11.அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்
    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
    ஏதேது செய்வானோ ஏமன் றானே

(ப-ரை.) அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கைப்பற்ற வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக்கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ - நீ, கேளாய் - கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த,

மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவுதனை (நீக்குவதற்குஅரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி-வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

(பொ-ரை.) வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இன்றேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள். 

அஞ்சு ஐந்து என்பதன் போலி. கூலியென்னும் பொதுமை பற்றி அது என ஒருமையாற் கூறினார். கூலி என்பதை வண்ணான் என்பதோடும் ஒட்டுக. மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர். ஏது ஏது என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது; குறிப்புச் சொல். ஓ : இரக்கம். யமன் என்பது ஏமன் எனத் திரிந்தது. இங்கு தன், தான், ஏ, என்பன அசைகள்.   (11)