு.  இதழ்: சினையாகுபெயர்.    (201)

   
202. திருவடிப்புகழைச் செப்புவதே நாவாம்

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிரதங் கொள்வன நாவல்ல-தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.
 
(பதவுரை)  கைப்பன காப்பு துவர்ப்பு புளி மதுரம் உப்பு இரதங் கொள்வன நா அல்ல-கைப்பு கார்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு உப்பு என்னும் அறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவன நா அல்ல; தப்பாமல் வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும் நின்று துதிப்பது நா ஆம்-தவறாமல் காம வெகுளி மயக்கங்களை வென்ற அருகனின் செய்ய திருவடிகளை எக்காலத்தும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாவாம்.

(குறிப்பு) வேட்டு-வேள் என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகால வினை யெச்சம், செம்மை+அடி=சேவடி.      (202)

   
203.  நன்ஞான முயற்சியில் நடப்பனவே கால்களாம்

கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையிற்
செல்வதூஉஞ் செய்வன காலல்ல-தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்(று)
அறவுரை கேட்பிப்ப கால்.
 
-(பதவுரை)  கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையிற் செல்வதூஉம் செய்வன கால் அல்ல-பிற வுயிரைக் கொல்லவும் பிறருடைமையைத் திருடவும் அல்லாமல் அயலான் மனைவியிடத்தே விழைந்து கூடவும் செல்வதற்கு உதவுவன கால்களாகா, தொல்லைப் பிறவி தணிக்கும் பெருந்தவர்பாற் சென்று அறவுரை கேட்பிப்ப கால்-துன்பத்தை விளைவிக்கும் பிறவிப் பிணியைப் போக்கி யருளும் மிக்க தவத்தினையுடைய முனிவர்பா லடைந்து அவர் கூறும் அறவுரையைக் கேட்குமாறு செய்வனவே கால்களாகும்.

(குறிப்பு) மனை-மனைவி: இடவாகு பெயர்.  கேட்பிப்ப: பலவின்பால் பிறவினை வினையாலணையும் பெயர்.  தொல்லைப் பிறவி-பழைமையாக வரும்பிறப்பு எனவும் கொள்ளலாம்.  கொல்வதூஉம், கள்வதூஉம், செல்வதூஉம், இன்னிசை யளபெடைகள்.   (203)

   
204.  திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைத்து

குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம்* மறைத்தாங்(கு) அருள்பரப்பி-முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை.
 
*பூவுலகில் நற்ற. 
(பதவுரை)  குற்றம் குறைத்து-காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்து, மூவுலகின் அற்றம் குறைவின்றி மறைத்து-மூவுலகத்தினும் உள்ளவர்களது அச்சமனைத்தும் துடைத்து, அருள்பரப்பி-அவர்கட் கருள்செய்து, முற்ற உணர்ந்தானை-இயல்பாகவே எல்லா முணர்ந்த இறைவனை, பாடாத நா அல்ல-பாடாதன நா அல்லவாம், சிறந்தான் தாள் சேராதலை அல்ல-அவன் திருவடிகளை வணங்காதன தலைகளாகா.

(குறிப்பு) பாடாதே, சேரா பலவின்பால் வினையாலணையும் பெயர்கள்.  குற்றம்-மறுதலை மொழி நற்றம்.     (204)

   
205.  உயிருடன் தொடர்ந்து செல்லும் பிணி அறியாமையே

உடன்பிறந்த மூவ ரொருவனைச் சேவித்
திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-இடங்கொண்ட
இல்லத் திருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து.-
 
(பதவுரை)  உடன் பிறந்த மூவர்-உயிர் பிறக்கும்பொழுது உடன் தோன்றிய காம வெகுளி மயக்கங்கள், ஒருவனைச் சேவித் திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-தம்மை வழிபடுமாறு அதனை அடிமைகொண்டு சிலகாலம் அதனோடு உடலிடை உறையாநிற்கும், இடங்கொண்ட இல்லத்து இருவர் ஒழிய-பின்னர் இடமாகக் கொண்ட உடலொடு காம வெகுளிகள் நீங்க, ஒருவனே அவன் பின் சிறந்து செல்லும்-மயக்கமானது அவ்வுயிரை விடாது தொடர்ந்து செல்லும்.

(குறிப்பு) உயிர்களுக்கு அவிச்சை அநாதியே உள்ளதென்பதும் உடலோடு கூடி நின்றவழியே காம வெகுளிகள் தோன்றுமென்பதும் இதனாற் கூறினார்.  ஏ: பிரிநிலை.  (205)

   
206.  சினத்தை வென்றவர் சிவபதம் பெறுவர்

கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை-வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார்.
 
(பதவுரை)  காய்த்து கட்டெனச் சொல்லியக்கால்-தம்மை வெகுண்டு பிறர் வன்சொற்களைச் சொல்லுமிடத்தும், வெட்டென வரக்கண்டால்-கடுகடுத்துத் தம்மைத் தாக்க வருதலைக் காணுமிடத்தும், கல்பிளப்பில் தீயேபோல்-கல்லை உடைக்குங்கால் அதனிடைத் தோன்றுந் தீயேபோல், பொட்டப் பொடிக்கும் குரோதத்தை-விரைந்து தோன்றும் வெகுளியை, காக்கும் திறலாரே-மேலெழாவண்ணம் அடக்கவல்லவர் யாரோ அவரே, மோக்க முடிவு எய்துவர்-முத்தியின்பத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) மோக்கம்-மோட்சம்: வடமொழி ஏ: முன்னது இசைநிறைப் பொருளது: பின்னது பிரிநிலைப் பொருளது.       (206)

   
207.  வீட்டுநெறிகட் குரியன

நல்வினை நாற்கால் விலங்கு நவைசெய்யுங்
கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி.
 
