211 முதல் 220 வரை
 
211. உலகோரால் தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம்

ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றா னெனப்பட்டு வாழ்தலின்-மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பிடுதல் நன்று.
 
(பதவுரை) ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும் தேற்றான் எனப்பட்டு வாழ்தலின்-துன்பங்கள் மிக அறிவில்லாமல் தன்னுயிர்க்காவதோர் உறுதி ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும், மாற்றி மனையின் அகன்று-இல்வாழ்க்கையை விட்டு மனையி னகன்று, மாபெருங் காட்டில் போய்-விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று, நனை இல் உடம்பு இடுதல் நன்று-இனிமை பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.

(குறிப்பு) இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.  இடுதல்-போடுதல், இறக்க   (211)

   
212. உண்மைச் சுற்றத்தார் இவரென்பது

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.
 
(பதவுரை) நல்லறம் எந்தை-நல்லறமே என் தந்தை, நிறை எம்மை-அறிவே என்தாய், நன்குணரும் கல்வி என்தோழன்-நன்மையை யுணர்தற்குக் காரணமாய கல்வியே என்னுடைய தோழன், துணிவு எம்பி-மனத்தெளிவே என்னுடைய தம்பி, பொருளாய இச் சுற்றத்தாரில் எனக்கு-உறுதிபயக்கும் இச்சுற்றத்தார்போல எனக்கு, அல்லாத பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ-இவையில்லாத தந்தை தாய் தோழன் உடன் பிறந்தவர்களாகிய பொய்ச்சுற்றத்தார் உறுதி பயப்பரோ? பயவார்.

(குறிப்பு) என்+அம்மை=எம்மை.  எம்+தம்பி=எம்பி.  ஓ: எதிர்மறை வினாப்பொருளது.  இல்: ஐந்தனுருபு; ஒப்புப் பொருள்.  நிறை-மனவடக்க மெனினுமாம்.       (212)

   
213. பொய்ச்சுற்றத்தார் இவரென்பதும், அவரால் வருந்துயரமும்

மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள்-மிக்க
கடும்பகை யாக உழலும் உயிர்தான்
நெடுந்தடு மாற்றத்துள் நின்று.
 
(பதவுரை) மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை ஒக்க உடன்பிறந்தார் என்ற இவர்கள்-மக்களும் மனைவியரும் மருமக்களும் தாய் தந்தையரும் தன்னுடன் பிறந்தாருமாகிய இவர்கள், மிக்க கடும் பகையாக-இன்பம் பயப்போர் போன்றே மிகக் கொடிய துன்பத்தைச் செய்வதால், உயிர்-உயிரானது, நெடுந் தடுமாற்றத்துள் நின்று உழலும்-மிக்க கலக்கத்துக்குக் காரணமாய உலக வாழ்க்கையிடைப் பட்டு வருந்தும்.

(குறிப்பு) என்ற+இவர்கள்=என்றிவர்கள்; அகரத்தொகுத்தல்.  தான்: அசைநிலை.  ஏ: எண்ணுப்பொருளது.  பகையாக: காரணப்பொருளில் வந்த செயவென் வாய்பாட்டு வினையெச்சம்.          (213)

   
214. உடலின் இன்றியமையாமை

அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம்-அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான்.
 
(பதவுரை) அளற்றகத்து ஆய்தாமரை அம்மலர் ஈன்றாங்கு-சேற்றினிடத்து வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, அளற்றுடம்பின் நன் ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை-தூயதல்லாத உடம்போடு கூடி நின்றவழியே நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன, தன்னால் தலைப்படுதலான்-ஒருவனால் அடையக்கூடுமாதலால், உடம்பு அளறு ஆம் எனினும் நன்றாம்-உடம்பு மலமயமானதேயெனினும் அதனோடு கூடிவாழ்தலே நல்லது.

