12.கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவுபடுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே. 

பூ தேடி - பூவைத் தேடி, கொண்டைமேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக்கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே.

துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வங்களை இகழவேண்டாம் - இகழாதே.

வெற்றி உள்ள - மேன்மையுடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்கவேண்டாம் - வெறுக்காதே.

மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது.

கூறு - பிளவு; பிரிவு. குடி: குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர்.

கொண்டைமேல் பூ முடித்தல்கூடாது.

பிறர் காணும்படி கொண்டைமேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்தவேண்டும் என்னுங் கருத்துங் கொள்க.

பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது.

தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.

தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது.

துர்ச்சனர் - துட்டர், தீயோர்.

பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது.

கூறு - பெருமை, வெற்றியுமாம்.

"தெய்வ மிகழேல்"என்பது ஆத்திசூடி.

பெரியோரை வெறுத்தல் கூடாது.

வெற்றி - பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல்- இகழ்தல்.

மாறு - பகை : மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும்.   (12)