2.நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
    நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
    அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே.

நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை, நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே.

நஞ்சுடனே - விடத்தையுடையபாம்புடனே, ஒருநாளும் - ஒரு பொழுதும், பழக வேண்டாம்- சேர்ந்து பழகாதே.

நல்இணக்கம் - நல்லவர்களுடையநட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம்- நட்புக்கொள்ளாதே.

அஞ்சாமல்- பயப்படாமல், தனி-தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே.

அடுத்தவரை - தன்னிடத்து வந்துஅடைந்தவரை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம்- கெடுக்காதே.

மஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி-வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய்- (நீ)வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனமறியப் பொய் கூறுதல் கூடாது.

"தன்னெஞ் சறிவது பொய்யற்க" என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன்:சாரியை.

உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை - பொய்த்தன்மை.

பாம்பைப்போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று.

நல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது.

நல்லிணக்கம் இல்லார் என்றமையால்; தீயவரின் இணக்கமுடையவரென்று கொள்க.

நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்திசூடியில் `இணக்கமறிந் திணங்கு' என்றதும் காண்க.

துணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம்.

தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல்காத்தல் வேண்டும்.

அடுத்தவர்- வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்க வேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும் என்றும் கொள்க.

மைந்து என்பது மஞ்சு எனப்போலியாயிற்று. (2)