(குறிப்பு) ஆங்கு: உலம உருபு, எனினும்: உம்மை இழிவு சிறப்பு.  அளறு-கு (214)

   
215. மயக்கவுணர்வால் வரும் துன்பங்கள்

தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற நலிவர் இருநால்வர்-ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்பார் மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து.
 
(பதவுரை) தேற்றம் இல்லாத ஒருவனை-உண்மைப்பொருளின் தன்மை இதுவெனத் தெளியாத ஒருவனை, இரு நால்வர் பின்னின்று ஆற்ற நலிவர்-அப்பிரத்தியாக்கியான குரோதம் முதலிய வெட்டும் பின்பற்றி மிக மெலிவிக்கும், ஐவர் நல்லார் போல ஆற்றவும் பகைவளர்ப்பர்-மெய் முதலிய  பொறிகளைந்தும் இன்பம் பயப்பன போன்று மிக்க துன்பத்தையே வளர்க்கும், மூவரால் அவன்பின் சிறந்து செல்லும்-ஐவளி பித்து என்னும் மூன்றன் மாறுபட்டால் அவன் பின் மரணமடைவான்.

(குறிப்பு) "இரு நால்வர்" என்றது எண்வினையை.  அவை அப்பிரத்தி யாக்கியான குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியான குரோதம்-பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்பன.  "பின் சிறந்து செல்லும்" என்பது மங்கல வழக்கு.  இதனால் உண்மை யுணர்வில்வழி வருவதோரிழுக்குக் கூறப்பட்டது.  ஆங்கு: அசைநிலை.          (215)

   
216. அறிவாளிகட்கே உண்மைப்பொருள் உணர்த்தலாகும்

அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற* விளைவும்-திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க் கல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல் குதர்.

*இருவினையுநின்று. 
(பதவுரை) அருவினையும் ஆற்றுள் வருபயனும்-துறவையும் அத் துறவின்கண் எய்தும் பயனையும், ஆக்கும் இருவினையும் நின்ற விளைவும்-உலகோர் செய்யும் நல்வினை தீவினைகளையும் அவற்றால் எய்த நின்ற இன்ப துன்பங்களையும், திரிவு இன்றிக் கண்டு உணர்ந்தார்க்கல்லது-உள்ளவாறே ஆராய்ந்து அறிய விரும்புவோர்க்கன்றி, காட்டதரும் நாட்டதரும்-உலக நெறியையும், வீட்டு நெறியையும், கொண்டுரைப்பான் நிற்றல் குதர்-உட்கொண்டு சொல்லத் தொடங்குதல் வீணேயாகும்.

(குறிப்பு) அதர்-வழி; நெறி.  உலகப்போக்கு, பல பெருந் துன்பங்கள் மலிந்து நிற்றலின், ?காட்டதர்? எனப்பட்டது.  வீட்டு நெறி; காரண காரியங்களாற் கூறி நாட்டிச் செய்கின்றமையின், ?நாட்டதர்? எனப்பட்டது.    (216)

   
217. அறநெறிச்சாரத்தால் அறிவு விளங்கும்

ஆதியின் தொல்சீர் அறனெறிச் சாரத்தை
ஓதியுங் கேட்டும் உணர்ந்தவர்க்குச்--சோதி
பெருகிய உள்ளத்த ராய்வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது.
  
(பதவுரை) ஆதியின் தொல்சீர் அறநெறிச்சாரத்தை-முதற்கடவுளால் அருகனது பழமையான புகழை விளக்கும் இவ் அறநெறிச்சாரத்தினை, ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு-கற்றும் கேட்டும் அறிந்தவர்கட்கு, கருதியவை கூடல் எளிது-கருதிய காரியங்கள் எளிதில் முடியும், சோதி பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து-அவர் ஞானவொளி பெருகிய மனத்தவராய் இருவகை வினைகளினின்றும் நீங்கப் பெருவதால்.