(பதவுரை)  நல் வினை நாற்கால் விலங்கு-நல்வினைகளைச் செய்ய முயல்; நவை செய்யும் கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி அகல்; நல்ல உறுதி நாட்பேர்-சிறந்த ஆன்மலாபத்தைப் புல்(தழுவு); அல்ல மரப்பேர்-ஆன்மலாபமல்லாதவற்றை, முனி (வெறுத்துவிடு); இறுதியில் இன்பநெறி-இவை வீடுபேற்றினுக்குரிய நெறிகளாகும்.

(குறிப்பு) குயக்கலம்-குயவனால் செய்யப்பட்ட மட்பாண்டமாகிய அகற்சிட்டி; அகல்-விலகு; நாட்பேர்-புல்; அனுடநாள்.  மரப்பேர்-முனி; அகத்திமரம்; அன்றிப் பலாசமரமுமாம்.           (207)

   
208.  மறுபிறப்பினை ஒழிக்க வழி

பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்திண்டு வாரா நெறி.
 
(பதவுரை)  அரும்பொருள் பறவை-இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ; இன்சொல் முதிரை-இனிய சொற்களைக் கொள்; உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே); சிறியன நீர்ப்புள்-அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே); புல்லவை குயக்கலம்-அற்பர்களது அவையை அகல் (சேராதே); ஊர்வது பேர்த்து ஈண்டு வாராநெறி-இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.

(குறிப்பு) ஈ-பறக்கும் சிறிய உயிர்களில் ஒன்று; கொடு.  கொள்-காணம் என்னும் தானியம் கொள்வாய்.  மடங்கல்-சிங்கமாகிய ஊன் உண்ணும் விலங்கு (மிருகம்); பின்வாங்காதே.  உள்ளல்-உள்ளான் என்னும் நீர்வாழ் பறவை; நினைக் (208)

   
209.  அழியாப்பேற்றினை யடைவோர் கருதவேண்டியன

உட்கப் படுமெழுத்(து) ஓரிரண் டாவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே-ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு.
 
(பதவுரை) இமிழ் கடல் தண் சேர்ப்ப-ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்றுறையை யுடையவனே!, விழுச் சார்வு வேண்டுபவர்க்கு-அழியா நிலையையடைய விரும்புவோரால், உட்கப்படுமெழுத்து ஓரிரண்டாவதே-அஞ்சத் தகுவது இரண்டெழுத்துக்களாலாகிய வினையே, நட்கப்படமெழுத்தும் அத்துணையே-விரும்பத்தகுவதும் அவ்விரண்டெழுத்துக்களாலாகிய வீடே ஆகும், ஒட்டி இழுக்கா எழுத்து ஒன்று-நட்பாகக்கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.

(குறிப்பு) வேண்டுபவர்க்கு; வேற்றுமை மயக்கம்.  வினை-நல்வினைகளும், தீவினைகளுமாம்.  வீடு-மோட்சம்.  ஆ-சிவஞானம்.     (209)

   
210.  துறவியின் தூய்மையும் பெருமையும்

முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைதம் பேரொழித்து-அப்பால்
பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து)
உறுமவனை எல்லா மொருங்கு.
 
(பதவுரை) முப்பெயர்-மூன்றாகப் பெயர்பெற்ற, மூன்றும்-உலகமூடம், பாசண்டிமூடம், தெய்வமூடம் என்ற மூன்றனையும், உடன் கூட்டி-ஒன்றுசேர்த்து, ஓர் இடத்து-அமைதியான ஒரிடத்திலே அமர்ந்து ஆலோசித்து, தப்பிய பின்றை-அம் மூன்றையு மொழித்து விலக்கிய பிறகு, தம் பேர் ஒழித்து-தம் ஆணவமாகிய பெயரினையும் விலக்கி, அப்பால்-துறவுநிலைக்குப்பின், பெறு பெயரை-பெறக்கடவதாகிய தூயோன் என்ற புகழ்ச் சொல்லையும், காய-வெறுக்க, பெறுபவேல்-மக்கள் பெறுவார்களேயாயின், வையத்து-இவ் வுலகத்திலே, அவனை எல்லாம் ஒருங்கு உறும்-அவ்விதம் பெற்ற அப் பெரியோனை எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்.

(குறிப்பு) துறவிகளுக்குத் தம்பெயர் கூறலும் கூடாவாகலின் பேரொழித்தல் கூறப்பட்டது.  பேர் கூறல் "நான்" எனும் நினைவு தலைப்படுதலாமென்பது சான்றோர் கருத்தாதலின், "ஆணவமாகியபெயர்" எனக் கண்ணழிக்கப்பட்ட தென்க.  இங்ஙனம் உயர்ந்த துறவு நிலைபெறுதல் ஆயிரத்தொருவர்க்கே கூடுமாதலின், "பெறுபவேல்," எனப் பலர்பாற் சொற்கொண்டு தொடங்கி "அவனை" என ஆண்பாற் சொல்லான் முடிக்கலாயினர்.  இது சிறப்புக் கருதி வந்த வழுவமைதி யென்க.     (210)