10.மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
    வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்
    தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

(ப-ரை.) மறம்பேசி- வீரமொழி கூறி, திரிவாரோடு (போருக்கு)அலைபவருடன், இணங்கவேண்டாம் - நட்புக்கொள்ளாதே.

வாதாடி- வாதுகூறி, அழிவு வழக்கு - கெடுவழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே.

திறம்பேசி - வலிமைகூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே.

தெய்வத்தை - கடவுளை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.

இறந்தாலும் - (கூறாதிருப்பின்) இறக்கநேரிடுமாயினும், பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம்- சொல்லாதே.

ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே.

குறம்பேசி - குறிசொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய் - சொல்லித் துதிப்பாயாக.

(பொ-ரை.) வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம் பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவரும் ஆம்.

இனி, மறம்பேசி என்பதற்குக் கொலை முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்று உரைத்தலும் பொருந்தும்.

மன்றம் ஏறி அழிவழக்குப் பேசுதல் கூடாது.

அழி வழக்கு - வழக்கல்லாத வழக்கு ; பொய் வழக்கு.

வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம்பேசல்-தன் வலிமை முதலியவற்றைப் புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை.

"வல்லமை பேசேல்" என்பது ஆத்திசூடி.

கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்கவேண்டும் என்க. ஒருநாளும் என்றது இன்பத்திலும், துன்பத்திலும் என்றபடி.

உயிர்நீங்க நேர்ந்தவிடத்தும் பொய் கூறுதல் கூடாது.

உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து.

மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல்.

குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி - சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததனைக் குறித்துக் கூறல். குறப் பெண்டிர் செய்கையை வள்ளிக்கு ஏற்றிக் கூறினார்.(10)