(குறிப்பு) உணர்ந்தவர், உள்ளத்தவராய், தீர்ந்து கூடல் எளிது என முடிக்கலுமாம் (217)

   
218. அறநெறிச்சாரம் வீட்டினை யடைவிக்கும்

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து--மெய்ந்நூல்
அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்
திறநெறிச் சாரந் தெளிந்து.
(பதவுரை) பொய்ந்நூல் எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் அவற்றின் பொருள் தெரிந்து என்செய்யும்-பொய்ந்நூல் களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும் அவற்றின்பொருளையறிதலால் யாது பயன்? மெய்ந்நூல் அறநெறிச்சாரம் அறிந்தான்-உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும் அறிந்தவன், திறநெறிச்சாரம் தெளிந்து-உறுதி பயக்கும் நெறியின் பயனை அறிந்து அந் நெறியில் நின்று, வீடு எய்தும்-வீடு பேற்றினை அடைவான்.

(குறிப்பு) அறிந்தான்: வினையாலணையும் பெயர். (218)

   
219. சிவனைச் சிந்திக்க அவமேதும் இல்லை

அவன்கொல் இலன்கொலென் றையப் படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை--சிவன்றானும்
நின்றுகால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.
  
(பதவுரை) அவன்கொல் இவன்கொல் என்று ஐயப்படாதே சிவன்கண்ணே சிந்தை செய்ம்மின்கள்-இறைவனாவான் அவனோ இவனோ என்று ஐயமுறாமல் சிவன்பாலே சிந்தையை நிறுத்துங்கள், சிவன்றானும்-அச்சிவனும், நின்று கால் சீக்கும்-எப்பொழுதும் அடைந்தாரது இடரைத் துடைக்கும், நிழல் திகழும்-அருள்மிக்க, பிண்டிக்கீழ்-அசோகின்கீழ் எழுந்தருளியிருக்கும், வென்றி-வெற்றியையுடைய, சீர்-சிறந்த, முக்குடையோன்-மூன்று குடைகளுடை யவனாகிய, வேந்து-அருகனே யாவான்.

(குறிப்பு) நின்று கால் சீக்கும் நிழல் திகழும் எண்பதைப் பிண்டிக்கு அடையாக்கி, எப்பொழுதும் அடைந்தாரது வெம்மையைத் துடைக்கும் குளிர்ச்சி மிக்க என்றுபொருள் கூறினும் பொருந்தும். சிந்தையை நிறுத்துதலாவது இடைவிடாது சிந்தித்தல். கொல்: ஐயப்பொருள்.      (219) 

   
220. இறைவனைப் பாடிப் பெற்ற பரிசில்

முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்*
நிறைவிளக் குப்போ லிருந்து.

*வந்தோற்கு......நீமீ கென்றான்.  
(பதவுரை) முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்றனை-திருமுனைப் பாடியின்கண் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மைவாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனை, பாடிவந்தேற்கு-பாடியடைந்த எனக்கு, தந்த பரிசில்-அவன் அருளிய பரிசிலாவது, வினைப்பாடு கட்டழித்து-மிக்க வினைத் தொடர்பை அழித்து, வீட்டின்பம் நல்கி-முத்தியின்பத்தை யருளினதேயன்றி, நிறை, விளக்குப்போலிருந்து-நந்தாவிளக்கே போன்று விளங்கி, நினைப்பாடி வந்தோர்க்கும்-உன்னைப் பாடியடைந்தவர்கட்கும், நீம் ஈக என்றான்-அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.

(குறிப்பு) சூர்-தெய்வம். நீம்: நீமம் என்பதன் இடைக்குறை. நீமம்-ஒளி. நினைப்பாடி-நினைத்து எனலுமாம். இச்செய்யுள் ஐந்தடியால் வந்த பஃறொடை வெண்பா.               (220)

அறநெறிச்சாரம் மூலமும் விருத்தியுரையும் முற்றும்