(ப-ரை.) ஆதரித்து - விரும்பி, பலவகையாய் - பல (நல்ல) வழியால், பொருளும் தேடி - பொருளையும் ஈட்டி, அறுமுகனை - ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளை, அரும்தமிழால் - அரிய தமிழ்மொழியால், பாடவேண்டி - பாடுதலை விரும்பி, ஓதுவித்த - அவ்விறைவன் அறிவித்தருளிய, வாசகத்தால் - வாசகங்களினால், உலகநாதன் - உலகநாதன் என்னும் பெயருடையான், உண்மையாய் - மெய்ம்மையாக, பாடிவைத்த - பாடிய, உலகநீதி - உலகநீதி என்னும் இந்நூலை, காதலித்து - விரும்பி, கற்றோரும் படித்தவர்களும், கேட்டபேரும் - கேட்டவர்களும், நாள்தோறும் - ஒவ்வொருநாளும், கருத்துடன் - நல்லெண்ணத்தோடும், களிப்பினோடு - மகிழ்ச்சியோடும், போதம் - அறிவும், உற்று - உறப்பெற்று, மிகவாழ்ந்து - மிகவும் வாழ்வுடையராய், புகழும் தேடி - புகழையும் பெற்று, பூலோகம் உள்ளளவும் - ஊழிக் காலம் வரையிலும், வாழ்வர் - வாழ்வார்கள். (பொ-ரை.) உலகநாதன் என்னும் புலவன் பல நல்வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ்மொழியால் முருகக் கடவுளைப் பாடவிரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடிவைத்த 'உலக நீதி' என்னும் இந்நூலை விருப்புடன் கற்றவரும், கேட்டவரும் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும், ஞானமும், வாழ்வும், புகழும் உடையவர்களாய் உலகமுள்ளவரையும் வாழ்வார்கள். இப்பாட்டின் முற்பகுதியால் இந்நூலைப் பாடியவர் உலகநாதன் என்னும் பெயரினர் என்பதும், அவர் பல வழியாலும் பொருள் தேடியதுடன் முருகக் கடவுளிடத்தில் அன்புடையவராயிருந்தார் என்பதும் உலகநீதி என்பது இந்நூற்பெயரென்பதும் விளங்குகின்றன. பிற்பகுதியில் இதனைக் கற்றவரும் கேட்டவரும் அடையும் பயன்கள் கூறப்பட்டன. பொருளும் தேடி என்பதிலுள்ள உம்மை கல்வியும் தேடினார் என்பதைக் குறிப்பிடுகின்றது. பொருள் தேடி என்பதற்கு முருகக் கடவுட்குப்பொருள் தேடிவைத்து என்றும், 'ஓதுவித்த' என்பதற்குத் தனக்கு ஆசான் கற்பித்த என்றும் கூறுதலுமாகும். இனி, உலகநாதன் ஓதுவித்த வாசகத்தால் எனக் கொண்டு கூட்டி, உலகநாதன் கேட்டுக்கொண்டபடி என்றுரைத்தலுமாகும்; அப்பொழுது இந்நூலைச் செய்தோன் பெயர் விளங்கவில்லை. கேட்டவர் என்பது உலக வழக்கின்படி கேட்ட பேர் என்றிருக்கிறது. உள்ள அளவும் என்பது உள்ளனவும் என்றாயிற்று. தாம்,ஏ: அசைகள். உலக நீதி முற்றிற்று |