(ப-ரை.) மனம்-உள்ளமானது, போனபோக்கு எல்லாம்- சென்றவாறெல்லாம், போக வேண்டாம்- செல்லாதே. மாற்றானை - பகைவனை, உறவு என்று- உறவினன் என்று, நம்ப வேண்டாம் - தெளியாதே. தனம்தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல்- நுகராமல், புதைக்கவேண்டாம் - மண்ணிற் புதைக்காதே. தருமத்தை - அறஞ் செய்தலை, ஒருநாளும்- ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே. சினம்- வெகுளியை, தேடி - தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும் தேட வேண்டாம்-தேடாதே. சினந்து இருந்தார் - வெகுண்டிருந்தாருடைய, வாசல்வழி -வாயில் வழியாக, சேறல் வேண்டாம்- செல்லாதே. வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித்திரியும், குறவருடை - குறவருடைய (மகவாகிய), வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொ-ரை.) மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும். "எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே" என்பதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்' என்றார். பகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது. பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக்கூடாது என்னலும் ஆம். உறவு: ஆகு பெயர். பொருளைத்தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க. நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று. கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை. சினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது. இல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று. சினத்திருந்தார் எனவும் பாடம். தேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப்பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும், (3) |