(ப-ரை.) குற்றம் ஒன்றும்- (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச்சொல்லி, திரிய வேண்டாம்- அலையாதே. கொலைகளவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு, செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம்- நட்புச்செய்யாதே. கற்றவரை - (நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் - ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் - பழிக்காதே. கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் - சேர்தற்கு நினையாதே. எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு , மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம்-பேசாதே. கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம்- குடியிருக்காதே. மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக. (பொ-ரை.) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது. கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும். கல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும். கற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார். அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு- விரோதம். கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டையொக்கும் (4) |