(ப-ரை.) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும்-ஒருபொழுதும், இருக்கவேண்டாம்- (நீ) வாளா இராதே. ஒருவரையும்- யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு -தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே. மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே. வஞ்சனைகள் - வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே. போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே. போகவிட்டு - (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி - புறங்கூறி, திரியவேண்டாம்-அலையாதே. வாகு- தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை -குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக. (பொ-ரை.) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும். எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று. பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும். வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம். செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது. ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல். குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக. வாகு: ஆகுபெயர்; மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார். உடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய்; முன்னிலையேவலொருமை வினைமுற்று. நெஞ்சே என்றது விளி; இதனை 'இருக்க வேண்டாம்' என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக்கொள்க. ___________________________________ *`வேண்டாம்'- என்னும் இச்சொல், `வேண்டா' என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது. |